ஞானப் பாடல்கள்

94. வண்டிக்காரன் பாட்டு

அண்ணனுக்கும் தம்பிக்கும் சம்பாஷணை

“காட்டு வழிதனிலே-அண்ணே!
கள்ளர் பயமிருந்தால்?”-எங்கள்
வீட்டுக் குலதெய்வம்-தம்பி
வீரம்மை காக்குமடா!”
“நிறுத்து வண்டி யென்றே-கள்ளர்
நெருக்கிக் கேட்கையிலே?’-“எங்கள்
கறுத்த மாரியின் பேர்-சொன்னால்
காலனும் அஞ்சுமடா!”.
ADVERTISEMENTS
கடமை புரிவா ரின்புறுவார்
என்னும் பண்டைக் கதை பேணோம்;
கடமை யறியோம் தொழிலறி யோம்;
கட்டென் பதனை வெட்டென் போம்;
மடமை சிறுமை துன்பம் பொய்
வருத்தம் நோவு மற்றிவை போல்
கடமை நினைவுந் தொலைத் திங்கு
களியுற் றென்றும் வாழ்குவமே.
இந்தப் புவிதனில் வாழு மரங்களும்
இன்ப நறுமலர்ப் பூஞ்செடிக் கூட்டமும்
அந்த மரங்களைச் சூழ்ந்த கொடிகளும்
ஔடத மூலிகை பூண்டுபுல் யாவையும்
எந்தத் தொழில் செய்து வாழ்வன வோ?

வேறு
மானுடர் உழாவிடினும் வித்து நடாவிடினும்
வரம்புகட்டாவிடினும் அன்றிநீர் பாய்ச்சாவிடினும்
வானுலகு நீர்தருமேல் மண்மீது மரங்கள்
வகைவகையா நெற்கள்புற்கள் மலிந்திருக்கு மன்றோ?
யானெ தற்கும் அஞ்சுகிலேன்,மானுடரே,நீவிர்
என்மதத்தைக் கைக்கொண்மின்,பாடுபடல் வேண்டா;

ஊனுடலை வருத்தாதீர்; உணவியற்கை கொடுக்கும்;
உங்களுக்குத் தொழிலிங்கே அன்பு செய்தல் கண்டீர்!
ADVERTISEMENTS
சென்றதினி மீளாது,மூட ரே!நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்!சென்றதனைக் குறித்தல் வேண்டாம்
இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;
தீமையெலாம் அழிந்துபோம்,திரும்பி வாரா.
பேயா யுழலுஞ் சிறுமனமே!
பேணா யென்சொல் இன் றுமுதல்
நீயா ஒன்றும் நாடாதே
நினது தலைவன் யானேகாண்;
தாயாம் சக்தி தாளினிலும்
தரும மெனயான் குறிப்பதிலும்
ஓயா தேநின் றுழைத்திடு வாய்
உரைத்தேன் அடங்கி உய்யுதியால்.
ADVERTISEMENTS
மனமெனும் பெண்ணே!வாழி நீ கேளாய்!
ஒன்றையே பற்றி யூச லாடுவாய்
அடுத்ததை நோக்கி யடுத்தடுத் துலவுவாய்
நன்றையே கொள்ளெனிற் சோர்ந்துகை நழுவுவாய்
விட்டுவி டென்றதை விடாது போய் விழுவாய்

தொட்டதை மீள மீளவுந் தொடுவாய்
புதியது காணிற் புலனழிந் திடுவாய்
புதியது விரும்புவாய் புதியதை அஞ்சுவாய்;
அடிக்கடி மதுவினை மணுகிடும் வண்டுபோல்
பழமையாம் பொருளிற் பரிந்துபோய் வீழ்வாய்

பழமையே யன்றிப் பார்மிசை யேதும்
புதுமை காணோமெனப் பொருமுவாய்,சீச்சீ!
பிணத்தினை விரும்புங் காக்கையே போல
அழுகுதல்,சாதல்,அஞ்சுதல் முதலிய
இழிபொருள் காணில் விரைந்ததில் இசைவாய்

அங்ஙனே,
என்னிடத் தென்றும் மாறுத லில்லா
அன்புகொண் டிருப்பாய், ஆவிகாத் திடுவாய்,
கண்ணினோர் கண்ணாய், காதின் காதாய்ப்
புலன்புலப் படுத்தும் புலனா மென்னை

உலக உருளையில் ஒட்டுற வகுப்பாய்
இன்பெலாந் தருவாய் இன்பத்து மயங்குவாய்,
இன்பமே நாடியெண் ணிலாப்பிழை செய்வாய்,
இன்பங் காத்துத் துன்பமே யழிப்பாய்
இன்பமென் றெண்ணித் துன்பத்து வீழ்வாய்,

தன்னை யறியாய், சகத்தெலாந் தொலைப்பாய்,
தன்பின் னிற்குந் தனிப்பபரம் பொருளைக்
காணவே வருந்துவாய் காணெனிற் காணாய்,
சகத்தின் விதிகளைத் தனித்தனி அறிவாய்,
பொதுநிலை அறியாய் பொருளையும் காணாய்.

மனமெனும் பெண்ணே! வாழிநீ கேளாய்!
நின்னொடு வாழும் நெறியுநன் கறிந்திடேன்;
இத்தனை நாட்போல் இனியுநின் னின்பமே
விரும்புவன்;நின்னை மேம்படுத் திடவே
முயற்சிகள் புரிவேன்;முத்தியுந் தேடுவேன்;

உன்விழிப் படாமல் என் விழிப் பட்ட
சிவமெனும் பொருளைத் தினமும் போற்றி
உன்தனக் கின்பம் ஓங்கிடச் செய்வேன்.