முப்பெரும் பாடல்கள்

2. பாஞ்சாலி சபதம்

(இரண்டாம் பாகம்) அடிமைச் சருக்கம் 39. பராசக்தி வணக்கம்
ஆங்கொரு கல்லை வாயிலிற் படிஎன்
றமைத்தனம் சிற்பி,மற் றொன்றை
ஓங்கிய பெருமைக் கடவுளின் வடிவென்
றுயர்த்தினான்;உலகினோர் தாய்நீ!
யாங்க ணே,எவரை,எங்ஙனஞ் சமைத்தற்
கெண்ணமோ,அங்ஙனம் சமைப்பாய்.
ஈங்குனைச் சரணென் றெய்தினேன்;என்னை
இருங்கலைப் புலவனாக் குதியே.
ADVERTISEMENTS
இடையின்றி அணுக்களெலாம் சுழலுமென
இயல் நூலார் இசைத்தல் கேட்டோம்;
இடையின்றிக் கதிர்களெலாஞ் சுழலுமென
வானூலார் இயம்பு கின்றார்.
இடையின்றித் தொழில்புரிதல் உலகி னிடைப்
பொருட்கெல்லாம் இயற்கை யாயின்
இடையின்றிக் கலைமகளே!நினதருளில்
எனதுள்ளம் இயங்கொ ணாதோ!
மறுமொழி சொல்லுதல் வேறு
அறிவு சான்ற விதுரன்சொற் கேட்டான்
அழலு நெஞ்சின் அரவை உயர்த்தான்,
நெறிஉ ரைத்திடும் மேலவர் வாய்ச்சொல்
நீச ரானவர் கொள்ளுவ துண்டோ?
பொறி பறக்க விழிக ளிரண்டும்
புருவ மாங்குத் துடிக்கச் சினத்தின்
வெறித லைக்க,மதிம ழுங்கிப் போய்
வேந்தன் இஃது விளம்புத லுற்றான்.

வேறு

‘நன்றி கெட்ட விதுரா!-சிறிதும் நாண மற்ற விதுரா!
தின்ற உப்பி னுக்கே-நாசந் தேடுகின்ற விதுரா!
அன்று தொட்டு நீயும்-எங்கள் அழிவு நாடுகின்றாய்;
மன்றி லுன்னை வைத்தான்-எந்தை மதியை என் னுரைப்பேன்!

‘ஐவருக்கு நெஞ்சம்-எங்கள் அரண்மனைக்கு வயிறும்,
தெய்வமன் றுனக்கே-விதுரா!செய்து விட்டதேயோ?
மெய்வகுப் பவன்போல்,-பொதுவாம் விதி உணர்ந்தவன்போல்,
ஐவர் பக்கம் நின்றே,-எங்கள் அழிவு தேடுகின்றாய்.

‘மன்னர் சூழ்ந்த சபையில்-எங்கள் ம்ற்றலார் களோடு
முன்னர் நாங்கள் பணயம்-வைத்தே முறையில் வெல்லுகின்றோம்,
என்ன குற்றங் கண்டாய்?-தருமம் யார்க் குரைக்க வந்தாய்?
கன்னம் வைக்கி றோமோ?-பல்லைக் காட்டி ஏய்க்கிறோமோ?

‘பொய்யுரைத்து வாழ்வார்,-இதழிற் புகழுரைத்து வாழ்வார்.
வைய மீதி லுள்ளார்,-அவர்தம் வழியில் வந்ததுண்டோ?
செய்யொணாத செய்வார்- தம்மைச் சீருறுத்த நாடி,
ஐயா! நீ எழுந்தால்-அறிஞர் அவல மெய்தி டாரோ?

