முப்பெரும் பாடல்கள்

2. பாஞ்சாலி சபதம்

(முதற் பாகம்)
வேறுஎன்று சுயோதனன் கூறியே-நெஞ்சம்
ஈர்ந்திடக் கண்ட சகுனி தான்-அட!
இன்று தருகுவன் வெற்றியே;-இதற்கு
இத்தனை வீண்சொல் வளர்ப்ப தேன்?-இனி
ஒன்றுரைப் பேன்நல் உபாயந்தான்;.அதை
ஊன்றிக் கருத்தொடு கேட்பையால்;-ஒரு
மன்று புனைந்திடச் செய்தி நீ,-தெய்வ
மண்டப மொத்த நலங்கொண்டே

“மண்டபங் காண வருவி ரென்-றந்த
மன்னவர் தம்மை வரவழைத்-தங்கு
கொண்ட கருத்தை முடிப்ப வே-மெல்லக்
கூட்டிவன் சூது பொரச் செய்வோம்-அந்த
வண்டரை நாழிகை யொன்றிலே-தங்கள்
வான்பொருள் யாவையும் தோற்றுனைப்-பணி
தொண்ட ரெனச்செய் திடுவன் யான்,-என்றன்
சூதின் வலிமை அறிவை நீ.

“வெஞ்சமர் செய்திடு வோமெனில்-அதில்
வெற்றியும் தோல்வியும் யார்கண்டார்?-அந்தப்
பஞ்சவ் வீரம் பெரிது காண்-ஒரு
பார்த்தன்கை வில்லுக் கெதிருண்டோ?-உன்றன்
நெஞ்சத்திற் சூதை யிகழ்ச்சியாக் -கொள்ள
நீத மில்லை முன்னைப் பார்த்திவர்-தொகை
கொஞ்ச மிலைப்பெருஞ் சூதினால்-வெற்றி
கொண்டு பகையை அழித்துளோர்.

“நாடும் குடிகளும் செல்வமும்-எண்ணி,
நானிலத் தோர்கொடும் போர் செய்வார்;-அன்றி
ஓடுங் குருதியைத் தேக்கவோ?-தமர்
ஊன்குவை கண்டு களிக்கவோ?அந்த
நாடும் குடிகளும் செல்வமும்-ஒரு
நாழிகைப் போதினில் சூதினால்-வெல்லக்
கூடு மினிற்பிறி தெண்ணலேன்?-என்றன்
கொள்கை இது”வெனக் கூறினான்.

இங்கிது க்டட சுயோதனன்-மிக
இங்கிதம் சொல்லினை,மாமனே!’என்று
சங்கிலிப் பொன்னின் மணியிட்ட,-ஒளித்
தாமம் சகுனிக்குச் சூட்டினான்;-பின்னர்
எங்கும் புவிமிசை உன்னைப் போல்-எனக்
கில்லை இனியது சொல்லுவோர்’-என்று
பொங்கும் உவகையின் மார்புறக் -கட்டிப்
பூரித்து விம்மித் தழுவினான்.
ADVERTISEMENTS
மற்றதன் பின்னர் இருவரும்-அரு
மந்திக் கேள்வி உடையவன்-பெருங்
கொற்றவர் கோன்திரி தராட்டிரன்-சபை
கூடி வணங்கி இருந்தனர்;-அருள்

அற்ற சகுனியும் சொல்லுவான்;-‘ஐய!,
ஆண்டகை நின்மகன் செய்திகேள்!-உடல்
வற்றித் துரும்பொத் திருக்கின்றான்;-உயிர்
வாழ்வை முழுதும வெறுக்கின்றான்.

‘உண்ப சுவையின்றி உண்கின்றான்;-பின்
உடுப்ப திகழ உடுக்கின்றான்;-பழ
நண்பர்க ளோடுற வெய்திடான்;.எள
நாரியரைச் சிந்தை செய்திடான்;-பிள்ளை
கண்பசலை கொண்டு போயினான்-இதன்
காரணம் யாதென்று கேட்பையால்;-உயர்
திண்ப ருமத்தடந் தோளினாய்!’-என்று
தீய சகுனியும் செப்பினான்.

