பல்வகைப் பாடல்கள்

3. தனிப் பாடல்கள்

19. சாதாரண வருஷத்துத் தூமகேது
தினையின் மீது பனைநின் றாங்கு
மணிச்சிறு மீன்மிசை வளர்வால் ஒளிதரக்
ழ்த்திசை வெள்ளியைக் கேண்மைகொண் டிலகும்
தூம கேதுச் சுடரே,வாராய்!

எண்ணில் பல கோடி யோசனை யெல்லை
எண்ணிலா மென்மை இயன்றதோர் வாயுவால்
புனைந்த நின்னெடுவால் போவதென் கின்றார்.

மண்ணகத் தினையும் வால்கொடு தீண்டி
ஏழையர்க் கேதும் இடர்செயா தேநீ
போதி யென்கின்றார்;புதுமைகள் ஆயிரம்
நினைக்குறித் தறிஞர் நிகழ்த்துகின் றனரால்.

பாரத நாட்டில் பரவிய எம்மனோர்
நூற்கணம் மறந்துபன் னூறாண் டாயின;
உனதியல் அன்னியர் உரைத்தடக் கேட்டே
தெரிந்தனம்;எம்முளே தெளிந்தவர் ஈங்கிலை.

வாராய்,சுடரே!வார்த்தைசில கேட்பேன்;
தீயர்க் கெல்லாம் தீமைகள் விளைத்துத்
தொல்புவி யதனைத் துயர்க்கட லாழ்த்திநீ
போவை யென்கின்றார்; பொய்யோ,மெய்யோ?

ஆதித் தலைவி யாணையின் படிநீ
சலித்திடுந் தன்மையால்,தண்டம் நீ செய்வது
புவியினைப் புனிதமாப் புனைதற் கேயென
விளம்பு கின்றனர் அது மெய்யோ,பொய்யோ?

ஆண்டோர் எழுபத் தைந்தினில் ஒரு முறை
மண்ணைநீ அணுகும் வழக்கினை யாயினும்
இம்முறை வரவினால் எண்ணிலாப் புதுமைகள்
விளையு மென்கின்றார்;மெய்யோ,பொய்யோ?

சித்திகள் பலவும்,சிறந்திடு ஞானமும
மீட்டும் எம்மிடைநின் வரவினால் விளைவதாப்
புகலு கின்றனர்; அது பொய்யோ,மெய்யோ?
ADVERTISEMENTS
மங்கியதொர் நிலவினிலே கனவிலிது கண்டேன்,
வயதுபதி னாறிருக்கும் இளவயது மங்கை;
பொங்கிவரும் பெருநிலவு போன்றவொளி முகமும்.
புன்னகையின் புதுநிலவும் போற்றவருந் தோற்றம்,
துங்கமணி மின்போலும் வடிவத்தாள் வந்து,
தூங்காதே யெழுந்தென்னைப் பாரென்று சொன்னாள்.
அங்கதனிற் கண்விழித்தேன் அடடாவோ! அடடா!
அழகென்னும் தெய்வந்தான் அதுவென்றே அறிந்ததேன்.
யோகந்தான் சிறந்ததுவோ? தவம் பெரிதோ?’என்றேன்;
‘யோகமே தவம்,தவமே யோக’மென உரைத்தாள்.
‘ஏகமோ பொருளன்றி இரண்டாமோ?’என்றேன்;
‘இரண்டுமாம்,ஒன்று மாம்,யாவுமாம்’என்றாள்.
‘தாகமறிந் தீயுமருள் வான்மழைக்கே யுண்டோ?
தாகத்தின் துயர்மழைதான் அறிந்திடுமோ?’என்றேன்.
‘வேகமுடன் அன்பினையே வெளிப்படுத்தா மழைதான்
விருப்புடனே பெய்குவது வேறாமோ?”என்றாள்.
‘காலத்தின் விதி மதியைக் கடந்திடுமோ?’என்றேன்.
‘காலமே மதியினுக்கோர் கருவியாம்’என்றாள்.
‘ஞாலத்தில் விரும்பியது நண்ணுமோ?’என்றேன்;
‘நானிலே ஒன்றிரண்டு பலித்திடலாம்’என்றாள்
‘ஏலத்தில் விடுவதுண்டோ எண்ணத்தை?’என்றேன்;
‘எண்ணினால் எண்ணியது நண்ணுங்காண்’என்றாள்.
‘மூலத்தைச் சொல்லவோ?வேண்டாமோ?’என்றேன்;
முகத்திலருள் காட்டினாள் மோகமது தீர்ந்தேன்.
வானமெங்கும் பரிதியின் சோதி;
மலைகள் மீதும் பரிதியின் சோதி;
தானை நீர்க்கடல் மீதிலும் ஆங்கே
தரையின் மீதும் தருக்களின் மீதும்
கான கத்திலும் பற்பல ஆற்றின்
கரைகள் மீதும் பரிதியின் சோதி;
மானவன்தன் உளத்தினில் மட்டும்
வந்து நிற்கும் இருளிது வென்னே!

