முப்பெரும் பாடல்கள்

2. பாஞ்சாலி சபதம்

சபதச் சருக்கம்

துச்சா தனன்எழுந்தே-அன்னை
துகிலினை மன்றிடை யுரித லுற்றான்.
‘அச்சோ,தேவர்க ளே!’-என்று
அலறி அவ் விதுரனுந் தரைசாய்ந் தான்.
பிச்சே றியவனைப் போல்-அந்தப்
பேயனுந் துகிலினை உரிகையி லே,
உட்சோ தியிற் கலந்தாள்-அன்னை
உலகத்தை மறந்தாள் ஒருமை யுற்றாள்.

“ஹரி,ஹரி,ஹரி என்றாள்;-கண்ணா!
அபய மபயமுனக் கபய மென் றான்.
கரியினுக் கருள்புரிந் தே-அன்று
கயத்திடை முதலையின் உயிர்மடித் தாய்!
கரிய நன்னிற முடையாய்!-அன்று
காளிங்கன் தலைமிசை நடம்புரிந் தாய்!
பெரியதொர் பொருளா வாய்!-கண்ணா!
பேசரும் பழமறைப் பொருளா வாய்!

‘சக்கர மேந்தி நின்றாய்!-கண்ணா!
சாரங்கமென் றொருவில்லைக் கரத்துடையாய்!
அட்சரப் பொருளா வாய்!-கண்ணா!
தொண்டர்கண் ணீர்களைத் துடைத்திடு வாய்!
தக்கவர் தமைக்காப் பாய்,-அந்தச்
சதுர்முக வேதனைப் படைத்துவிட் டாய்.

‘வானத்துள் வானா வாய,-தீ
மண்,நீர்,காற்றினில் அவையா வாய்;
மோனத்துள் வீழ்ந்திருப் பார்-தவ
முனிவர்தம் அகத்தினி லொளிர்தரு வாய்;
கானத்துப் பொய்கையி லே-தனிக்
கமலமென் பூமிசை வீற்றிருப்பாள்,
தானத்து ஸ்ரீ தேவி,-அவள்
தாளிணை கைக்கொண்டு மகிழ்ந்திருப் பாய்!

“ஆதியி லாதி யப்பா!-கண்ணா!
அறிவினைக் கடந்தவிண் ணகப்பொரு ளே!
சோதிக்குஞ் சோதி யப்பா!-என்றன்
சொல்லினைக் கேட்டருள் செய்திடு வாய்!
மாதிக்கு வெளியினி லே-நடு
வானத்திற் பறந்திடும் கருடன் மிசை
சோதிக்குள் ஊர்ந்திடு வாய்,-கண்ணா!
சுடர்ப் பொருளே பே ரடற்பொரு ளே!

“கம்பத்தி லுள்ளா னோ-அடா!
காட்டுன் றன் கடவுளைத் தூணிடத் தே!
வம்புரை செயு மூடா”-என்று
மகன்மிசை யுறுமியத் தூணுதைத் தான்
செம்பவிர் குழலுடை யான்;-அந்தத்
தீயவல் லிரணிய னுடல்பிளந்தாய்!
நம்பிநின் னடிதொழு தேன்;-என்னை
நாணழி யாதிங்கு காத்தருள் வாய்.

‘வாக்கினுக் சுசனை யும்-நின்றன்
வாக்கினிலசைத்திடும் வலிமையி னாய்,
ஆக்கினை கரத்துடை யான்-என்றன்
அன்புடை எந்தை! என் னருட்கடலே!
நோக்கினிற் கதிருடை யாய்!-இங்கு
நூற்றுவர் கொடுமையைத் தவிர்த்தருள் வாய்!
தேக்குநல் வானமு தே!-இங்குச்
சிற்றிடை யாய்ச்சி யில் வெண்ணெ யுண்டாய்!

‘வையகம் காத்திடு வாய்!;-கண்ணா!
மணிவண் ணா,என்றன் மனச் சுடரே!
ஐய,நின் பதமல ரே-சரண்.
ஹரி,ஹரி,ஹரி,ஹரி,ஹரி!’என்றாள்.
பொய்யர்தந் துயரினைப் போல்,-நல்ல
புண்ணிய வாணர்தம் புகழினைப் போல்,
தையலர் கருணையைப் போல்,-கடல்
சலசலத் தெறிந்திடும் அலைகளைப் போல்.

