முப்பெரும் பாடல்கள்

2. பாஞ்சாலி சபதம்

(முதற் பாகம்)
ஆங்கதன்பின் மூன்றாம்நாள் இளைஞ ரோடும்
அணியிழையப் பாஞ்சாலர் விளக்கி னோடும்
பாங்கினுறு பரிசனங்கள் பலவி னோடும்
படையினொடும் இசையினொடும் பயண மாகித்
தீங்கதனைக் கருதாத தருமக் கோமான்
திருநகர்விட் டகல்கின்றான் தீயோர் ஊர்க்கே!
நீங்கி அகன் றிடலாகுந் தன்மை உண்டோ.
நெடுங்கரத்து விதிகாட்டும் நெறியில் நின்றே?

நரிவகுத்த வலையினிலே தெரிந்து சிங்கம்
நழுவிவிழும்;சிற்றெறும்பால் யானை சாகும்;
வரிவகுத்த உடற்புலியைப் புழுவுங் கொல்லும்;
வருங்கால முணர்வோரும் மயங்கி நிற்பார்;
கிரிவகுத்த முந்நூலார் புலையர் தம்மைப்
போற்றிடுவார் விதிவகுத்த போழ்தி னன்றே.
ADVERTISEMENTS
மாலைப்போ தாதலும்,மன்னன் சேனை
வழியிடைஓர் பூம்பொழிலின் அமர்ந்த காலை,
சேலைப்போல் விழியாளைக் பார்த்தன் கொண்டு
சென்றாங்கோர் தனியிடத்தே பசும்புல் மேட்டில்
மேலைப்போம் பரியினைத் தொழுது கண்ன்
மெல்லியலும் அவன்தொடைமேல் மெல்லச் சாய்ந்து
பாலைப்போல் மொழிபிதற்ற அவளை நோக்கிப்
பார்த்தனும்அப் பரிதிஎழில் விளக்கு கின்றான்.

‘பாரடியோ!வானத்திற் புதுமை யெல்லாம்,
பண்மொழீ! கணந்தோறும் மாறி மாறி
ஓரடிமற் றோரடியோ டொத்த லின்றி
உவகையுற நவநவமாத் தோன் றுங் காட்சி;
யாரடிஇங் கிவைபோலப் புவியின் மீதே
எண்ணரிய பொருள்கொடுத்தும் இயற்ற வல்லார்!
சீரடியால் பழவேத முனிவர் போற்றுஞ்
செழுஞ்சோதி வனப்பையெலாம் சேரக் காண்பாய்.

‘கணந்தோறும் வியப்புக்கள் புதிய தோன்றும்;
கணந்தோறும் வெவ்வேறு கனவு தோன்றும்;
கணந்தோறும் நவநவமாய் களிப்புத் தோன்றும்;
கருதிடவும் சொல்லிடவும் எளிதோ? ஆங்கே,
கணந்தோறும் ஒருபுதிய வண்ணங் காட்டிக்
காளிபரா சக்திஅருள் களிக்குங் கோலம்
கணந்தோறும் அவள்பிறப்பாள் என்று மேலோர்
கருதுவதன் விளக்கத்தை இங்குக் காண்பாய்.

‘அடிவானத் தேஅங்கு பரிதிக் கோளம்
அளப்பரிய விரைவினொடு சுழலக் காண்பாய்;
இடிவானத் தொளிமின்னல் பத்துக் கோடி
எடுத்தவற்றை ஒன்றுபட உருக்கி வார்த்து,
முடிவான வட்டத்தைக் காளி ஆங்கே,
மொய்குழலாய், சுற்றுவதன் மொய்ம்பு காணாய்!
வடிவான தொன்றாகத் தகடி ரண்டு
வட்டமுறச் சுழலுவதை வளைந்து காண்பாய்.

‘அமைதியோடு பார்த்திடுவாய் மின்னே!பின்னே
அசைவுமோர் மின்செய்த வட்டு;முன்னே,
சமையுமொரு பச்சைநிற வட்டங் காண்பாய்;
தரணியிலிங் கிதுபோலார் பசுமை உண்டோ?
இமைகுவிய மின்வட்டின் வயிரக் கால்கள்
எண்ணில்லா திடையிடையே எழுதல் காண்பாய்;
உமை கவிதை செய்கின்றாள்,எழுந்து நின்றே
உரைத்திடுவோம்,“பல்லாண்டு வாழ்க!”என்றே.

