தெய்வப் பாடல்கள்

30. காளி ஸ்தோத்திரம்

யாதுமாகி நின்றாய்-காளி!-எங்கும் நீதி றைந்தாய்;
தீது நன்மையெல்லாம்-நின்தன்-செயல்க ளன்றி யில்லை.
போதும் இங்கு மாந்தர்-வாழும்-பொய்மை வாழ்க்கை யெல்லாம்
ஆதிசக்தி,தாயே!-என் மீ-தருள் புரிந்து காப்பாய்.

எந்த நாளும் நின்மேல்-தாயே!இசைகள் பாடி வாழ்வேன்;
கந்த னைப்ப யந்தாய்,-தாயே!கருணை வெள்ள மானாய்!
மந்த மாரு தத்தில்-வானில்-மலையி னுச்சி மீதில்,
சிந்தை யெங்கு செல்லும்-அங்குன்-செம்மை தோன்று மன்றே

கர்ம் யோக மொன்றே-உலகில்-காக்கு மென்னும் வேதம்;
தர்ம நீதி சிறிதும்-இங்கே-தவற லென்ப தின்றி,
மர்ம மான பொருளாம்-நின்தன்-மலர டிக்கண் நெஞ்சம்,
செம்மை யுற்று நாளும்-சேர்ந்தே-தேசு கூட வேண்டும்.

என்த னுள்ள வெளியில்-ஞானத்-திரவி யேற வேண்டும்;
குன்ற மொத்த தோளும்-மேருக்-கோல மொத்த வடிவும்,
நன்றை நாடு மனமும்-நீயெந்-நாளு மீதல் வேண்டும்;
ஒன்றை விட்டு மற்றோர்-துயரில்-உழலும் நெஞ்சம் வேண்டா.

வான கத்தி னொளியைக்-கண்டே-மனம கிழ்ச்சி பொங்கி,
யானெ தற்கும் அஞ்சேன்-ஆகி-எந்த நாளும் வாழ்வேன்;
ஞான மொத்த தம்மா!-உவமை-நானு ரைக்கொ ணாதாம்!
வான கத்தி னொளியின்-அழகை-வாழ்த்து மாறி யாதோ?

ஞாயி றென்ற கோளம்-தருமோர்-நல்ல பேரொ ளிக்கே
தேய மீதோர் உவமை-எவரே-தேடி யோத வல்லார்?
வாயி னிக்கும் அம்மா!-அழகாம்-மதியின் இன்ப ஒளியை
நேயமோ டுரைத் தால்-ஆங்கே-நெஞ்சி ளக்க மெய்தும்.

காளி மீது நெஞ்சம்-என்றும்-கலந்து நிற்க வேண்டும்;
வேளை யொத்த விறலும், பாரில்-வேந்த ரேத்து புகழும்,
யாளி யொத்த வலியும்-என்றும்-இன்பம் நிற்கும் மனமும்,
வாழி யீதல் வேண்டும்-அன்னாய்!வாழ்க நின்தன் அருளே!
ADVERTISEMENTS
விண்ணும் கண்ணும் தனியாளும்-எங்கள்
வீரை சகித நினதருளே என்தன்
கண்ணுங் கருதும் எனக்கொண்டு-அன்பு
கசிந்து கசிந்து கசிந்துருகி-நான்
பண்ணும் பூசனை கள்எல்லாம்-வெறும்
பாலை வனத்தில் இட்ட நீரோ?-உனக்
கெண்ணுஞ் சிந்தை யொன்றிலையோ?-அறி
வில்லா தகிலம் அளிப்பாயோ?

நீயே சரணமென்று கூவி-என்தன்
நெஞ்சிற் பேருறுதி கொண்டு-அடி
தாயே!யெனக்குமிக நிதியும்-அறந்
தன்னைக் காகுமொரு திறனும்-தரு
ADVERTISEMENTS
கரணமுந் தனுவும் நினக்கெனத் தந்தேன்,
காளிநீ காத்தருள் செய்யே;
மரணமும் அஞ்சேன்;நோய்களை அஞ்சேன்;
மாரவெம் பேயினை அஞ்சேன்.
இரணமுஞ் சுகமும்,பழியுநற் புகழும்
யாவுமோர் பொருளெனக் கொள்ளேன்;
சரணமென் றுனது பதமலர் பணிந்தேன்
தாயெனைக் காத்தலுன் கடனே.

