தெய்வப் பாடல்கள்

13. மஹாசக்திக்கு விண்ணப்பம்


பந்தத்தை நீக்கிவிடு-அல்லா லுயிர்ப்
பாரத்தைப் போக்கிவிடு;
சிந்தை தெளிவாக்கு-அல்லா லிரைச்
செத்த வுடலாக்கு;
இந்தப் பதர்களையே-நெல்லாமென
எண்ணி இருப்பேனோ?
எந்தப் பொருளிலுமே-உள்ளே நின்று
இயங்கி யிருப்பவளே.
2
ADVERTISEMENTS

உள்ளம் குளிராதோ?-பொய்யாணவ
ஊனம் ஒழியாதோ?
கள்ளம் உருகாதோ?-அம்மா!பக்திக்
கண்ணீர் பெருகாதோ?
வெள் ளைக் கருணையிலே இந்நாய் சிறு
வேட்கை தவிராதோ?
விள்ளற் கரியவளே அனைத்திலும்
மேவி யிருப்பவளே!
3

எண்ணிய முடிதல் வேண்டும்,
நல்லவே எண்ணல் வேண்டும்;
திண்ணிய நெஞ்சம் வேண்டும்,
தெறிந்தநல் லறிவு வேண்டும்;
பண்ணிய பாவ மெல்லாம்
பரிதி முன் பனியே போல,
நண்ணிய நின்முன் இங்கு
நசித்திடல் வேண்டும் அன்னாய்!
1
ADVERTISEMENTS
பல்லவி
பூலோக குமாரி
ஹே அம்ருத நாரி அனுபல்லவி ஆலோக ஸ்ருங்காரி, அம்ருத கலச குச பாரே,
கால பய குடாரி காம வாரி, கனக லதா ரூப கர்வ திமிராரே. சரணம் பாலே ரஸ ஜாலே,பகவதி ப்ரஸீத காலே,
நீல ரத்ன மய நேத்ர விசாலே, நித்ய யுவதி பதநீரஜ மாலே-
லீலா ஜ்வாலா நிர்மித வாணீ,நிரந்தரே நிகில லோகேசாநி
நிருபம ஸீந்தரி நித்ய கல்யாணி, நிஜம் மாம் குரு ஹே மன்மத ராணி.

1
தன்னை மறந்து சகல உலகினையும்
மன்ன நிதங்காக்கும் மஹாசக்தி-அன்னை
அவளே துணையென் றனவரதம் நெஞ்சம்
துவளா திருத்தல் சுகம்
நெஞ்சிற் கவலை நிதமும் பயிராக்கி,
அஞ்சி உயிர்வாழ்தல் அறியாமை;-தஞ்சமென்றே
வையமெலாங் காக்கும் மஹாசக்தி நல்லருளை
ஐயமறப் பற்றல் அறிவு

வையகத்துக் கில்லை,மனமே!நினக்குநலஞ்
செய்யக் கருதியிவை செப்புவேன்-பொய்யில்லை
எல்லாம் புரக்கும் இறைநமையுங் காக்குமென்ற
சொல்லால் அழியும் துயர்.

எண்ணிற் கடங்காமல் எங்கும் பரந்தனவாய்
விண்ணிற் சுடர்கின்ற மீனையெல்லாம் பண்ணிய
சக்தியே நம்மைச் சமைத்ததுகாண். நூறாண்டு
பக்தியுடன் வாழும் படிக்கு

ADVERTISEMENTS
நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும்
நிறைந்த சுடர்மணிப் பூண்,
பஞ்சுக்கு நேர்பல துன்பங்களாம்,இவள்
பார்வைக்கு நேர்பெருந்தீ
வஞ்சனை யின்றிப் பகையின்றிச் சூதின்றி
வையக மாந்தரெல் லாம்,
தஞ்சமென் றேயுரைப் பீர்அவள் பேர்,சக்தி
ஓம்சக்தி, ஓம்சக்தி, ஓம்.

"நல்லதுந் தீயதுஞ் செய்திடும் சக்தி
நலத்தை நமக்கிழைப் பாள்;
அல்லது நீங்கும்"என் றேயுலகேழும்
அறைந்திடு வாய் முர சே!
சொல்லத் தகுந்த பொருளன்று காண்!இங்கு
சொல்லு மவர்தமை யே,
அல்லல் கெடுத்தம ரர்க்கிணை யாக்கிடும்
ஓம்சக்தி, ஓம்சக்தி, ஓம்.

நம்புவ தேவழி யென்ற மறையதன்னை
நாமின்று நம்பிவிட் டோம்
கும்பிட்டெந்நேரமும்"சக்தி"யென் றாலுனைக்
கும்பிடு வேன்,மன மே!
அம்புக்கு தீக்கும் விடத்துக்கும் நோவுக்கும்
அச்ச மில்லாத படி
உம்பர்க்கும் இம்பர்க்கும் வாழ்வு தரும்பதம்
ஓம்சக்தி, ஓம்சக்தி, ஓம்.

பொன்னைப் பொழிந்திடு மின்னை வளர்த்திடு,
போற்றி உனக்கிசைத் தோம்;
அன்னை பராசக்தி என்றுரைத் தோம்;தளை
அத்தனை யுங்களைந் தோம்;
சொன்ன படிக்கு நடந்திடு வாய், மன
மே தொழில் வேறில்லை,காண்;
இன்னும தேயுரைப் போம்,சக்தி ஓம் சக்தி,
ஓம்சக்தி, ஓம்சக்தி, ஓம்.

வெள்ளை மலர்மிசை வேதக் கருப்பொரு
ளாக விளங்கிடு வாய்!
தெள்ளு கலைத்தமிழ் வாணி! நினக்கொரு
விண்ணப்பஞ் செய்திடு வேன்;
எள்ளத் தனைப் பொழு தும்பய னின்றி
இராதென்றன் நாவினி லே
வெள்ள மெனப்பொழி வாய்சக்தி வேல், சக்தி
வேல், சக்தி வேல்,சக்தி வேல்!