தந்தையும் இவ்வுரை கேட்டதால்-உளம்
சாலவும் குன்றி வருந்தியே,-‘என்றன்
மைந்த!நினக்கு வருத்தமேன்?-இவன்
வார்த்தையி லேதும் பொருளுண்டோ? நினக்கு
எந்த விதத்துங் குறையுடோ?நினை
யாரும் எதிர்த்திடு வாருண்டோ?-நின்றன்
சிந்தையில் எண்ணும் பொருளெலாம்-கணந்
தேடிக் கொடுப்பவர் இல்லையோ?

‘இன்னமு தொத்த உணவுகள்-அந்த
இந்திரன் வெஃகுறும் ஆடைகள்,-பலர்
சொன்ன பணிசெயும் மன்னவர்,-வருந்
துன்பந் தவிர்க்கும் அமைச்சர்கள்,-மிக
நன்னலங் கொண்ட குடி படை-இந்த
நானில மெங்கும் பெரும்புகழ்-மிஞ்சி
மன்னும்அப் பாண்டவச் சோதரர்-இவை
வாய்ந்தும் உனக்குத் துயருண்டோ?

தந்தை வசனஞ் செயிவுற்றே-கொடி
சர்ப்பத்தைக் கொண்டதொர் கோமன்
வெந்தழல் போலச் சினங்கொடே-தன்னை
முறிப் பலசொல விளம்பினான்;.இவன்
மந்த மதிகொண்டு சொல்வதை-அந்த
மாமன் மதித்துரை செய்குவான்;-‘ஐய;
சிந்தை வெதுப்பத்தி னாலிவன்-சொலும்
சீற்ற மொழிகள் பொறுப்பையால்.

‘தன்னுளத் துள்ள குறையெலாம்-நின்றன்
சந்நிதி யிற்சென்று சொல்லிட-முதல்
என்னைப் பணித்தனன்;யானிவன்-றனை
இங்கு வலியக் கொணர்ந்திட்டேன்;
நன்னய மேசிந்தை செய்கின்றான்;-எனில்
நன்கு மொழிவ றிந்திலன்;-நெஞ்சைத்
தின்னுங் கொடுந்தழல் கொண்டவர்-சொல்லுஞ்
செய்தி தெளிய உரைப்பரோ?

நீ பெற்ற புத்திர னேயன்றோ?-மன்னர்
நீதி யியல்பின் அறிகின்றான்-ஒரு
தீபத்தில் சென்று கொளுத்திய-பந்தம்
தேசு குறைய எரியுமோ?-செல்வத்
தாபத்தை நெஞ்சில் வளர்த்திடல்-மன்னர்
சாத்திரத் தேமுதற் சூத்திரம்;-பின்னும்
ஆபத் தரசர்க்கு வேறுண்டோ-தம்மில்
அன்னியர் செல்வம் மிகுதல்போல்?

வேள்வியில் அன்றந்தப் பாண்டவர்-நமை
வேண்டுமட் டுங்குறை செய்தனர்;-ஒரு
வேள்வி யிலாதுன் மகன்றனைப்-பலர்
கேலிசெய் தேநகைத் தார்,கண்டாய்!-புவி
ஆள்வினை முன்னவர்க் கின்றியே-புகழ்
ஆர்ந்திளை யோரது கொள்வதைப்-பற்றி
வாள்விழி மாதரும் நம்மையே-கய
மக்களென் றெண்ணி நகைத்திட்டார்.

ஆயிரம் யானை வலிகொண்டான்-உன்றன்
ஆண்டகை மைந்த னிவன் கண்டாய்!-இந்த
மாயரு ஞாலத் துயர்ந்ததாம்-மதி
வான்குலத் திற்குமுதல்வனாம்;
ஞாயிறு நிற்பவும் மின்மினி-தன்னை
நாடித் தொழுதிடுந் தன்மைபோல்,-அவர்
வேயிருந் தூதுமொர் கண்ணனை -அந்த
வேள்வியில் சால உயர்த்தினார்.

