முப்பெரும் பாடல்கள்

2. பாஞ்சாலி சபதம்

(முதற் பாகம்)
வேறுதந்தை இஃது மொழிந்திடல் கேட்டே,
தாரி சைந்த நெடுவரைக் தோளான்;
எந்தை,நின்னொடு வாதிடல் வேண்டேன்
என்று பன்முறை கூறியும் கேளாய்;
வந்த காரியங் கேட்டி மற் றங்குன்
வார்த்தை யன்றிஅப் பாண்டவர் வாரார்;
இந்த வார்த்தை உரைத்து விடாயேல்
இங்கு நின்முன் என் ஆவி இறுப்பேன்.

‘மதித மக்கென் றிலாதவர் கோடி
வண்மைச் சாத்திரக் கேள்விகள் கேட்டும்
பதியுஞ் சாத்திரத் துள்ளுறை காணார்,
பானைத் தேனில் அகப்பையைப் போல்வார்
துதிகள் சொல்லும் விதுரன் மொழியைச்
சுருதி யாமெனக் கொண்டனை நீ தான்;
அதிக மோகம் அவனுளங் கொண்டான்
ஐவர் மீதில்,இங் கெம்மை வெறுப்பான்.

‘தலைவன் ஆங்குப் பிறர்கையில் பொம்மை;
சார்ந்து நிற்பவர்க் குய்ந்நெறி உண்டோ?
உலைவ லால் திரி தாட்டிர வர்க்கத்
துள்ள வர்க்கு நலமென்ப தில்லை;
நிலையி லாதன செல்வமும் மாண்பும்
நித்தம் தேடி வருந்த லிலாமே
விலையி லாநிதி கொண்டனம்’என்றே
மெய்கு ழைந்து துயில்பவர் மூடர்.

‘பழைய வானிதி போதுமென் றெண்ணிப்
பாங்கு காத்திடு மன்னவர் வாழ்வை
விழையும் அன்னியர் ஓர்கணத் துற்றே
வென்ற ழிக்கும் விதி அறி யாயோ?
குழைத லென்பது மன்னவர்க் கில்லை;
கூடக் கூடப்பின் கூட்டுதல் வேண்டும்;
பிழைஒன் றேஅர சர்க்குண்டு, கண்டாய்;
பிறரைத் தாழ்ந்து வதிற்சலிப் பெய்தல்.

வேறு
‘வெல்வதெங் குலத்தொழி லாம்;-அந்த
விதத்தினில் இசையினும் தவறிலை காண்!
நல்வழி தீய வழி-என
நாமதிற் சோதனை செயத்தகு மோ?
செல்வழி யாவினு மே-பகை
தீர்த்திடல் சாலுமென் றனர்பெரி யோர்;
கொல்வது தான் படையோ?-பகை
குமைப்பன யாவும்நற் படையல வோ?
வேறு
‘கற்றத் தாரிவர் என்றனை ஐயா!
தோற்றத் தாலும் பிறவியி னாலும்,
பற்றல ரென்றும் நண்பர்க ளென்றும்
பார்ப்ப தில்லை உலகினில் யாரும்;
மற்றெத் தாலும் பகையுறல் இல்லை;
வடிவினில் இல்லை அளவினில் இல்லை;
உற்ற துன்பத்தி னாற்பகை உண்டாம்,
ஓர்தொ ழில்பயில் வார்தமக் குள்ளே

‘பூமித் தெய்வம் விழுங்கிடும கண்டாய்
புரவ லர்பகை காய்கிலர் தம்மை;
நாமிப் பூதலத் தேகுறை வெய்த
நாளும் பாண்டவர் ஏறுகின் றாரால்;
நேமி மன்னர் பகைசிறி தென்றே
நினைவ யர்ந்திருப் பாரெனில்,நோய்போல்,
சாமி,அந்தப் பகைமிக லுற்றே
சடிதி மாய்த்திடும் என்பதும் காணாய்.

‘போர்செய் வோமெனில் நீதடுக் கின்றாய்;
புவியி னோரும் பழிபல சொல்வார்,
தார்செய் தோளிளம் பாண்டவர் தம்மைச்
சமரில் வெல்வதும் ஆங்கெளி தன்றாம்;
யார்செய் புண்ணியத் தோநமக் குற்றான்
எங்க ளாருயிர் போன்றஇம் மாமன்;
நேர்செய் சூதினில் வென்று தருவான்;
நீதித் தர்மனும் சூதில்அன் புள்ளோன்.