வேறு

‘பார்;சுடர்ப்பரிதியைச் சூழவே படர்முகில்
எத்தனை தீப்பட் டெரிவன!ஓகோ!
என்னடீ!இந்த வன்னத் தியல்புகள்!
எத்தனை வடிவம்! எத்தனை கலவை!
தீயின் குழம்புகள்!-செழும்பொன் காய்ச்சி

விட்ட ஓடைகள்!-வெம்மை தோன்றாமே
எரிந்திடுந் தங்கத் தீவுகள்!-பாரடீ!
நீலப் பொய்கைகள்!-அடடா,நீல
வன்ன மொன்றில் எத்தனை வகையடீ!
எத்தனை செம்மை!பசுமையுங் கருமையும்

எத்தனை!-கரிய பெரும்பெரும் பூதம்!
நீலப் பொய்கையின் மிதந்திடுந் தங்கத்
தோணிகள் சுடரொளிப் பொற்கரை யிட்ட
கருஞ்சிக ரங்கள்!-காண்டி,ஆங்கு
தங்கத் திமிங்கிலம் தாம்பல மிதக்கும்

இருட் கடல்!-ஆஹா!எங்கு நோக்கிடினும்
ஒளித்திரள்! ஒளித்திரள்! வன்னக் களஞ்சியம்!’

வேறு

‘செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினை தேர்கின்றோம்-அவன்
எங்க ளறிவினைத் தூண்டி நடத்துக’ என்பதோர்-நல்ல
மங்களம் வாய்ந்த சுருதி மொழிகொண்டு வாழ்த்தியே-இவர்
தங்க ளினங்க ளிருந்த பொழி லிடைச்சார்ந்தனர்-பின்னர்
அங்கவ் விரவு கழிந்திட,வைகறை யாதலும் -மன்னர்
பொங்கு கடலொத்த சேனைக ளோடு புறப்பட்டே,-வழி
எங்குந் திகழும் இயற்கையின் காட்சியில் இன்புற்றே,-கதிர்

மங்கிடு முன்னொளி மங்கு நகரிடை வந்துற்றார்.

துரியோதனன் சூழ்ச்சிச் சருக்கம் முற்றும்
தெளிவுறவே அறிந்திடுதல்;தெளிவுதர
மொழிந்திடுதல்;சிந்திப் பார்க்கே
களிவளர உள்ளத்தில் ஆநந்தக் கனவுபல
காட்டல்,கண்ணீர்த்
துளிவரஉள் ளுருக்குதல்,இங் கியெல்லாம்
நீ அருளும் தொழில்க ளன்றோ?
ஒளிவளருந் தமிழ்வாணீ! அடியனேற்
கிவையனைத்தையும் உதவு வாயே.
ADVERTISEMENTS
அத்தின மாநக ரத்தினில் வந்தனர்
ஆரியப் பாண்டவர் என் றது கேட்டலும்,
தத்தி எழுந்தன எண்ணருங் கூட்டங்கள்;
சந்திகள்,வீதிகள்,சாலைகள்,சோலைகள்;
எத்திசை நோக்கினும் மாந்தர் நிறைந்தனர்;
இத்தனை மக்களும் எங்கண் இருந்தனர்
இத்தின மட்டும் எனவியப் பெய்துற
எள்ளும் விழற்கிட மின்றி யிருந்தார்.

மந்திர கீதம் முழுங்கினர் பார்ப்பனர்;
வன்தடந் தோள்கொட்டி ஆர்த்தனர் மன்னவர்;
வெந்திறல் யானையும் தேரும் குதிரையும்
வீதிகள் தோறும் ஒலிமிகச் செய்தன;
வந்தியர் பாடினர்,வேசையர்.ஆடினர்;
வாத்தியங் கோடி வகையின் ஒலித்தன;
செந்திரு வாழும் நகரினில் அத்தினஞ்
சேர்ந்த ஒலியைச் சிறிதென லாமோ!
வாலிகன் தந்ததொர் தேர்மிசை ஏறி,அம்
மன்னன் யுதிட்டிரன் தம்பியர் மாதர்கள்
நாலிய லாம்படை யோடு நகரிடை
நல்ல பவனி எழுந் பொழுதினில்,
சேலியல் கண்ணியர் பொன்விளக் கேந்திடச்
சீரிய பார்ப்பணர் கும்பங்கள் ஏந்திடச்
கோலிய பூமழை பெய்திடத் தோரணம்
கொஞ்ச நகரெழில் கூடிய தன்றே.