‘அன்பிலாத பெண்ணுக்கு-இதமே ஆயிரங்கள் செய்தும்,
முன்பின் எண்ணு வாளோ?-தருணம் மூண்ட போது கழிவாள்;
வன்பு ரைத்தல் வேண்டா,-எங்கள் வலி பொறுத்தல் வேண்டா,
இன்ப மெங்க ணுண்டோ,-அங்கே ஏகி’ டென் றுரைத்தான்.
ADVERTISEMENTS
வேறு

நன்றாகும் நெறியறியா மன்னன்,அங்கு
நான்குதிசை அரசர்சபை நடுவே,தன்னைக்
கொன்றாலும் ஒப்பாகா வடுச்சொற் கூறிக்
குமைவதனில் அணுவளவுங் குழப்ப மெய்தான்;
‘சென்றாலும் இருந்தாலும் இனிஎன் னேடா?
செய்கைநெறி அறியாத சிறியாய்,நின்னைப்
பொன்றாத வழிசெய்ய முயன்று பார்த்தேன்;
பொல்லாத விதிஎன்னைப் புறங்கண் டானால்!

‘கடுஞ்சொற்கள் பொறுக்காத மென்மைக் காதும்
கருங்கல்லில் விடந்தோய்ந்த நெஞ்சுங் கொண்டோர்
படுஞ்செய்தி தோன்றுமுனே படுவர் கண்டாய்.
“பால்போலும் தேன்போலும் இனிய சொல்லோர்
இடும்பைக்கு வழிசொல்வார்;நன்மை காண்பார்
இளகுமொழி கூறார்”என நினைத்தே தானும்,
நெடும்பச்சை மரம்போலே வளர்ந்து விட்டாய்-
நினக்கெவரும் கூறியவ ரில்லை கொல்லோ?

‘நலங்கூறி இடித்துரைப்பார் மொழிகள் கேளா
நரபதி! நின் அவைக்களத்தே அமைச்ச ராக
வலங்கொண்ட மன்னரொடு பார்ப்பார் தம்மை
வைத்திருத்தல் சிறிதேனுந் தகாது கண்டாய்.
சிலங்கைப் பொற் கச்சணிந்த வேசை மாதர்
சிறுமைக்குத் தலைகொடுத்த தொண்டர்,மற்றுங்
குலங்கெட்ட புலைநீசர்,முடவர்,பித்தர்
கோமகனே! நினக்குரிய அச்சர் கண்டாய்!

‘சென்றாலும் நின்றாலும் இனிஎன் னேடா?
செப்புவன நினக்கெனநான் செப்பி னேனோ?
மன்றார நிறைந்திருக்கும் மன்னர்,பார்ப்பார்
மதியில்லா மூத்தோனும் அறியச் சொன்னேன்.
இன்றோடு முடிகுவனதோ? வருவ தெல்லாம்
யானறிவேன்,வீட்டுமனும் அறிவான் கண்டாய்.
வென்றான் உள் ஆசையெலாம் யோகி யாகி
வீட்டுமனும் ஒன்றுரையா திருக்கின் றாரேன.

‘விதிவழிநன் குணர்ந்திடினும்,பேதை யேன்யான்,
வெள்ளைமன முடைமையினால்,மகனே,நின்றன்
சதிவழியைத் தடுத்துரைசள் சொல்லப் போந்தேன்
சரி,சரி இங் கேதுரைத்தும் பயனொன் றில்லை,
மதிவழியே செல்லு கென விதுரன் கூறி
வாய்மூடித் தலைகுனிந்தே இருதக்கைகொண்டான்.
பதிவுறுவோம் புவியிலெனக் கலிம கிழ்ந்தான்,
பாரதப்போர் வருமென்று தேவ ரார்த்தார்.
வேறு

காயு ருட்ட லானார்-சூதுக் களி தொடங்க லானார்.
மாய முள்ள சகுனி-பின்னும் வார்த்தை சொல்லுகின்றான்:
‘நீ அழித்த தெல்லாம்-பின்னும் நின் னிடத்து மீளும்,
ஓய் வடைந்திடாதே-தருமா!ஊக்க மெய்து’கென்றான்.

கோயிற் பூசை செய்வோர்-சிலையைக் கொண்டு விற்றல் போலும்,
வாயில் காத்து நிற்போன்-வீட்டை வைத் திழத்தல் போலும்
ஆயிரங்க ளான-நீதி யவை உணர்ந்த தருமன்
தேயம் வைத் திழந்தான்;-சிச்சீ! சிறியர் செய்கை செய்தான்.

‘நாட்டு மாந்த ரெல்லாம்-தம்போல் நரர்க ளென்று கருதார்;
ஆட்டு மந்தை யா மென்’-றுலகை அரச ரண்ணி விட்டார்.
காட்டு முண்மை நூல்கள்-பல தாங் காட்டினார்களேனும்.
நாட்டு ராஜ நீதி மனிதர் நன்கு செய்யவில்லை

ஓரஞ் செய்திடாமே தருமத் துறுதி கொன் றிடாமே,
சோரஞ் செய்திடாமே-பிறரைத் துயரில் வீழ்த் திடாமே
ஊரை யாளு முறைமை-உலகில் ஓர் புறத்து மில்லை
சார மற்ற வார்ததை!-மேலே சரிதை சொல்லுகின்றோம்.
ADVERTISEMENTS
வேறு

‘செல்வம்முற் றிழந்த விட்டாய்!-தருமா
தேசமுங் குடிகளுஞ் சேர்த்திழந் தாய்.
பல்வளம் நிறை புவிக்கே-தருமன்
பார்த்திவன் என்ப தினிப்பழங் கதைகாண்!
சொல்வதோர் பொருள் கேளாய்;-இன்னுஞ்
சூழ்ந்தொரு பணயம்வைத் தாடுதி யேல்,
வெல்வதற் கிடமுண் டாம்;ஆங்கவ்
வெற்றியி லனைத்தையும் மீட்டலாம்.

‘எல்லா மிழந்த பின்னர்-நின்றன்
இளைஞரும் நீரும் மற்றெதிற் பிழைப்பீர்?
பொல்லா விளையாட்டில்-பிச்சை
புகநினை விடுவதை விரும்புகிலோம்.
வல்லார் நினதிளை ஞர்-சூதில்
வைத்திடத் தகுந்தவர் பணய மென்றே;
சொல்லால் உளம்வருந் தேல்;-வைத்துத்
தோற்றதை மீட்’டென்று சகுனி சொன்னான்.

வேறு
கருணனும் சிரித்தான்:-சபையோர்
கண்ணின் நீருதிர்த் தார்.
இருள்நிறைந்த நெஞ்சன்,-களவே
இன்ப மென்று கொண்டான்
அரவு யர்த்த வேந்தன்-உவகை
ஆர்த்தெழுந்து சொல்வான்;
‘பரவு நாட்டை யெல்லாம்-எதிரே
பணய மாக வைப்போம்.

‘தம்பிமாரை வைத்தே-ஆடித்
தருமன் வென்று விட்டால்,
முன்பு மாமன் வென்ற-பொருளை
முழுதும் மூண் டளிப்போம்.
நம்பி வேலை செய்வோம்;-தருமா!
நாடிழந்த பின்னர்
அம்பி னொத்த விழியாள்-உங்கள்
ஐவருக்கு முரியாள்

‘அவள் இகழ்ந்திடாளோ?-அந்த
ஆயன் பேசுவானோ?
கவலை தீர்த்து வைப்போம்;-மேலே
களி நடக்கு’கென்றான்.
இவள வான பின்னும்-இளைஞர்
ஏதும் வார்த்தை சொல்லார்.
துவளும் நெஞ்சினா ராய்-வதனம்
தொங்க வீற் றிருந்தார்.

வீமன் மூச்சு விட்டான்-முழையில்
வெய்ய நாகம் போலே;
காம னொத்த பார்த்தான்-வதனக்
களை இழந்து விட்டான்;
நேம மிக்க நகுலன்-ஐயோ!
நினை வயர்ந்து விட்டான்
ஊமை போலிருந் தான்-பின்னோன்
உண்மை முற்றுணர்ந் தான்.

கங்கை மைந்த னங்கே-நெஞ்சம்
கன லுறத் துடித்தான்;
பொங்கு வெஞ் சினத்தால்-அரசர்
புகை யுயிர்த் திருந்தார்;
அங்கம் நொந்து விட்டான்,-விதுரன்
அவல மெய்தி விட்டான்,
சிங்க மைந்தை நாய்கள் கொல்லுஞ்
செய்தி காண லுற்றே.