ஐய!நின் மைந்தனுக் கில்லைகாண்-அவர்
அர்க்கியம் முற்படத் தந்ததே;-இந்த
வையகத் தார்வியப் பெய்தவே,-புவி
மன்னவர் சேர்ந்த சபைதனில்-மிக
நொய்யதோர் கண்ணனுக் காற்றினார்;-மன்னர்
நொந்து மனங்குன்றிப் போயினர்;-பணி
செய்யவும் கேலிகள் கேட்கவும்-உன்றன்
சேயினை வைத்தனர் பாண்டவர்.

‘பாண்டவர் செல்வம் விழைகின்றான்;-புவிப்
பாரத்தை வேண்டிக் குழைகின்றான்;-மிக
நீண்டமகிதலம் முற்றிலும்-உங்கள்
நேமி செலும்புகழ் கேட்கின்றான்;-குலம்
பூண்ட பெருமை கெடாதவா-றெண்ணிப்
பொங்குகின் றான்நலம் வேட்கின்றான்;-மைந்தன்
ஆண்டகைக் கிஃது தகுமன்றோ?-இல்லை
யாமெனில வையம் நகுமன்றோ?

‘நித்தங் கடலினிற் கொண்டுபோய்-நல்ல
நீரை அளவின்றிக் கொட்டுமாம்-உயர்
வித்தகர் போற்றிடுங் கங்கையா-றது
வீணிற் பொருளை யழிப்பதோ?-ஒரு

சத்த மிலாநெடுங் காட்டினில்-புனல்
தங்கிநிற் குங்குளம் ஒன்றுண்டாம்,-அது
வைத்ததன் நீரைப் பிறர்கொளா-வகை
வாரடைப் பாசியில் மூடியே.

‘சூரிய வெப்பம் படாமலே-மரம்
சூழ்ந்த மலையடிக் கீழ்ப்பட்டே-முடை
நீரின் நித்தலும் காக்குமாம்;-இந்த
நீள்சுனை போல்வர் பலருண்டே?-எனில்
ஆரியர் செல்வம் வளர்தற்கே-நெறி
ஆயிரம் நித்தம் புதியன-கண்டு
வாரிப் பழம்பொருள் எற்றுவார்;-இந்த
வண்மையும் நீயறி யாததோ?”
கள்ளச் சகுனியும் இங்ஙனே பல
கற்பனை சொல்லித்தன் உள்ளத்தின்-பொருள்
கொள்ளப் பகட்டுதல் கேட்டபின்-பெருங்
கோபத் தொடேதிரி தாட்டிரன்,-’அட!
பிள்ளையை நாசம் புரியவே-ஒரு
பேயென நீ வந்து தோன்றினாய்;-பெரு
வெள்ளத்தைப் புல்லொன் றெதிர்க்குமோ:-இள
வேந்தரை நாம்வெல்ல லாகுமோ?

‘சோதரர் தம்முட் பகையுண்டோ?-ஒரு
சுற்றத்தி லேபெருஞ் செற்றமோ?-நம்மில்
ஆதரங் கொட்வ ரல்லரோ?-முன்னர்
ஆயிரஞ் சூழ்ச்சி இவன்செய்தும்-அந்தச்
சீதரன் தண்ணரு ளாலுமோர்-பெருஞ்
சீலத்தி னாலும் புயவலி-கொண்டும்
யாதொரு தீங்கும் இலாமலே-பிழைத்
தெண்ணருங கீர்த்திபெற் றாரன்றோ?

‘பிள்ளைப் பருவந் தொடங்சிகயே-இந்தப்
பிச்சன் அவர்க்குப் பெரும்பகை -செய்து
கொள்ளப் படாத பெரும்பழி-யன்றிக்
கொண்டதொர் நன்மை சிறிதுண்டோ?-நெஞ்சில்

எள்ளத் தகுந்த பகைமையோ?-அவர்
யார்க்கும் இளைத்த வகையுண்டோ?-வெறும்
நொள்ளைக் கதைகள் கதைக்கிறாய்,-பழ
நூலின் பொருளைச் சிதைக்கிறாய்,

