பல்வகைப் பாடல்கள்

3. தனிப் பாடல்கள்

13. அந்திப் பொழுது
காவென்று கத்திடுங் காக்கை-என்தன்
கண்ணுக் கினிய கருநிறக் காக்கை,
மேவிப் பலகிளை மீதில்-இங்கு
விண்ணிடை அந்திப் பொழுதினைக் கண்டே,
கூவித் திரியும் சிலவே;-சில
கூட்டங்கள் கூடித் திசைதொறும் போகும்.
தேவி பராசக்தி யன்னை -வின்ணிற்
செவ்வொளி காட்டிப் பிறைதலைக் கொண்டாள்.

தென்னை மரக்கிளை மீதில்-அங்கோர்
செல்வப் பசுங்கிளி கீச்சிட்டுப் பாயும்
சின்னஞ் சிறிய குருவி-அது
‘ஜிவ்’ வென்று விண்ணிடை யூசலிட் டேகுட்.
மன்னப் பருந்தொ ரிரண்டு-மெல்ல
வட்ட மிட்டுப்பின் நெடுந்தொலை போகும்,
பின்னர் தெருவிலார் சேவல்-அதன்
பேச்சினி லே“சக்தி வேல்” என்று கூவும்.

செவ்வொளி வானில் மறைந்தே-இளந்
தேநில வெங்கும் பொழிந்தது கண்டீர்!
இவ்வள வான பொழுதில் அவள்
ஏறிவந்தே யுச்சி மாடத்தின் மீது,
கொவ்வை யிதழ்நகை வீச,-விழிக்
கோணத்தைக் கொண்டு நிலவைப் பிடித்தான்.
செவ்விது,செவ்விது,பெண்மை!-ஆ!
செவ்விது,செவ்விது,செவ்விது காதல்!

காதலி னாலுயிர் தோன்றும்;-இங்கு
காதலி னாலுயிர் வீரத்தி லேறும்;
காலி னாலறி வெய்தும்-இங்கு
காதல் கவிதைப் பயிரை வளர்க்கும்;
ஆதலி னாலவள் கையைப் -பற்றி
அற்புத மென்றிரு கண்ணிடை யொற்றி
வேதனை யின்றி இருந்தேன்,-அவள்
வீணைக் குரலிலோப் பாட்டிசைத் திட்டாள்.

காதலியின் பாட்டு

கோல மிட்டு விளக்கினை யேற்றிக்
கூடி நின்று பராசக்தி முன்னே
ஓல மிட்டுப் புகழ்ச்சிகள் சொல்வார்
உண்மை கண்டிலர் வையத்து மாக்கள்;
ஞால முற்றும் பராசக்தி தோற்றம்
ஞான மென்ற விளக்கினை யேற்றிக்
கால முற்றுந் தொழுதிடல் வேண்டும்,
காத லென்பதொர் கோயிலின் கண்ணே.
ADVERTISEMENTS
நிலாவையும் வானத்து மீனையும் காற்றையும்
நேர்பட வைத்தாங்கே
குலாவும் அமுதக் குழம்பைக் குடித்தொரு
கோலவெறி படைத்தோம்;
உலாவும் மனச்சிறு புள்ளினை எங்கணும்
ஓட்டி மகிழ்ந்திடுவோம்;
பலாவின் கனிச்சுளை வண்டியில் ஓர் வண்டு
பாடுவதும் வியப்போ!

தாரகை யென்ற மணித்திரள் யாவையும்
சார்ந்திடப் போமனமே,
சரச் சுவையதி லுறி வருமதில்
இன்புறு வாய்மனமே!
சீர விருஞ்சுடர் மீனொடு வானத்துத்
திங்களையுஞ் சமைத்தே
ஓரழ காக விழுங்கிடும் உள்ளத்தை
ஒப்பதொர் செல்வமுண்டா’

பன்றியைப் போலிங்கு மண்ணிடைச் சேற்றில்
படுத்துப் புரளாதே
வென்றியை நாடியிவ் வானத்தில் ஓட
விரும்பி விரைந்திடுமே;
முன்றலில் ஓடுமோர் வண்டியைப் போலன்று
மூன்றுலகுஞ் சூழ்ந்தே
நன்று திரியும்வி மானத்தைப் போலொரு
நல்ல மனம் படைத்தோம்.

தென்னையின் கீற்றுச் சலசலச வென்றிடச்
செய்துவருங் காற்றே!
உன்னைக் குதிரைகொண் டேறித் திரியுமொர்
உள்ளம் படைத்துவிட்டோம்.
சின்னப் பறவையின் மெல்லொலி கொண்டிங்கு
சேர்ந்திடு நற் காற்றே!
மின்னல் விளக்கிற்கு வானகங் கொட்டுமிவ்
வெட்டொலி யேன் கொணர்ந்தாய்?

