தேசீய கீதங்கள்

1. பாரத நாடு

1. வந்தே மாதரம் தாயுமானவர் ஆனந்தக் களிப்பு மெட்டு
ராகம்-நாதநாமக்கிரியை

பல்லவி
தாளம்-ஆதி
வந்தே மாதரம் என்போம்-எங்கள்
மாநிலத் தாயை வணங்குதல் என்போம்.
(வந்தே)
சரணங்கள்
ஜாதி மதங்களைப் பாரோம்- உயர்
ஜன்மம்இத் தேசத்தில் எய்தின ராயின்
வேதிய ராயினும் ஒன்றே- அன்றி
வேறு குலத்தின ராயினும் ஒன்றே
(வந்தே)

ஈனப் பறையர்க ளேனும்-அவர்
எம்முடன் வாழ்ந்திங் கிருப்பவர் அன்றோ?
சீனத்த ராய்விடு வாரோ?-பிற
தேசத்தர் போற்பல தீங்கிழைப் பாரோ?
(வந்தே)

ஆயிரம் உண்டிங்கு ஜாதி-எனில்
அன்னியர் வந்து புகல்என்ன நீதி?-ஓர்
தாயின் வயிற்றில் பிறந்தோர்-தம்முள்
சண்டைசெய்தாலும் சகோதரர் அன்றோ?
(வந்தே)