சோதி என்னும் கரையற்ற வெள்ளம்
தோன்றி எங்கும் திரைகொண்டு பாய,
சோதி என்னும் பெருங்கடல்,சோதிச்
சூறை,மாசறு சோதி யனந்தம்,
சோதி என்னும் நிறைவிஃதுலகைச்
சூழ்ந்து நிற்ப,ஒரு தனி நெஞ்சம்
கோதி யன்றதொர் சிற்றிருள் சேரக்
குமைந்து சோரும் கொடுமையி தென்னே!

தேம லர்க்கொர் அமுதன்ன சோதி,
சேர்ந்து புள்ளினம் வாழ்ந்திடும் சோதி,
காம முற்று நிலத்தொடு நீரும்
காற்றும் நன்கு தழுவி நகைத்தே
தாம யங்கநல் லின்புறுஞ் சோதி,
தரணி முற்றும் ததும்பி யிருப்ப,
தீமை கொண்ட புலையிருள் சேர்ந்தோர்
சிறிய நெஞ்சம் தியங்குவ தென்னே!

நீர்ச்சு னைக்கணம் மின்னுற் றிலக,
நெடிய குன்றம் நகைத்தெழில் கொள்ள,
கார்ச்ச டைக்கரு மேகங்க ளெல்லாம்
கனக மொத்துச் சுடர்கொண் டுலாவ,
தேர்ச்சி கொண்டுபல் சாத்திரம் கற்றும்
தெவிட்டொ ணாதநல்லின்பக் கருவாம்
வேர்ச்சு டர்பர மாண்பொருள் கேட்டும்
மெலிவொர் நெஞ்சிடை மேவுதல் என்னே!
ADVERTISEMENTS
சொல் ஒன்று வேண்டும்,தேவ சக்திகளை
நம்முள்ளே நிலைபெறச் செய்யும் சொல் வேண்டும்.

தேவர் வருகவென்று சொல்வதோ?-ஒரு
செம்மைத் தமிழ்மொழியை நாட்டினால்,
ஆவ லறிந்துவரு வீர்கொலோ?-உம்மை
யன்றி யொருபுகலும் இல்லையே.

‘ஓம்’என் றுரைத்துவிடிற் போதுமோ?-அதில்
உண்மைப் பொருளறிய லாகுமோ?
தீமை யனைத்துமிறந்தேகுமோ?-என்தன்
சித்தம் தெளிவுநிலை கூடுமோ?
“உண்மை ஒளிர்க’என்று பாடவோ?-அதில்
உங்கள் அருள்பொருந்தக் கூடுமோ?
வண்மை யுடையதொரு சொல்லினால்-உங்கள்
வாழ்வு பெறவிரும்பி நிற்கிறோம்.

“தீயை அகத்தினிடை மூட்டுவோம்”-என்று
செப்பும் மொழிவலிய தாகுமோ?
ஈயைக் கருடநிலை யேற்றுவீர்-எம்மை
என்றுந் துயரமின்றி வாழ்த்துவீர்.

வான மழைபொழிதல் போலவே-நித்தம்
வந்து பொழியுமின்பங் கூட்டுவீர்;
கானை அழித்து மனை கட்டுவீர்-துன்பக்
கட்டுச் சிதறிவிழ வெட்டுவீர்.

விரியும் அறிவுநிலை காட்டுவீர்-அங்கு
வீழும் சிறுமைகளை ஓட்டுவீர்:
தெரியும் ஒளிவிழியை நாட்டுவீர்-நல்ல
தீரப் பெருந்தொழிலில் பூட்டுவீர்.

மின்ன லனையதி றல் ஓங்குமே-உயிர்
வெள்ளம் கரையடங்கிப் பாயுமே;
தின்னும் பொருளமுதம் ஆகுமே-இங்குச்
செய்கை யதனில் வெற்றி யேறுமே.