பெண்ணொளி வாழ்த்திடு வார்-அந்தப்
பெருமக்கள் செல்வத்திற் பெருகுதல் போல்,
கண்ண பிரானரு ளால்,-தம்பி
கழற்றிடக் கழற்றிடத் துணிபுதி தாய்
வண்ணப்பொற் சேலைக ளாம்-அவை
வளர்ந்தன,வளர்ந்தன,வளர்ந்தன வே!
எண்ணத்தி லடங்கா வே;-அவை
எத்தனை எத்தனை நிறத்தன வோ!

பொன்னிழை பட்டிழை யும்-பல
புதுப்புதுப் புதுப்புதுப் புதுமைக ளாய்
சென்னியிற் கைகுவித் தாள்-அவள்
செவ்விய மேனியைச் சார்ந்துநின் றே
முன்னிய ஹரிநா மம்-தன்னில்
மூளுநற் பயனுல கறிந்திட வே,
துன்னிய துகிற்கூட் டம்-கண்டு
தொழும்பத் துச்சாதனன் வீழ்ந்துவிட் டான்.

தேவர்கள் பூச்சொரிந் தார்-‘ஓம்
ஜெயஜெய பாரத சக்தி’என்றே.
ஆவலோ டெழுந்து நின்று-மன்னை
ஆரிய வீட்டுமன் கைதொழு தான்.
சாவடி மறவரெல் லாம்-‘ஓம்
சக்திசக்தி சக்தி’என்று கரங்குவித் தார்.
காவலின் நெறிபிழைத் தான்-கொடி
கடியர வுடையவன் தலைகவிழ்ந் தான்.
ADVERTISEMENTS
வேறு

வீமனெழுந் துரைசெய் வான்:-‘இங்கு
விண்ணவ ராணை,பரா சக்தி யாணை;
தாமரைப் பூபினில் வந்தான்-மறை
சாற்றிய தேவன் திருக்கழ லாணை;
மாமகளைக் கொண்ட தேவன் எங்கள்
மரபுக்குத் தேவன் கண்ணன் பதத்தாணை
காமனைக் கண்ணழ லாலே-சுட்டுக்
காலனை வென்றவன் பொன்னடிமீதில்

ஆணையிட் டிஃதுரை செய்வேன்:-இந்த
ஆண்மை யிலாத்துரி யோதனன் றன்னை,
பேணும் பெருங்கன லொத்தாள்-எங்கள்
பெண்டு திரௌபதியைத் தொடைமீதில்
நாணின்றி ‘வந்திரு’என்றான்-இந்த
நாய்மக னாந்துரி யோதனன் றன்னை,
மாணற்ற மன்னர்கண் முன்னே,-என்றன்
வன்மையி னால்யுத்த ரங்கத்தின் கண்ணே,

‘தொடையைப் பிளந் துயிர் மாய்ப்பேன்-தம்பி
சூரத் துச்சாதனன் தன்னையு மாங்கே
கடைபட்ட தோள்களைப் பிய்ப்பேன்;-அங்கு
கள்ளென ஊறு மிரத்தங் குடிப்பேன்,
நடைபெறுங் காண்பி ருலகீர்!-இது
நான்சொல்லும் வார்த்தைஎன் றெண்ணிடல் வேண்டா

தடையற்ற தெய்வத்தின் வார்த்தை-இது
சாதனை செய்க,பராசக்தி!’என்றான்.

பார்த்தனெழுந்துரை செய்வான்:-இந்தப்
பாதகக் கர்ணனைப் போரில் மடிப்பேன்.
தீர்த்தன் பெரும்புகழ் விஷ்ணு-எங்கள்
சீரிய நண்பன் கண்ணன் கழ லாணை;
கார்த்தடங் கண்ணி எந்தேவி -அவள்
கண்ணிலும் காண்டிவ வில்லினும் ஆணை;
போர்த்தொழில் விந்தைகள் காண்பாய்,-ஹே!
பூதலமே!அந்தப் போதினில்’என்றான்.
ADVERTISEMENTS

தேவி திரௌபதி சொல்வாள்-‘ஓம்,
தேவி பராசக்தி ஆணை யுரைத்தேன்;
பாவி துச்சாதனன் செந்நீர்,-அந்தப்
பாழ்த்துரி யோதனன் ஆக்கை இரத்தம்,
மேவி இரண்டுங் கலந்து-குழல்
மீதினிற் பூசி நறுநெய் குளித்தே
சீவிக் குழல்முடிப் பேன் யான்;-இது
செய்யு முன்னே முடியே’னென் றுரைத்தாள்.