எண்ணிலாப் பொருளும்,எல்லையில்,வெளியும்
யாவுமா நின்தனைப் போற்றி,
மணிணிலார் வந்து வாழ்த்தினுஞ் செறினும்
மயங்கிலேன்;மனமெனும் பெயர்கொள்
கண்ணிலாப் பேயை எள்ளுவேன்;இனியெக்
காலுமே அமைதியி லிருப்பேன்;
தண்ணிலா முடியிற் புனைந்துநின் றிலகும்
தாயுனைச் சரண்புகுந் தேனால்.

நீசருக் கினிதாந் தனத்தினும், மாதர்
நினைப்பினும்,நெறியிலா மாக்கள்
மாசுறு பொய்ந்நட் பதனிலும், பன்னாள்
மயங்கினேன்;அதையினி மதியேன்;
தேசுறு நீல நிறத்தினாள்,அறிவாய்ச்
சிந்தையிற் குலவிடு திறத்தாள்.
வீசுறுங் காற்றில் நெருப்பினில் வெளியில்
விளங்குவாள் தனைச்சரண் புகுந்தேன்.

ஐயமுந் திகப்புந் தொலைந்தன; ஆங்கே
அச்சமுந் தொலைந்தது;சினமும்
பொய்யுமென் றினைய புன்மைக ளெல்லாம்
போயின; உறுதிநான் கண்டேன்,
வையமிங் கனைத்தும் ஆக்கியும் காத்தும்
மாய்த்துமே மகிழ்ந்திடு தாயைத்
துய்யவெண் ணிறத்தாள் தனைக்கரி யவளைத்
துணையெனத் தொடர்ந்தது கொண்டே.

தவத்தினை எளிதாப் புரிந்தனள், யோகத்
தனிநிலை எளிதெனப் புரிந்தாள்;
சிவத்தினை இனிதாப் புரிந்தனள்,மூடச்
சித்தமும் தெளிவுறச் செய்தாள்;
பவத்தினை வெறுப்ப அருளினள், நானாம்
பான்மை கொன் றவன்மயம் புரிந்தாள்;
அவத்தினைக் களைந்தாள் அறிவென விளைந்தாள்,
அநந்தமா வாழ்கஇங் கவளே!
விண்டு ரைக்க அறிய அரியதாய்
விவிந்த வான வெளியென நின்றனை;
அண்ட கோடிகள் வானில் அமைத்தனை;
அவற்றில் எண்ணற்ற வேகஞ் சமைத்தனை;
மண் டலத்தை அணுவணு வாக்கினால்,
வருவ தெத்தனை அததனை யோசனை
கொண்ட தூரம் அவற்றிடை வைத்தனை,
கோலமே!நினைக் காளியென் றேத்துவேன்.

நாடு காக்கும் அரசன் தனையந்த
நாட்டு ளோர்அர சென்றறி வார்எனில்,
பாடு தண்டைக் குழந்தை தனக்கிதம்
பண்ணும் அப்பன் அவனென் றறிந்திடும்;
கோடி யண்டம் இயகி யளிக்கும்நின்
கோலம் ஏழை குறித்திட லாகுமோ?
நாடி யிச்சிறு பூமியிற் காணுநின்
நலங்கள் ஏத்திட நல்லருள் செய்வே.

பரிதி யென்னும் பொருளிடை யேய்ந்தனை,
பரவும் வெய்ய கதிரெனக் காய்ந்தனை;
கரிய மேகத் திளெனச் செல்லுவை,
மாலு மின்னென வந்துயிர் கொல்லுவை;
சொரிய்ம நுரெனப் பல்லுயிர் போற்றுவை,
சூழும் வெள்ள மெனவுயிர் மாற்றுவை;
விரியும் நீள்கட லென்ன நிறைந்தனை,
வெல்க காளி யென தம்மை வெல்கவே.