‘பகைவர் வாழ்வினில இன்புறு வாயோ?
பார தர்க்கு முடிமணி யன்னாய்!
புகையும் என்றன் உளத்தினை வீறில்
புன்சொற் கூறி அவிதிதிட லாமோ?
நகைசெய் தார்தமை நாளை நகைப்போம்;
நமரிப் பாண்டவர் என்னில் இஃதாலே
மிகையு றுந்தன்ப மேது? நம் மோடு
வேறு றாதெமைச் சார்ந்துநன் குய்வார்.

‘ஐய சூதிற் கவரை அழைத்தால்,
ஆடி உய்குதும்,அஃதியற் றாயேல்,
பொய்யன் றென்னுரை;என்னியல் போர்வாய்;
பொய்மை வீறென்றுஞ் சொல்லிய துண்டோ?
நைய நின்முனர் என்சிரங் கொய்தே
நானிங் காவி இறுத்திடு வேனால்;
செய்ய லாவது செய்குதி’ என்றான்;
திரித ராட்டிரன் நெஞ்ச முடைந்தான்.
ADVERTISEMENTS
வேறு‘விதிசெயும் விளைவி னுக்கே-இங்கு
வேறு செய்வோர் புவிமீ துளரோ?
மதிசெறி விதுரன் அன்றே-இது
வருந்திறன் அறிந்துமுன் எனக்குரைத்தான்.
“அதிசயக் கொடுங் கோலம்-விளைந்
தரசர்தங் குலத்தினை அழிக்கும்”என்றான்;
சதிசெயத் தொடங்கி விட்டாய்-“நின்றன்
சதியினிற்றானது விளையும்”என்றான்.

‘விதி!விதி! விதி!மகனே!-இனி
வேறெது சொல்லுவன் அட மகனே!
கதியுறுங் கால னன்றோ-இந்தக்
கயமக னெனநினைச் சார்ந்து விட்டான்?
கொதியுறு முளம் வேண்டா;-நின்றன்
கொள்கையின் படிஅவர் தமை அழைப்பேன்;
வதியுறு மனை செல்வாய்.’-என்று
வழியுங்கண் ணீரொடு விடை கொடுத்தான்.
வேறுமஞ்சனும் மாமனும் போயின பின்னர்,
மன்னன் வினைஞர் பலரை அழைத்தே,
‘பஞ்சவர் வேள்வியிற் கண்டது போலப்
பாங்கி னுயர்ந்ததொர் மண்டபஞ் செய்வீர்!
மிஞ்சு பொருளதற் காற்றுவன்’ என்றான்;
மிக்க உவகையொ டாங்கர் சென்றே
கஞ்ச மலரிற் கடவுள் வியப்பக்
கட்டி நிறுத்தினர் பொற்சபை ஒன்றை.

வேறு

வல்லவன் ஆக்கிய சித்திரம் போலும்,
வண்மைக் கவிஞர் கனவினைப் போலும்,
நல்ல தொழிலுணர்ந் தார்செய லேன்றே
நாடு முழுதும் புகழ்ச்சிகள் கூறக்
கல்லையும் மண்ணையும் பொன்னையும் கொண்டு
காமர் மணிகள் சிலசில சேர்த்துச்
சொல்லை யிசைத்துப் பிறர்செயு மாறே
சுந்தர மாமொரு காப்பியஞ் செய்தார்.
ADVERTISEMENTS
தம்பி விதுரனை மன்னன் அழைத்தான்;
தக்க பரிசுகள் கொண்டினி தேகி,
எம்பியின் மக்கள் இருந்தர சாளும்
இந்திர மாநகர் சார்ந்தவர் தம்பால்,
“கொம்பினை யொத்த மடப்பிடி யோடும்
கூடிஇங் கெய்தி விருந்து களிக்க
நம்பி அழைத்தனன் கௌரவர் கோமான்
நல்லதொர் நுந்தை”எனஉரை செய்வாய்.

நாடு முழுதும் புகழ்ச்சிகள் கூறும்
நன்மணி மண்டபம் செய்ததும் சொல்வாய்;
“நீடு புகழ்பெரு வேள்வியில் அந்நாள்
நேயமொ டேகித் திரும்பிய பின்னர்
பீடுறு மக்களை ஓர்முறை இங்கே
பேணி அழைத்து விருந்துக ளாற்றக்
கூடும் வயதிற் கிழவன் விரும்பிக்
கூறினன் இஃதெ னச் சொல்லுவை கண்டாய்!

‘பேச்சி னிடையிற்“சகுனிசொற் கேட்டே
பேயெனும் பிள்ளை கருத்தினிற் கொண்ட
தீச்செயல் இஃதெ”ன் றதையுங் குறிப்பாற்
செப்பிடு வாய்என மன்னவன் கூறப்
‘போச்சுது! போச்சுது பாரத நாடு!
போச்சுது நல்லறம்! போச்சுது வேதம்!
ஆச்சரி யக்கொடுங் கோலங்கள் காண்போம்;
ஐய இதனைத் தடுத்தல் அரிதோ?’