ஓமென் றுரைத்தனர் தேவர்;-ஓம்
ஓமென்று சொல்லி உறுமிற்று வானம்.
பூமி யதிர்ச்சி உண்டாச்சு-விண்ணைப்
பூழிப் படுத்திய தாஞ்சுழற் காற்று.
சாமி தருமன் புவிக்கே -என்று
சாட்சி யுரைத்தன பூதங்க ளைந்தும்!
நாமுங் கதையை முடித்தோம்-இந்த
நானில முற்றும் நல் லின்பத்தில் வாழ்க!
ராகம்-சங்கராபரணம் ஏக-தாளம் ஸ்வரம்
“ஸகா-ரிமா-காரீ
பாபாபாபா-மாமாமாமா
ரீகா-ரிகமா-மாமா”

சந்த பேதங்களுக்குத் தக்கபடி மாற்றிக்கொள்க

காதல்,காதல்,காதல்,
காதல் போயிற் காதல் போயிற்
சாதல்,சாதல்,சாதல். (காதல்)

அருளே யாநல் லொளியே;
ஒளிபோ மாயின்,ஒளிபோ மாயின்.
இருளே,இருளே,இருளே, (காதல்)

இன்பம்,இன்பம்,இன்பம்;
இன்பத் திற்கோ ரெல்லை காணில்,
துன்பம்,துன்பம்,துன்பம். (காதல்)

நாதம்,நாதம்,நாதம்;
நாதத் தேயோர் நலிவுண் டாயின்,
சேதம்,சேதம்,சேதம். (காதல்)

தாளம்,தாளம்,தாளம்;
தாளத் திற்கோர் தடையுண் டாயின்,
கூளம்,கூளம்,கூளம். (காதல்)

பண்ணே,பண்ணே,பண்ணே;
பண்ணிற் கேயோர் பழுதுண் டாயின்
மண்ணே,மண்ணே,மண்ணே. (காதல்)

புகழே,புகழே,புகழே;
புகழுக் கேயோர் புரையுண்டாயின்,
இகழே,இகழே,இகழே. (காதல்)

உறுதி,உறுதி,உறுதி;
உறுதிக் கேயோர் உடையுண் டாயின்,
இறுதி,இறுதி,இறுதி. (காதல்)

கூடல்,கூடல்,கூடல்;
கூடிப் பின்னே குமரர் போயின்,
வாடல்,வாடல்,வாடல். (காதல்)

குழலே,குழலே,குழலே;
குழலிற் கீறல் கூடுங் காலை.
விழலே,விழலே,விழலே. (காதல்)
ADVERTISEMENTS
மோகனப் பாட்டு முடிவுபெறப் பாரெங்கும்
ஏக மவுன மியன்றதுகாண்:மற்றதிலோர்
இன்ப வெறியுந் துயரும் இணைந்தனவால்,
பின்புநான் பார்க்கப் பெடைக்குயிலஃ தொன்றல்லால்
மற்றைப் பறவை மறைந்தெங்கோ போகவுமிவ்

ஒற்றைக் குயில் சோக முற்றுத் தலைகுனிந்து
வாடுவது கண்டேன்.மரத்தருகே போய்நின்று
“பேடே!திரவியமே!பேரின்பப் பாட்டுடையாய்!
ஏழுலகும் இன்பத்தீ ஏற்றுந் திறனுடையாய்!
பீழையுனக் கெய்தியதென் பேசாய்!”எனக்கேட்டேன்.

மாயக் குயிலதுதான் மானுடவர் பேச்சினிலோர்
மாயச்சொல் கூற மனந்தீயுற நின்றேன்
“காதலை வேண்டிக் கரைகின்றேன்,இல்லையெனில்
சாதலை வேண்டித் தவிக்கின்றேன்”என்றதுவால்
“வானத்துப் புள்ளெல்லாம் மையலுறப் பாடுகிறாய்
ஞானத்திற் புட்களிலும் நன்கு சிறந்துள்ளாய்
காதலர்நீ யெய்துலாக் காரணந்தான் யா”தென்றேன்.
வேதனையும் நாணும் மிகுந்த குரலினிலே
கானக் குயிலி கதைசொல்ல லாயிற்று:-
“மானக் குலைவும் வருத்தமுநான் பார்க்காமல்,