வாயு வாகி வெளியை அளந்தனை,
வாழ்வெ தற்கும் உயிர்நிலை ஆயினை,
தேயு வாகி ஒளிருள் செய்குவை,
செத்த வற்றைக் கருப்பொருள் ஆக்குவை;
பாயு மாயிரஞ் சக்திக ளாகியே
பாரி லுள்ள தொழில்கள் இயற்றுவை;
சாயும் பல்லுயிர் கொல்லுனைவ,நிற்பன
தம்மைக் காத்துச் சுகம்பல நல்குவை.

நிலத்தின் கீழ்பல் லுலோகங்கள் ஆயினை,
நீரின் கீழெண் ணிலாநிதி வைத்தனை;
தலத்தின் மீது மலையும் நதிகளும்,
சாருங் காடுஞ் சுனைகளும் ஆயினை;
குலத்தி லெண்ணற்ற பூண்டு பயிரினம்
கூட்டி வைத்துப் பலநலந் துய்த்தனை;
புலத்தை யிட்டிங் குயிர்கள் செய்தாய்,அன்னே!
போற்றி!போற்றி!நினதருள் போற்றியே!

சித்த சாகரஞ் செய்தனை ஆங்கதிற்
செய்த கர்மப் பயனெனப் பல்கினை;
தத்துகின்ற திரையுஞ் சுழிகளும்
தாக்கி யெற்றிடுங் காற்றுமுள் ளோட்டமுஞ்
சுத்த மோனப் பகுதியும் வெண்பனி
சூழ்ந்த பாகமும் சுட்டவெந் நீருமென்று
ஒத்த நீக்கடல் போலப் பலவகை
உள்ள மென்னுங்க கடலில் அமைந்தனை.
ADVERTISEMENTS
வெடிபடு மண்டத் திடிபல தாளம் போட-வெறும்
வெளியி லிரத்தக் கயொடு பூதம் பாட-பாட்டின்
அடிபடு பொருளின் அடிபடு மொலியிற் கூடக்-களித்
தாடுங் காளீ!சாமுண் டீ!கங் காளீ!
அன்னை!அன்னை!ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை.

ஐந்துறு பூதம் சிந்திப் போயொன் றாகப்-பின்னர்
அதுவும் சக்திக் கதியில் மூழ்கிப் போக-அங்கே
முந்துறும் ஒளியிற் சிந்தை நழுவும் வேகத்-தோடே
முடியா நடனம் புரிவாய,அடு தீ சொரிவாய்!
அன்னை!அன்னை!ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை.

பாழாம் வெளியும் பதறிப் போய்மெய் குலையச்-சலனம்
பயிலும் சக்திக் குலமும் வழிகள் கலைய-அங்கே
ஊழாம் பேய்தான்"ஓஹோ ஹோ"வென் றலைய;-வெறித்
துறுமித் திரிவாய்,செருவெங் கூத்தே புரிவாய்!
அன்னை!அன்னை!ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை.


சத்திப் பேய்தான் தலையொடு தலைகள் முட்டிச்-சட்டச்
சடசட சட்டெனுடைபடு தாளங்கொட்டி-அங்கே
எத்திக் கினிலும் நின்விழி யனல் போய் எட்டித்-தானே
எரியுங் கோலங் கண்டே சாகும் காலம்.
அன்னை!அன்னை!ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை.

காலத் தொடுநிர் மூலம் படுமூ வுலகும்-அங்கே
கடவுள் மோனத் தொளியே தனியா யிலகும்-சிவன்
கோலங் கண்டுன் கனல்செய் சினமும் விலகும்-கையைக்
கொஞ்சித் தொடுவாய் ஆனந்தக்கூத் திடுவாய்!
அன்னை!அன்னை!ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை.