முப்பெரும் பாடல்கள்

2. பாஞ்சாலி சபதம்

சூதாட்டச் சருக்கம் 32. தருமன் மறுத்தல்
தருமனங் கிவைசொல் வான்-‘ஐய!
சதியுறு சூதினுக் கெனை அழைத் தாய்;
பெருமைஇங் கிதிலுண்டோ?-அறப்
பெற்றிஉண் டோ?மறப் பீடுள தோ?

வருமம் நின் மனத்துடை யாய்!-எங்கள்
வாழ்வினை உகந்திலை என லறிவேன்;
இருமையுங் கெடுப்பது வாம்-இந்த
இழிதொழி லாலெமை அழித்த லுற் றாய்.’
ADVERTISEMENTS
கலகல வெனச்சிரித் தான்-பிழக்
கவற்றையொர் சாத்திர மெனப்பயின் றோன்;
பலபல மொழிகுவ தேன்?-உனைப்
பார்த்திவன் என்றெணி அழைத்துவிட்டேன்,
“நிலமுழு தாட்கொண் டாய்-தனி
நீ” எனப் பலர்சொலக் கேட்டதனால்,
சிலபொருள் விளையாட் டிற்-செலுஞ்
செலவினுக் கழிகலை எனநினைத் தேன்.

‘பாரத மண்டலத் தார்-தங்கள்
பதிஒரு பிசுனனென் றறிவே னோ?
சோரமிங் கிதிலுண் டோ?-தொழில்
சூதெனி லாடுநர் அரசரன் றோ?
மாரத வீரர்முன் னே?-நடு
மண்டபத் தே,பட்டப் பகலினி லே,
சூரசி காமணி யே,-நின்றன்
சொத்தினைத் திருடுவ மெனுங்கருத் தோ?

‘அச்சமிங் கிதில்வேண் டா,-விரைந்
தாடுவம் நெடும்பொழு தாயின தால்;
கச்சையொர் நாழிகை யா-நல்ல
காயுடன் விரித்திங்கு கிடந்திடல் காண்?
நிச்சயம் நீவெல் வாய்;-வெற்றி
நினக் கியல் பாயின தறியா யோ?
நிச்சயம் நீவெல் வாய்;-பல
நினைகுவ தேன்? களி தொடங்கு’கென்றான்.
வேறு

தோல் விலைக்குப் பசுவினைக் கொல்லும்
துட்டன் இவ்வுரை கூறுதல் கேட்டே,
நூல்வி லக்கிய செய்கைக ளஞ்சும்
நோன்பி னோனுளம் நொந்திவை கூறும்;
‘தேவ லப்பெயர் மாமுனி வோனும்
செய்ய கேள்வி அசிதனும் முன்னர்
காவ லர்க்கு விதித்த தந்நூலிற்
கவறும் நஞ்செனக் கூறினர்,கண்டாய்!

“வஞ்ச கத்தினில் வெற்றியை வேண்டார்.
மாயச் சூதைப் பழியெனக் கொள்வார்,
அஞ்ச லின்றிச் சமர்க்களத் தேறி
ஆக்கும் வெற்றி அதனை மதிப்பார்.
துஞ்ச நேரினுந் தூயசொல் லன்றிச்
சொல்மி லேச்சரைப் போலென்றுஞ் சொல்லார்,
மிஞ்சு சீர்த்திகொள் பாரத நாட்டில்
மேவு மாரியர் என்றனர் மேலோர்

‘ஆத லாலிந்தச் சூதினை வேண்டேன்!
ஐய,செல்வம் பெருமை இவற்றின்
காத லாலர சாற்றுவ னல்லேன்;
காழ்த்த் நல்லறம் ஓங்கவும் ஆஙகே
ஓத லானும் உணர்த்துத லானும்
உண்மை சான்ற கலைத்தொகை யாவும்
சாத லின்றி வளர்ந்திடு மாறும்,
சகுனி யானர சாளுதல்,கண்டாய்!