உண்ம முழுதும் உரைத்திடவேன் மேற்குலத்தீர்!
பெண்மைக் கிரங்கிப் பிழைபொறுத்தல் கேட்கின்றேன்.
அறிவும் வடிவுங் குறுகி,அவனியிலே
றியதொரு புள்ளாய்ச் சிறியேன் பிறந்திடினும்,
தேவர் கருணையிலோ தெய்வச் சினத்தாலோ,
யாவர் மொழியு எளிதுணரும் பேறுபெற்றேன்;
மானுடர் நெஞ்ச வழக்கெல்லாந் தேர்ந்திட்டேன்;
கானப் பறவை கலகலெனும் ஓசையிலும்,
காற்று மரங்களிடைக் காட்டும் இசைகளிலும்,
ஆற்றுநீ ரோசை அருவி யொலியினிலும்,

நீலப் பெருங்கடலேந் நேரமுமே தானிசைக்கும்
ஓலத் திடையே உதிக்கும் இசையினிலும்,
மானுடப் பெண்கள் வளருமொரு காதலினால்
ஊனுருகப் பாடுவதில் ஊறிடுந்தேன் வாரியிலும்,
ஏற்றநீர்ப் பாட்டின் இசையினிலும்,நெல்லிடிக்குங்

கோற்றொடியார் குக்குவெனக் கொஞ்சும் ஒலியினிலும்
சுண்ண மிடிப்பார்தஞ் சுவைமிகுந்த பண்களிலும்
பண்ணை மடவார் பழகுபல பாட்டினிலும்
வட்டமிட்டுப் பெண்கள் வளைக்கரங்கள் தாமொலிக்கக்
கொட்டி யிசைத்கதிடுமோர் கூட்டமுதப் பாட்டினிலும்.

வேயின் குழலோடு வீணைமுதலா மனிதர்
வாயினிலுங் கையாலும் வாசிக்கும் பல்கருவி
நாட்டினிலுங் காட்டினிலும் நாளெல்லாம் நன்றொலிக்கும்
பாட்டினிலும் நெஞ்சைப் பறிகொடுத்தேன் பாவியேன்.
நாவும் மொழிய நடுக்கமுறும் வார்த்தைகளைப்
பாவிமனந் தானிறுகப் பற்றிநிற்ப தென்னையோ?
நெஞ்சத்தே தைக்க நெடுநோக்கு நோக்கிடுவீர்
மஞ்சரே;என்றன் மனநிகழ்ச்சி காணீரோ?
காதலை வேண்டிக் கரைகின்றேன்,இல்லையெனில்,
சாதலை வேண்டித் தவிக்கின்றேன்”என்றதுவே,
சின்னக் குயிலதனைச்செப்பியவப் போழ்தினிலே,
என்னைப் புதியதோர் இன்பச் சுரங்கவர,
உள்ளத் திடையும் உயிரிடையும் ஆங்கந்தப்
பிள்ளைக் குயிலினதோர் பேச்சன்றி வேறற்றேன்;
“காதலோ காதலினிக் காதல் கிடைத்திலதேல்
சாதலோ சாதல்”எனச் சாற்றுமொரு பல்லவியென்
உள்ளமாம் வீணைதனில்,உள்ளவீ டத்தனையும்
விள்ள ஒலிப்பதலால் வேறோர் ஒலியில்லை,
சித்தம் மயங்கித் திகைப்பொடுநான் நின்றிடவும்,
அத்தருணத் தேபறவை யத்தனையுந் தாந்திரும்பிச்

சோலைக் கிளியிலெலாந் தோன்றி யொலித்தனவால்,
நீலக் குயிலும் நெடிதுயிர்த்தாங் கிஃதுரைக்கும்;
“காதல் வழிதான் கரடுமுரடாமென்பர்;
சோதித் திருவிழியீர்!துன்பக் கடலினிலே
நல்லுறுதி கொண்டதோர் நாவாய்போல் வந்திட்டீர்;

அல்லற நும்மோ டளவளாய் நான்பெறுமிவ்
வின்பத் தினுக்கும் இடையூறு மூண்டதுவே;
அன்பொடு நீரிங்கே அடுத்தநான் காநாளில்
வந்தருளல் வேண்டும்.மறவாதீர்,மேற்குலத்தீர்!
சிந்தை பறிகொண்டு செல்கின்றீர் வாரீரேல்,

ஆவி தரியேன்.அறிந்திடுவீர் நான்காநாள்,
பாவியிந்த நான்குநாள் பத்துயுகமாக் கழிப்பேன்;
சென்று வருவீர்,என் சிந்தைகொடு போகினிறீர்,
சென்று வருவீர்”எனத் தேறாப் பெருந்துயரங்
கொண்டு சிறுகுயிலுங்கூறி மறைந்ததுகாண்.