தெய்வக் கனல்விளைந்து காக்குமே-நம்மைச்
சேரும் இருளழியத் தாக்குமே;
கைவைத் ததுபசும்பொன் ஆகுமே-பின்பு
காலன் பயமொழிந்து போகுமே.

“வலிமை,வலிமை”என்று பாடுவோம்-என்றும்
வாழுஞ் சுடர்க்குலத்தை நாடுவோம்;
கலியைப் பிளந்திடக் கை யோங்கினோம்-நெஞ்சில்
கவலை யிருளனைத்தும் நீங்கினோம்.

“அமிழ்தம்,அமிழ்தம்’‘என்று கூறுவோம்-நித்தம்
அனலைப் பணிந்துமலர் தூவுவோம்;
தமிழில் பழமறையைப் பாடுவோம்-என்றும்
தலைமை பெருமை புகழ் கூடுவோம்.
வாழ்க மனைவியாம் கவிதைத் தலைவி!
தினமும்இவ் வுலகில் சிதறியே நிகழும்
பலபல பொருளிலாப் பாழ்படு செய்தியை
வாழ்க்கைப் பாலையில் வளர்பல முட்கள்போல்
பேதை யுலகைப் பேதைமைப் படுத்தும்

வெறுங்கதைத் திரளை,வெள்ளறி வுடைய
மாயா சக்தியின் மகளே!மனைக்கண்
வாழ்வினை வகுப்பாய்,வருடம் பலவினும்
ஓர்நாட் போலமற் றோர்நாள் தோன்றாது
பலவித வண்ணம் வீட்டிடைப் பரவ

நடத்திடுஞ் சக்தி நிலையமே!நன்மனைத்
தலைவீ!ஆங்கத் தனிப்பதர்ச் செய்திகள்
அனைத்தையும் பயன்நிறை அனுபவ மாக்கி,
உயிரிலாச் செய்திகட்கு உயிர்மிகக் கொடுத்து,
ஒளியிலாச் செய்திகட்கு ஒளியருள் புரிந்து

வான சாத்திரம்,மகமது வீழ்ச்சி,
சின்னப் பையல் சேவகத் திறமை;
எனவரு நிகழ்ச்சி யாவே யாயினும்,
அனைத்தையும் ஆங்கே அழகுறச் செய்து,
இலௌகிக வாழ்க்கையில் பொருளினை இணைக்கும்

பேதை மாசத்தியின் பெண்ணே!வாழ்க!
காளியின் குமாரி!அறங்காத் திடுக
வாழ்க!மனையகத் தலைவீ வாழ்க!
ADVERTISEMENTS
வாராய்!கவிதையாம் மணிப்பெயர்க் காதலி!
பன்னாள் பன்மதி ஆண்டுபல கழிந்தன,
நின்னருள் வதனம் நான் நேருறக் கண்டே
அந்தநாள் நீயெனை அடிமையாக் கொள,யாம்
மானிடர் குழாத்தின் மறைவுறத் தனியிருந்து

எண்ணிலா இன்பத்து இருங்கடல் திளைத்தோம்;
கலந்துயாம் பொழிலிடைக் களித்தவந் நாட்களிற்
பூம்பொழிற் குயில்களின் இன்குரல் போன்ற
தீங்குரலு டைத்தோர் புள்ளினைத் தெரிந்திலேன்;
மலரினத் துன்தன் வாள்விழி யொப்ப

நிலவிய தொன்றினை நேர்ந்திலேன்;குளிர்புனற்
சுனைகளில் உன்மணிச் சொற்கள் போல் தண்ணிய
நீருடைத் தறிகிறேன்;நின்னொடு தமியனாய்
நீயே உயிரெனத் தெய்வமும் நீயென
நின்னையே பேணி நெடுநாள் போக்கினேன்.

வானகத் தமுதம் மடுத்திடும் போழ்து
மற்றத னிடையோர் வஞ்சகத் தொடுமுள்
வீழ்ந்திடைத் தொண்டையில் வேதனை செய்தன.
நின்னொடு களித்து நினைவிழந் திருந்த
எனைத்துயர்ப் படுத்தவந் தெய்திய துலகிற்

கொடியன யாவுளும் கொடியதாம் மிடிமை
அடிநா முள்ளினை அயல்சிறி தேகிக்
களைந்து பின்வந்து காண்பொழுத ஐயகோ!”
மறைந்தது தெய்வ மருந்துடைப் பொற்குடம்
மிடிமைநோய் தீர்ப்பான் வீணர்தம் முலகப்

புன்தொழில் ஒன்று போற்றுதும் என்பாள்
தென்திசைக் கண்ணொரு சிற்றூர்க் கிறைவனாம்
திருந்திய ஒருவனைத் துணையெனப் புகுந்து,அவன்
பணிசெய இசைந்தேன்,பதகிநீ!என்னைப்
பிரிந்துமற் றகன்றனை பேசொணா நின்னருள்.

