தேசீய கீதங்கள்

6. பிறநாடுகள்

53.கரும்புத் தோட்டத்திலே ஹரிகாம்போதி ஜன்யம்
பல்லவி
ADVERTISEMENTS
கரும்புத் தோட்டத்திலே-ஆ!
கரும்புத் தோட்டத்திலே
சரணங்கள்
ADVERTISEMENTS

கரும்புத் தோட்டத்திலே-அவர்
கால்களும் கைகளும் சோர்ந்து விழும்படி
வருந்து கின்றனரே!-ஹிந்து
மாதர்தம் நெஞ்சு கொதித்துக் கொதித்துமெய்
சுருங்கு கின்றனரே!-அவர்
துன்பத்தை நீக்க வழியில்லையோ?ஒரு
மருந்திதற் கிலையோ!-செக்கு
மாடுகள் போலுழைத் தேங்குகின்றார், அந்தக்
(கரும்புத் தோட்டத்திலே) 1

பெண்ணென்று சொல்லிடிலோ-ஒரு
பேயும் இரங்கும் என்பார்; தெய்வமே!நினது
எண்ணம் இரங்காதோ?-அந்த
ஏழைகள் அங்கு சொரியும் கண்ணீர்வெறும்
மண்ணிற் கலந்திடுமோ?-தெற்கு
மாகட லுக்கு நடுவினிலே,அங்கோர்
கண்ணற்ற தீவினிலே-தனிக்
காட்டினிற் பெண்கள் புழுங்குகின்றார்-அந்தக்
(கரும்புத் தோட்டத்திலே)2
ADVERTISEMENTS

நாட்டை நினைப்பாரோ?-எந்த
நாளினிப் போயதைக் காண்பதென்றே அன்னை
வீட்டை நினைப்பாரோ?-அவர்
விம்மி விம்மி விம்மி விம்மியழுங் குரல்
கேட்டிருப்பாய் காற்றே!-துன்பக்
கேணியிலே எங்கள் பெண்க ளழுதசொல்
மீட்டும் உரையாயோ?-அவர்
விம்மி யழவுந் திறங்கெட்டுப் போயினர்
(கரும்புத் தோட்டத்திலே) 3