‘மன்னவர் நீதி சொலவந்தாய்-பகை
மாமலை யைச்சிறு மட்குடம்-கொள்ளச்
சொன்னதொர் நூல்சற்றுக் காட்டுவாய்!-விண்ணில்
சூரியன் போல்நிக ரின்றியே-புகழ்
துன்னப் புவிச்சக்க ராதிபம்-உடற்
சோதரர் தாங்கொண் டிருப்பவும்-தந்தை
என்னக் கருதி அவரெனைப் -பணிந்து
என்சொற் கடங்கி நடப்பவும்,

‘முன்னை இவன்செய்த தீதெலாம்-அவர்
முற்றும் மறந்தவ ராகியே-தன்னைத்
தின்ன வருமொர் தவளையைக்-கண்டு
சிங்கஞ் சிரித்தருள் செய்தல்போல-துணை
யென்ன இவனை மதிப்பவும்-அவர்
ஏற்றத்தைக் கண்டும் அஞ்சாமலே-நின்றன்
சின்ன மதியினை என்சொல்வேன் -பகை
செய்திட எண்ணிப் பிதற்றினாய்,

‘ஒப்பில் வலிமை யுடையதாந் -துணை
யோடு பகைத்தல் உறுதியோ-நம்மைத்
தப்பிழைத் தாரந்த வேள்வியில்-என்று
சாலம் எவரிடஞ் செய்கிறாய்?-மயல்
அப்பி விழிதடு மாறியே-இவன்
அங்கு மிங்கும் விழுந் தாடல் கண்டு-அந்தத்
துப்பிதழ் மைத்துனி தான்சிரித் -திடில்
தோஷ மிதில்மிக வந்ததோ?

‘தவறி விழுபவர் தம்மையே-பெற்ற
தாயுஞ் சிரித்தல் மரபன்றோ?-எனில்
இவனைத் துணைவர் சிரித்ததோர்-செயல்
எண்ணரும் பாதக மாகுமோ?-மனக்
கவலை வளர்த்திடல் வேண்டுவோர்-ஒரு
காரணங் காணுதல் கஷ்டமோ?-வெறும்
அவல மொழிகள் அளப்பதேன்?-தொழில்
ஆயிர முண்டவை செய்குவீர்.

‘சின்னஞ் சிறிய வயதிலே-இவன்
தீமை அவர்க்குத் தொடங்கினான்-அவர்
என்னரும் புத்திரன் என்றெண்ணித் -தங்கள்
யாகத் திவனைத் தலைக்கொண்டு-பசும்
பொன்னை நிறைத்ததொர் பையினை-மனம்
போலச் செலவிடு வாய்’என்றே-தந்து
மன்னவர் காண இவனுக்கே-தம்முள்
மாண்பு கொடுத்தன ரல்லரோ?

கண்ணனுக் கேமுதல் அர்க்கியம்-அவர்
காட்டினர் என்று பழித்தனை!-எனில்,
நண்ணும் விருந்தினர்க் கன்றியே-நம்முள்
நாமுப சாரங்கள் செய்வதோ?-உறவு
அண்ணனும் தம்பியும் ஆதலால்-அவர்
அன்னிய மாநமைக் கொண்டிலர்;-முகில்
வண்ணன் அதிதியர் தம்முளே-முதல்
மாண்புடை யானெனக் கொண்டனர்.

‘கண்ணனுக் கேயது சாலுமென்று-உயர்
கங்கை மகன்சொலச் செய்தனர்-இதைப்
பண்ணரும் பாவமென் றெண்ணினால்-அதன்
பார மவர்தமைச் சாருமோ?-பின்னும்,
கண்ணனை ஏதெனக் கொண்டனை-அவன்
காலிற் சிறிதுக ளொப்பவர்-நிலத்
தெண்ணரும் மன்னவர் தம்முளே-பிறர்
யாரு மிலையெனல் காணுவாய்.

‘ஆதிப் பரம்பொருள் நாரணன்-தெளி
வாகிய பொற்கடல் மீதிலே-நல்ல
சோதிப் பணாமுடி யாயிரம்-கொண்ட
தொல்லறி வென்னுமோர் பாம்பின்மேல்-ஒரு
போதத் துயில்கொளும் நாயகன்,-கலை
போந்து புவிமிசைத் தோன்றினான்-இந்தச்
சீதக் குவளை விழியினான்’-என்று
செப்புவர் உண்மை தெளிந்தவர்.