‘என்னை வஞ்சித்தென் செல்வத்தைக் கொள்வோர்
என்ற னக் கிடர் செய்பவ ரல்லர்
முன்னை நின்றதொர் நான்மறை கொல்வார்
மூது ணர்விற் கலைத்தொகை மாய்ப்பார்,
பின்னை என்னுயிர்ப் பாரத நாட்டில்
பீடை செய்யுங் கலியை அழைப்பார்;
நின்னை மிக்க பணிவோடு கேட்பேன்;
நெஞ்சிற் கொள்கையை நீக்குதி’என்றான்.
ADVERTISEMENTS
வேறு

வெய்ய தான விதியை நினைந்தான்
விலக்கொ ணாதறம் என்ப துணர்ந்தோன்;
பொய்ய தாகுஞ் சிறுவழக் கொன்றைப்
புலனி லாதவர் தம்முடம் பாட்டை
ஐயன் நெஞ்சில் அறமெனக் கொண்டான்
ஐயகோ!அந்த நாள்முத லாகத்
துய்ய சிந்தைய ரெத்தனை மக்கள்
துன்பம் இவ்வகை எய்தினர் அம்மா!

முன்பி ருந்ததொர் காரணத் தாலே,
மூடரே,பொய்யை மெய்என லாமோ?
முன்பெனச் சொலுங் கால மதற்கு,
மூடரே,ஓர் வரையறை உண்டோ,
முன்பெனச் சொலின் நேற்றுமுன் பேயாம்;
மூன்று கோடி வருடமும் முன்பே
முன்பிருந் தெண்ணி லாது புவிமேல்
மொய்த்த மக்க ளெலாம்முனி வோரோ?

நீர்பி றக்குமுன் பார்மிசை மூடர்
நேர்ந்த தில்லை எனநினைந் தீரோ?
பார்பி றந்தது தொட்டின்று மட்டும்,
பலப லப்பல பற்பல கோடி
கார்பி றக்கும் ம்ழைத்துளி போலே
கண்ட மக்க ளனைவருள் ளேயும்,
நீர்பி றப்பதன் முன்பு,மடமை
நீசத் தன்மை இருந்தன வன்றோ?

பொய்யொ ழுக்கை அறமென்று கொண்டும்,
பொய்யர் கேலியைச் சாத்திர மென்றும்,
ஐயகோ,நங்கள் பாரத நாட்டில்
அறிவி லாரறப் பற்றுமிக் குள்ளோர்
நொய்ய ராகி அழிந்தவர் கோடி,
நூல்வ கைபல தேர்ந்து தெளிந்தோன்,
மெய்ய றிந்தவர் தம்மு ளுயர்ந்தோன்
விதியி னாலத் தருமனும் வீழ்ந்தான்.

மதியி னும்விதி தான்பெரி தன்றோ?
வைய மீதுள வாகு மவற்றுள்
விதியி னும்பெரி தோர்பொரு ளுண்டோ?
மேலை நாம்செய்யுங் கர்மமல் லாதே,
நதியி லுள்ள சிறுகுழி தன்னில்
நான்கு தக்கி லிருந்தும் பல்மாசு
பதியு மாறு,பிறர்செய்யுங் கர்மப்
பயனும் நம்மை அடைவ துண்டன்றோ?
வேறு

மாயச் சூதி னுக்கே-ஐயன்,மன மிணங்கி விட்டான்;
தாய முரட்ட லானர்;-அங்கே சகுனி ஆர்ப்ப ரித்தான்!
நேய முற்ற விதுரன்-போலே,நெறி ளோர்க ளெல்லாம்
வாயை மூடி விட்டார்;-தங்கள்,மதி மயங்கி விட்டார்.

அந்த வேளை யதனில்-ஐவர்க் கதிபன் இஃதுரைப்பான்;
‘பந்த யங்கள் சொல்வாய்;-சகுனி பரபரத் திடாதே!
விந்தை யான செல்வம்-கொண்ட,வேந்த ரோடு நீ தான்
வந்தெ திர்த்து விட்டாய்;-எதிரே,வைக்க நிதியமுண் டோ?”

தருமன் வார்த்தை கேட்டே-துரியோதன னெழுந்து சொல்வான்
‘அருமையான செல்வம்-என்பால்,அளவிலாத துண்டு
ஒரு மடங்கு வைத்தால்-எதிரே,ஒன்ப தாக வைப்பேன்;
பெருமை சொல்ல வேண்டா,-ஐயா!பின் னடக்கு’கென்றான்.

‘ஒருவ னாடப் பணயம்-வேறே,ஒருவன் வைப்ப துண்டோ?
தரும மாகு மோடா!-சொல்வாய்,தம்பி இந்த வார்த்தை?
வரும மில்லை ஐயா;-இங்கு,மாம னாடப் பணயம்
மருகன் வைக் கொணாதோ?-இதிலே வந்த குற்றமேதோ?’