என்று விதுரன் பெருந்துயர் கொண்டே
ஏங்கிப் பலசொல் இயம்பிய பின்னர்
‘சென்று வருகுதி,தம்பி,இனிமேல்
சிந்தனை ஏதும் இதிற்செய மாட்டேன்
வென்று படுத்தனன் வெவ்விதி என்னை;
மேலை விளைவுகள் நீஅறி யாயோ?
அன்று விதித்ததை இன்று தடுத்தல்
யார்க்கெளி’தென்றுமெய் சோர்ந்து விழுந்தான்.
வேறுவிதுரன் வருஞ்செய்தி தாஞ்செவி யுற்றே,
வீறுடை ஐவர் உளமகிழ் பூத்துச்
சதுரங்க சேனை யுடன்பல பரிசும்
தாளமும் மேளமும் தாங்கொண்டு சென்றே
எதிர்கொண் டழைத்து,மணிமுடி தாழ்த்தி,
ஏந்தல் விதுரன் பதமலர் போற்றி,
மதுரமொழியிற் குசலங்கள் பேசி,
மன்ன னொடுந்திரு மாளிகை சேர்ந்தார்.

குந்தி எனும்பெயர்த் தெய்வதந் தன்னைக்
கோமகன் கண்டு வணங்கிய பின்னர்,
வெந்திறல் கொண்ட துருபதன் செல்வம்
வெள்கித் தலைகுனிந் தாங்குவந் தெய்தி.
அந்தி மயங்க விசும்பிடைத் தோன்றும்
ஆசைக் கதிர்மதி யன்ன முகத்தை
மந்திரந் தேர்ந்தொர் மாமன் அடிக்கண்
வைத்து வணங்கி வனப்புற நின்றான்,

தங்கப் பதுமை எனவந்து நின்ற
தையலுக் கையன்,நல் லாசிகள் கூறி
அங்கங் குளிர்ந்திட வாழ்த்திய பின்னர்
ஆங்குவந் துற்ற உறவினர் நண்பர்
சிங்க மெனத்திகழ் வீரர் புலவர்
சேவகர் யொரொடுஞ் செய்திகள் பேசிப்
பொங்கு திருவின் நகர்வ லம்வந்து
போழ்து கழிந்திர வாகிய பின்னர்.
ADVERTISEMENTS
ஐவர் தமையுந் தனிக்கொண்டு போகி,
ஆங்கொரு செம்பொன் னரங்கில் இருந்தே:-
‘மைவரைத் தோளன்,பெரும்புக ழாளன்,
மாமகள் பூமகட் கோர்மண வாளன்,
மெய்வரு கேள்வி மிகுந்த புலவன்,
வேந்தர் பிரான்,திரி தாட்டிரக் கோமான்
தெய்வ நலங்கள் சிறந்திட நும்மைச்
சீரொடு நித்தலும் வாழ்கென வாழ்த்தி,

‘உங்களுக் கென்னிடம் சொல்லி விடுத்தான்
ஓர்செய்தி;மற்றஃ துரைத்திடக் கேளீர
மங்களம் வாந்தநல் அத்தி புரத்தே
வையக மீதில் இணையற்ற தாகத்
தங்கும் எழிற்பெரு மண்டபம் ஒன்று
தம்பியர் சூழ்ந்து சமைத்தனர் கண்டீர்!
அங்கதன் விந்தை அழகினைக் காண
அப்பொடு நும்மை அழைத்தனன் வேந்தன்.

‘வேள்விக்கு நாங்கள் அனைவரும் வந்து
மீண்டு பலதின மாயின வேனும்,
வாள்வைக்கும் நல்விழி மங்கைய டேநீர்
வந்தெங்க ளூரில் மறுவிருந் தாட
நாள்வைக்குஞ் சோதிட ராலிது மட்டும்
நாயகன் நும்மை அழைத்திட வில்லை;
கேக்விக் கொருமி திலாதிப னொத்தோன்
கேடற்ற மாதம் இதுவெனக் கண்டே,

‘வந்து விருந்து களித்திட நும்மை
வாழ்த்தி அழைத்தனன் என்னரு மக்காள்;
சந்துகண் டேஅச் சகுனிசொற் கேட்டுத்
தன்மை இழந்த சுயோதன மூடன்
விந்தை பொருந்திய மண்டபத் தும்மை
வெய்யபுன் சூது களித்திடச் செய்யும்
மந்திர மொன்றும் மனத்திடைக் கொண்டான்;
வன்ம மிதுவும் நுமக்கறி வித்தேன்’