‘நானெனும் ஆணவந் தள்ளலும்-இந்த
ஞாலத்தைத் தானெனக் கொள்ளலும்-பர
மோன நிலையின் நடத்தலும்-ஒரு
மூவகைக் காலங் கடத்தலும் நடு
வான கருமங்கள் செய்தலும்-உயிர்
யாவிற்கும் நல்லருள் பெய்தலும்-பிறர்
ஊனைச் சிதைத்திடும் போதினும்-தனது
உள்ளம் அருளின் நெகுதலும்,

‘ஆயிரங் கால முயற்சியால்-பெற
லாவர் இப்பேறுகள் ஞானியர்;-இவை
தாயின் வயிற்றில் பிறந்தன்றே-தம்மைச்
சார்ந்து விளங்கப் பெறுவரேல்,-இந்த
மாயிரு ஞாலம் அவர்தமைத்-தெய்வ
மாண்புடை யாரென்று போற்றுங்காண்!-ஒரு
பேயினை வேதம் உணர்த்தல்போல்,-கண்ணன்
பெற்றி உனக்கெவர் பேசுவார்?
ADVERTISEMENTS
வேறுவெற்றி வேற்கைப் பரதர்தங் கோமான்,
மேன்மை கொண்ட விழியகத் துள்ளோன்,
பெற்றி மிக்க விதுர னறிவைப்
பன்னும் ம்ற்றொரு கண்ணெனக் கொண்டோன்,
முற்று ணர்திரி தாட்டிரன் என்போன்
மூடப் பிள்ளைக்கு மாமன் சொல் வார்த்தை
எற்றி நல்ல வழக்குரை செய்தே
ஏற்ற வாறு நயங்கள் புகட்ட,
கொல்லும் நோய்க்கு மருந்துசெய் போழ்தில்
கூடும வெம்மைய தாய்ப்பிணக் குற்றே
தொல்லு ணர்வின் மருத்துவன் தன்னைச்
சோர்வு றுத்துதல் போல்,ஒரு தந்தை
சொல்லும் வார்த்தையி லோதெரு ளாதரன்
தோமி ழைப்பதி லோர்மதி யுள்ளான்,
கல்லும் ஒப்பிடத் தந்தை விளக்கும்
கட்டு ரைக்குக் கடுஞ்சின முற்றான்
வேறுபாம்பைக் கொடியேன் றுயர்த்தவன்-அந்தப்
பாம்பெனச் சீறி மொழிகுவான்;-‘அட!
தாம்பெற்ற மைந்தர்குத் தீதுசெய்-திடும்
தந்தையர் பார்மிசை உண்டுகொல்?-கெட்ட
வேம்பு நிகரிவ னுக்குநான்;சுவை
மிக்க சருக்கரை பாண்டவர்;-அவர்
தீம்பு செய்தாலும் புகழ்கின்றான்,-திருத்
தேடினும் என்னை இகழ்கின்றான்.

“மன்னர்க்கு நீதி யொருவகை;-பிற
மாந்தர்க்கு நீதிமற் றோர்வகை”-என்று
சொன்ன வியாழ முனிவனை-இவன்
சுத்த மடையனென் றெண்ணியே,-மற்றும்
என்னென்ன வோகதை சொல்கிறான்,-உற
வென்றும் நட்பென்றும் கதைக்கிறான்,-அவர்
சின்ன முறச்செய வேதிறங்-கெட்ட
செத்தையென் றென்னை நினைக்கிறான்;

‘இந்திர போகங்கள் என்கிறான்,-உண
வின்பமும் மாதரின் இன்பமும்-இவன்
மந்திர மும்படை மாட்சியும்-கொண்டு
வாழ்வதை விட்டிங்கு வீணிலே-பிறர்
செந்திருவைக் கண்டு வெம்பியே-உளம்
தேம்புதல் பேதைமை என்கிறான்;-மன்னர்
தந்திரந் தேர்ந்தவர் தம்மிலே-எங்கள்
தந்தையை ஒப்பவர் இல்லைகாண்!

‘மாதர் தம் இன்பம் எனக்கென்றான்,-புவி
மண்டலத் தாட்சி அவர்க்கென்றான்-நல்ல
சாதமும் நெய்யும் எனக் கென்றான்,-எங்கும்
சர்ற்றிடுங் கீர்த்தி அவர்க்கென்றான்;-அட!
ஆதர விங்ஙனம் பிள்ளைமேல்-வைக்கும்
அப்பன் உலகினில் வேறுண்டோ?உயிர்ச்
சோதரர் பாண்டவர் தந்தை நீ-குறை
சொல்ல இனியிட மேதையா!

‘சொல்லின் நயங்கள் அறிந்திலேன்,-உனைச்
சொல்லினில் வெல்ல விரும்பிலேன்;-கருங்
கல்லிடை நாருரிப் பாருண்டோ?-நினைக்
காரணங் காட்டுத லாகுமோ?-என்னைக்
கொல்லினும் வேறெது செய்யினும்,-நெஞ்சில்
கொண்ட கருத்தை விடுகிறேன்;-அந்தப்
புல்லிய பாண்டவர் மேம்படக்-கண்டு
போற்றி உயிர்கொண்டு வாழ்கிலேன்;

‘வாது நின்னொடு தொடுக்கிலேன்;-ஒரு
வார்த்தை மட்டுஞ்சொலக் கேட்பையால்;ஒரு
தீது நமக்கு வராமலே-வெற்றி
சோர்வதற் கோர்வழி யுண்டு,காண்!-களிச்
சூதுக் கவரை-வெற்றி
தோற்றிடு மாறு புரியலாம்;-இதற்
கேதுந் தடைகள் சொல்லாமலே-என
தெண்ணத்தை நீகொளல் வேண்டுமால்’
ADVERTISEMENTS
வேறுதிரிதாட் டிரன் செவியில்-இந்தத்
தீமொழி புகுதலுந் திகைத்து விட்டான்!
‘பெரிதாத் துயர் கொணர்ந்தாய்;-கொடும்
பேயெனப் பிள்ளைகள் பெற்று விட்டேன்;
அரிதாக் குதல்போலாம்-இந்த
நாணமில் செயலினை நாடுவ னோ?

‘ஆரியர் செய்வாரோ?-இந்த
ஆண்மையி லாச்செயல் எண்ணுவரோ?
பாரினில் பிறருடைமை-வெஃகும்
பதரினைப் போலொரு பதருண்டோ?
பேரியற் செல்வங்களும்-இசைப்
பெருமையும் எய்திட விரும்புதியேல்,
காரியம் இதுவாமோ?-என்றன்
காளை யன்றோ இது கருத லடா!

‘வீரனுக் கேயிசை வார்-திரு,
மேதினி எனுமிரு மனைவியர் தாம்,
ஆரமர் தமரல் லார்-மிசை
ஆற்றிநல் வெற்றியில் ஓங்குதி யேல்,
பாரத நாட்டினிலே-அந்தப்
பாண்டவ ரெனப்புகழ் படைத்திடு வாய்;
சோரர்தம் மகனோ நீ?-உயர்
சோமன்ற னோருகுலத் தோன்ற லன்றோ?

‘தம்மொரு கருமத்திலே-நித்தம்
தளர்வறு முயற்சி மற்றோர்பொருளை
இம்மியுங் கருதாமை,-சார்ந்
திருப்பவர் தமைநன்கு காத்திடுதல்:
இம்மையில் இவற்றினையே-செல்வத்
திலக்கணம் என் றனர் மூதறிஞர்.
அம்ம,இங் கிதனை யெலாம் நீ
அறிந்திலையோ? பிழையாற்றல் நன்றோ?

‘நின்னுடைத் தோளனை யார்-இள
நிருபரைச் சிதைத்திட நினைப்பாயோ?
என்னுடை யுயிரன்றோ?-எனை
எண்ணிஇக் கொள்கையை நீக்குதியால்!
பொன்னுடை மார்பகத் தார்-இளம்
பொற்கொடி மாதரைக் களிப்பதினும்
இன்னும்பல் இன்பத்தினும்-உளம்
இசையவிட் டேஇதை மறந்தி டடா!’