இன்பமத் தனையும் இழந்துநான் உழன்றேன்,
சின்னாள் கழிந்தபின் -யாதெனச் செப்புகேன்!
நின்னொடு வாழ்ந்த நினைப்புமே தேய்ந்தது.
கதையிலோர் முனிவன் கடியதாஞ் சாப
விளைவினால் பன்றியா வீழ்ந்திடு முன்னர்த்

தன்மக னிடை “என் தனயநீ யான்புலைப்
பன்றியாம் போது பார்த்துநில் லாதே!
விரைவிலோர் வாள்கொடு வெறுப்புடை யவ்வுடர்ல
துணித்தெனைக் கொன்று தொலைத்தலுன் கடனாம்.
பாவமிங் கில்லையென் பணிப்பிஃ தாகலின்!”

தாதைசொற்கு இளைஞன் தளர்வொடும் இணங்கினான்.
முனிவனும் பன் றியா முடிந்தபின்,மைந்தன்
முன்னவன் கூறிய மொரீயினை நினைந்தும்,
இரும்புகழ் முனிவனுக்குன இழியதா மிவ்வுடல்
அமைந்தது கண்டுநெஞ் சழன்றிடல் கொண்டும்.

வாள்கொடு பன்றியை மாய்த்திட லுற்றனன்,
ஆயிடை மற்றவ் வருந்தவப் பன்றி
இனையது கூறும்.“ஏடா!நிற்க!
நிற்க!நிற்க!முன்னர்யாம் நினைந்தவாறு
அத்துணைத் துன்புடைத் தன்றிவ் வாழ்க்கை

காற்றும் புனலும் கடிப்புற் கிழங்கும்
இனையபல் லின்பம் இதன் கணே யுளவாம்;
ஆறேழ் திங்கள் அகன்றபின் வருதியேல்
பின்னெனைக் கோறலாம்”பீழையோ டிவ்வுரை
செவியுறீஈ முடிசாய்த் திளையவன் சென்றனன்.

திங்கள்பல போனபின் முனிமகன் சென்ற
தாதைப் பன்றியோர் தடத்திடைப் பெடையொடும்
போத்தினம் பலவொடும் அன்பினிற் பொருத்தி
ஆடல்கண் டயிர்த்தனன். ஆற்றொணா தருகுசென்று
“எந்தாய்!எந்தாய்!யாதரோ மற்றிது!

வேதநூ லறிந்த மேதகு முனிவரர்
போற்றிட வாழ்ந்தநின் புகழ்க்கிது சாலுமோ?”
எனப்பல கூறி இரங்கினன்;பின்னர்
வாள்கொடு பன்றியை பாய்ததிடல் விழைந்தான்.
ஆயிடை முனிவன் அகம்பதைக் துரைக்கும்

“செல்லடா! செல்க தீக்குணத் திழிஞ!
எனக்கிவ் வாழ்க்கை இன்புடைத் தேயாம்;
நினக்கிதில் துன்பம் நிகழுமேல் சென்றவ்
வாளினின் நெஞ்சை வகுத்து நீ மடிக
என்றிது கூறி இருந்தவப் பன்றிதன்

இனத்தொடும் ஓடி இன்னுயிர் காத்தது.
இன்னது கண்ட இளையவன் கருதும்.
“ஆவா!மானிடர் அருமையின் வீழ்ந்து
புன்னிலை யெய்திய போழ்ததில் நெடுங்கால்
தெரு மரு கின்றிலர் சிலபகல் கழிந்தபின்

புதியதா நீசப் பொய்மைகொள் வாழ்வில்
விருப்புடை யவராய் வேறுதா மென்றும்
அறிந்திலரேபோன் றதிற்களிக் கின்றார்.
என்சொல்கேன் மாயையின் எண்ணரும் வஞ்சம்”.
திமிங்கில வுடலும் சிறியபுன் மதியும்

ஓரேழ் பெண்டிரும் உடையதோர் வேந்தன்
தன்பணிக் கிசைந்தென் தருக்கெலாம் அழிந்து
வாழ்ந்தனன் கதையின் முனிபோல் வாழ்க்கை!