பொழுதுபோக்கு தற்கே-சூதுப் போர் தொடங்குகின்றோம்;
அழுத லேதிற்கே?’-என்றே,அங்கர் கோன் நகைத்தான்.
பழு திருப்ப தெல்லாம்-இங்கே பார்த்திவர்க் குரைத்தேன்;
முழுது மிங் கிதற்கே-பின்னர்,முடிவு காண்பிர்’என்றான்.

ஒளி சிறந்த மணியின்-மாலை,ஒன்றை அங்கு வைத்தான்;
களி மிகுந்த பகைவன்-எதிரே,கன தனங்கள் சொன்னான்;
விழி இமைக்கு முன்னே-மாமன் வென்று தீர்த்து விட்டான்;
பழி இலாத தருமன்-பின்னும்,பந்தயங்கள் சொல்வான்;

‘ஆயிரங் குடம்பொன் -வைத்தே,ஆடுவோ’மிதென்றான்;
மாயம் வல்ல மாமன்-அதனை,வசம தாக்கி விட்டான்;
‘பாயுமா வொரெட்டில்-செல்லும்.பார மான பொற்றேர்;’
தாய முருட்ட லானார்;-அங்கே,சகுனி வென்று விட்டான்.

“இளைய ரான மாதர்,-செம்பொன்,எழி லிணைந்த வடிவும்
வளை அணிந்த தோளும்-மாலை,மணி குலுங்கு மார்பும்
விளையு மின்ப நூல்கள்-தம்மில்,மிக்க தேர்ச்சி யோடு
களை இலங்கு முகமும்-சாயற்,கவினும் நன்கு கொண்டோர்,

ஆயிரக் கணக்கா-ஐவர்க்,கடிமை செய்து வாழ்வோர்;’
தாய முருட்டலானார்;-அந்தச்,சகுனி வென்று விட்டான்.
ஆயிரங்க ளாவார்-செம்பொன்,னணிகள் பூண்டிருப்பார்
தூயிழைப் பொனாடை-சுற்றுந்,தொண்டர் தம்மை வைத்தான்;

சோரனங் கவற்றை-வார்த்தை,சொல்லு முன்னர் வென்றான்.
‘தீர மிக்க தருமன்-உள்ளத்,திட னழிந் திடாதே’,
நீரை யுண்ட மேகம்-போலே நிற்கு மாயிரங்கள்
வாரணங்கள் கண்டாய்-போரில்,மறலி யொத்து மோதும்

என்று வைத்த பணயந்-தன்னை,இழிஞன் வென்று விட்டான்;
வென்றி மிக்க படைகள்-பின்னர்,வேந்தன் வைத் திழந்தான்;
நன்றிழைத்த தேர்கள்-போரின்,நடை யுணர்ந்த பாகர்
என் றிவற்றை யெல்லாம்-தருமன்,ஈடு வைத் திழந்தான்.

எண் ணிலாத,கண்டீர்,-புவியில்,இணை யிலாத வாகும்
வண்ண முள்ள பரிசுகள்-தம்மை,வைத் திழந்து விட்டான்;
நண்ணு பொற் கடாரந்-தம்மில்,நாலு கோடி வைத்தான்;
கண்ணி ழப்பவன் போல்-அவையோர்,கண மிழந்து விட்டான்

மாடி ழந்து விட்டான்,-தருமன்,மந்தை மந்தை யாக;
ஆடி ழந்து விட்டான்-தருமன்,ஆளிழந்து விட்டான்;
பீடிழந்த சகுனி-அங்கு,பின்னுஞ் சொல்லுகின்றான்;
நாடிழக்க வில்லை,-தருமா!நாட்டை வைத்தி’டென்றான்.
ADVERTISEMENTS
வேறு

‘ஐய கோஇதை யாதெனச் சொல்வோம்?
அரச ரானவர் செய்குவ தொன்றோ?
மெய்ய தாகவோ மண்டலத் தாட்சி
வென்று சூதினி லாளுங் கருத்தோ?
வைய மிஃது பொறுத்திடு மோ,மேல்
வான் பொறுந் திடுமோ’பழி மக்காள்!
துய்ய சீர்த்தி மதிக்குல மோ நாம்?
தூ!’ வென் றெள்ளி விதரனும் சொல்வான்,.

