தெய்வப் பாடல்கள்

11. காணி நிலம் வேண்டும்


காணி நிலம் வேண்டும்-பராசக்தி
காணி நிலம் வேண்டும்;-அங்கு,
தூணில் அழகியதாய்-நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய்-அந்தக்
காணி நிலத்திடையே-ஓர் மாளிகை
கட்டித் தரவேணும்;-அங்கு,
கேணி யருகினிலே-தென்னைமரம்
கீற்று மிளநீரும்
1
ADVERTISEMENTS

பத்துப் பன்னிரண்டு-தென்னைமரம்
பக்கத்திலே வேணும்;-நல்ல
முத்துச் சுடர்போலே-நிலாவொளி
முன்புவர வேணும்?அங்கு
கத்துங் குயிலோசை-சற்றே வந்து
காதிற்பட வேணும்;-என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே-நன்றாயிளந்
தென்றல்வர வேணும்.
2

பாட்டுக் கலந்திடவே-அங்கேயொரு
பத்தினிப் பெண்வேணும்;-எங்கள்
கூட்டுக் களியினிலே-கவிதைகள்
கொண்டுதர வேணும்;-அந்தக்
காட்டு வெளியினிலே,-அம்மா!நின்தன்
காவலுற வேணும்;என்தன்
பாட்டுத் திறத்தாலே-இவ்வையத்தைப்
பாலித்திட வேணும்.
3
ADVERTISEMENTS

நல்லதோர் வீணைசெய்தே-அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி, சிவசக்தி;-எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்,
வல்லமை தாராயோ,-இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி,சிவசக்தி!-நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?
1

விசையுறு பந்தினைப்போல்-உள்ளம்
வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்,
நசையுறு மனங்கேட்டேன்-நித்தம்
நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்,
தசையினைத் தீசுடினும்-சிவ
சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்,
அசைவறு மதிகேட்டேன்;-இவை
அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?
2
ADVERTISEMENTS

மோகத்தைக் கொன்றுவிடு-அல்லா லென்தன்
மூச்சை நிறுத்திவிடு;
தேகத்தைச் சாய்த்துவிடு-அல்லா லதில்
சிந்தனை மாய்த்துவிடு;
யோகத் திருத்திவிடு-அல்லா லென்தன்
ஊனைச் சிதைத்துவிடு;
ஏகத் திருந்துலகம்-இங்குள்ளன
யாவையும் செய்பவளே!
1