மண்ணுல கத்துநல் லோசைகள் காற்றெனும்
வானவன் கொண்டுவந்தான்;
பண்ணி விசைத்தவ வொலிக ளனைத்தையும்
பாடி மகிழ்ந்திடுவோம்.
நண்ணி வருமணி யோசையும்,பின்னங்கு
நாய்கள் குலைப்பதுவும்,
எண்ணுமுன்னே‘அன்னக் காவடிப் பிச்சை’யென்
றேங்கிடு வான் குரலும்,
வீதிக் கதவை அடைப்பதும் கீழ்த்திசை
விம்மிடும் சங்கொலியும்,
வாதுகள் பேசிடு மாந்தர் குரலும்
மதலை யழுங் குரலும்,
ஏதெது கொண்டு வருகுது காற்றிவை
எண்ணி லகப்படுமோ?
சீதக் கதிர்மதி மேற்சென்று பாய்ந்தங்கு
தேனுண்ணு வாய்,மனமே!
திக்குக்கள் எட்டும் சிதறி-தக்கத்
தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட
பக்க மலைகள் உடைந்து-வெள்ளம்
பாயுது பாயுது பாயுது-தாம்தரிகிட
தக்கத் ததிங்கிட தித்தோம்-அண்டம்
சாயுது சாயுது சாயுது-பேய்கொண்டு
தக்கை யடிக்குது காற்று-தக்கத்
தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட

வெட்டி யடிக்குது மின்னல்,-கடல்
வீரத் திரைகொண்டு விண்ணை யிடிக்குது;
கொட்டி யிடிக்குது மேகம்;-கூ
கூவென்று விண்ணைக் குடையுது காற்று;
சட்டச்சட சட்டச்சட டட்டா-என்று
தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்;
எட்டுத் திசையும் இடிய-மழை
எங்ஙனம் வந்ததடா,தம்பி வீரா!

அண்டம் குலுங்குது,தம்பி!-தலை
ஆயிரந் தூக்கிய சேடனும் பேய்போல்
மிண்டிக் குதித்திடு கின்றான்;-திசை
வெற்புக் குதிக்குது;வானத்துத் தேவர்
செண்டு புடைத்திடு கின்றார்;-என்ன
தெய்விகக் காட்சியை கண்முன்பு கண்டோம்!
கண்டோம் கண்டோம் கண்டோம்-இந்தக்
காலத்தின் கூத்தினைக் கண்முன்பு கண்டோம்!
ADVERTISEMENTS
நள வருடம் காத்திகை மாதம் 8ம் தேதி புதன் இரவு
ஒரு கணவனும் மனைவியும்

மனைவி: காற்றடிக்குது,கடல்குமுறுது
கண்ணை விழிப்பாய் நாயகமே!
தூற்றல் கதவு சாளரமெல்லாம்
தொளைத்தடிக்குது, பள்ளியிலே.

கணவன்: வானம் சினந்தது;வையம் நடுங்குது;
வாழி பராசக்தி காத்திடவே!
தீனக்குழந்தைகள் துன்பப்படாதிங்கு
தேவி, அருள்செய்ய வேண்டுகிறோம்.

மனைவி:நேற்றிருந் தோம்அந்த வீட்டினிலே,இந்த
நேரமிருந்தால் என்படுவோம்?
காற்றெனவந்தது கூற்றமிங்கே,நம்மைக்
காத்ததுதெய்வ வலிமையன்றோ?
வயலிடை யினிலே-செழுநீர்-மடுக் கரையினிலே
அய லெவரு மில்லை-தனியே-ஆறுதல் கொள்ள வந்தேன்.

காற்றடித் ததிலே-மரங்கள்-கணக்கிடத் தகுமோ?
நாற்றி னைப்போலே-சிதறி-நாடெங்கும் வீழ்ந்தனவே.

சிறிய திட்டையிலே,உளதோர்-தென்னஞ் சிறுதோப்பு
வறியவ னுடைமை-அதனை-வாயு பொடிக்க வில்லை

வீழ்ந்தன சிலவாம்-மரங்கள்-மீந்தன பலவாம்;
வாழ்ந்திருக்க வென்றே-அதனை-வாயு பொறுத்து விட்டான்

தனிமை கண்டதுண்டு;-அதில்-சார மிருக்கு தம்மா!
பனிதொலைக்கும் வெயில்,-அது தேம்-பாகு மதுர மன்றோ?

இரவி நின்றது காண்-விண்ணிலே-இன்பவொளித்திரளாய்;
பரவி யெங்கணுமே-கதிர்கள்-பாடிக் களித்தனவே.

நின்ற மரத்திடையே-சிறிதோர்-நிழலினில் இருந்தேன்,
என்றும் கவிதையிலே-நிலையாம்-இன்பம் அறிந்து கொண்டேன்.

வாழ்க பராசக்தி!-நினையே-வாழ்த்திடுவோர் வாழ்வார்;
வாழ்க பராசக்தி!-இதையென்-வாக்கு மறவாதே
ADVERTISEMENTS
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்-அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;
வெந்து தணிந்தது காடு;-தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
தத்தரிகிட தத்ரிகிட தித்தோம்.