‘பாண்ட வர்பொறை கொள்ளுவ ரேனும்,
பைந்து ழாயனும் பாஞ்சாலத் தானும்
மூண்ட வெஞ்சினத் தோடுநஞ் சூழல்
முற்றும் வேர றச் செய்குவ ரன்றோ?

ஈண்டி ருக்குங் குருகுல வேந்தர்
யார்க்கு மிஃதுரைப் பேன்,குறிக் கொண்மின்;
‘மாண்டு போரில் மடிந்து நரகில்
மாழ்கு தற்கு வகைசெயல் வேண்டா”

‘குலமெ லாமழி வெய்திடற் கன்றோ
குத்தி ரத்துரி யோதனன் றன்னை
நலமி லாவிதி நம்மிடை வைத்தான்;
ஞால மீதி லவன் பிறந் தன்றே
அலறி யோர்நரி போற்குரைத் திட்டான்;
அஃது ணர்ந்த நிமித்திகர் வெய்ய
கலகந் தோன் றுமிப் பாலக னாலே
காணு வீரெனச் சொல்லிடக் கேட்டோம்.
‘சூதிற் பிள்ளை கெலித்திடல் கொண்டு
சொர்க்க போகம் பெறுபவன் போலப்
பேதை நீயு முகமலர் வெய்திப்
பெட்பு மிக்குற வீற்றிருக் கின்றாய்;
மீது சென்று மலையிடைத் தேனில்
மிக்க மோகத்தி னாலொரு வேடன்
பாத மாங்கு நழுவிட மாயும்
படும லைச்சரி வுள்ளது காணான்.

‘மற்று நீருமிச் சூதெனுங் கள்ளால்
மதிம யங்கி வருஞ்செயல் காணீர்!
முற்றுஞ் சாதி சுயோதன னாமோர்
மூடற் காக முழுகிட லாமோ?
பற்றுமிக்க இப்பாண்டவர் தம்மைப்
பாத கத்தி லழித்திடு கின்றாய்;
கற்ற கல்வியும் கேள்வியும் அண்ணே!
கடலிற் காயங் கரைத்ததொப் பாமே?

‘வீட்டு ளேநரி யைவிடப் பாம்பை
வேண்டிப் பிள்ளை எனவளர்த் திட்டோம்;
நாட்டு ளேபுக ழோங்கிடு மாறிந்
நரியை விற்றுப் புலிகளைக் கொள்வாய்;
மோட்டுக் கூகையைக் காக்கையை விற்று
மொய்ம்பு சான்ற மயில்களைக் கொள்வாய்;
கேட்டி லேகளி யோடுசெல் வாயோ?
கேட்குங் காதும் இழந்துவிட் டாயோ?

தம்பி மக்கள் பொருள் வெஃகு வாயோ
சாதற் கான வயதினில் அண்ணே?
நம்பி நின்னை அடைந்தவ ரன்றோ?
நாத னென்றுனைக் கொண்டவ ரன்றோ?
எம்பி ரானுளங் கொள்ளுதி யாயின்
யாவுந் தான மெனக்கொடுப் பாரே;
கும்பி மாநரக கத்தினி லாழ்த்துங்
கொடிய செய்கை தொடர்வதும் என்னே?

‘குருகு லத்தலை வன்சபைக் கண்ணே,
கொற்ற மிக்க துரோணன் கிருபன்
பெருகு சீர்த்தி அக் கங்கையின் மைந்தன்
பேதை நானும் மதிப்பிழந் தேகத்
திருகு நெஞ்சச் சகுனி ஒருவன்
செப்பு மந்திரஞ் சொல்லுதல் நன்றே!
அருகு வைக்கத் தகுதியுள் ளானோ?
அவனை வெற்பிடைப் போக்குதி அண்ணே!

‘நெறி இழந்தபின் வாழ்வதி லின்பம்
நேரு மென்று நினைத்திடல் வேண்டா,
பொறி இழந்த சகுனியின் சூதால்
புண்ணி யர்தமை மாற்றல ராக்கிச்
சிறியர் பாதகர் என்றுல கெல்லாம்
சீஎன் றேச உகந்தர சாளும்
வறிய வாழ்வை விரும்பிட லாமோ?
வாழி,சூதை நிறுத்துதி’என்றான்.சூதாட்டச் சருக்கம் முற்றும்முதற்பாகம் முற்றிற்று