வேறு

மன்னவன் கோயிலிலே-இவர்
வந்து புகுந்தனர் வரிசை-யொடே
பொன்ன ரங் கினிலிருந் தான்-தண்ணில்
புலவனைப் போய்நின்று போற்றியபின்
அன்னவன் ஆசிகொண் டே,-உயர்
ஆரிய வீட்டுமன் அடி வணங்கி,
வின்னய முணர் கிருபன்-புகழ்
வீரத் துரோணன் அங்கவன் தல்வன்

மற்றுள பெரியோர் கள்-தமை
வாழ்த்தி உள்ளன்பொடு வணங்கிநின் றார்;
கொற்றமிக் குயர்கன் னன்-பணிக்
கொடியோன் இளையவர் சகுனியோ டும்
பொற்றடந் தோள் சருவப்-பெரும்
புகழினர் தழுவினர்,மகிழ்ச்சிகொண் டார்;
நற்றவக் காந்தா ரி-முதல்
நாரியர் தமைமுறைப் படிதொழு தார்.

குந்தியும் இளங்கொடி யும்-வந்து
கூடிய மாதர் தம்மொடு குலவி
முந்திய கதைகள் சொல்லி-அன்ஹப
மூண்டுரை யாடிப்பின் பிரிந்து விட்டார்;

அந்தியும் புகுந்தது வால்;-பின்னர்
ஐவரும் உடல்வலித் தொழில் முடித்தே
சந்தியுஞ் சபங்களுஞ் செய்-தங்கு
சாருமின் னுணவமு துண்டதன் பின்.

சந்தன மலர்புனைந் தே,-இளந்
தையலர் வீணைகொண் டுயிருருக்கி
விந்தைகொள் பாட்டிசைப் ப,-அதை
விழைவொடு கேட்டனர் துயில்புரிந் தார்;
வந்ததொர் துன்பத் தினை-அங்கு
மடித்திட லன்றிப் பின்வருந் துயர்க்கே
சிந்தனை உழல்வா ரோ?-உளச்
சிதைவின்மை ஆரியர் சிறப்பன் றோ?
பாணர்கள் துதிகூ ற-இளம்
பகலவன் எழுமுனர்த் துயிலெழுந் தார்;
தோணலத் திணையில் லார்-தெய்வந்
துதித்தனர்;செய்யபொற் பட்டணிந்து
பூணணிந் தாயுதங் கள்-பல
பூண்டுபொற் சபையிடைப் போந்தன ரால்;
நாண மில் கவுரவ ரும்-தங்கள்
நாயக னொடுமங்கு வீற்றிருந் தார்.

வீட்டுமன் தானிருந் தான்;-அற
விதுரனும்,பார்ப்பனக் குரவர்களும்,
நாட்டுமந் திரிமா ரும்,பிற
நாட்டினர் பலபல மன்னர்க ளும்,
கேட்டினுக் கிரையா வான்-மதி
கெடுந்துரி யோதனன் கிளையின ரும்,
மாட்டுறு நண்பர்களும்-அந்த
வான்பெருஞ் சபையிடை வணங்கிநின் றார்.
ADVERTISEMENTS
புன்தொழிற் கவறத னில்-இந்தப்
புவிமிசை இணையிலை எனும்புக ழான்
நன்றறி யாச்சகு னி,-சபை
நடுவினில் ஏறெனக் களித்திருந் தான்;
வென்றிகொள் பெருஞ்சூ தர்-அந்த
விவிஞ்சதி சித்திர சேனனு டன்
குன்றுசத் தியவிர தன்-இதழ்
கூர்புரு மித்திரன் சய னென்பார்.

சாலவும் அஞ்சு தரும்-கெட்ட
சதிக்குணத் தார்பல மாயம் வல்லோர்
கோலநற் சபைதனி லே-வந்து
கொக்கரித் தார்ப்பரித் திருந்தனரால்,
மேலவர் தமை வணங்கி-அந்த
வெந்திறற் பாண்டவர் இளைஞர் தமை
ஆல முற்றிடத் தழுவிச்-செம்பொன்
ஆதனத் தமர்ந்தவப் பொழுதினி லே.

சொல்லுகின் றான்சகு னி:-‘அறத்
தோன்றல்!உன் வரவினைக் காத்துளர் காண்
மல்லுறு தடந் தோளார் இந்த
மன்னவ ரனைவரும் நெடும்பொழு தா;
வில்லுறு போர்த்தொழி லாற்-புவி
வென்றுதங் குலத்தினை மேம்படுத் தீர்!
வல்லுறு சூதெனும் போர்-தனில்
வலிமைகள் பார்க்குதும் வருதி’என்றான்