பல்வகைப் பாடல்கள்

2. சமூகம்

7. பெண் விடுலை
விடுத லைக்கு மகளிரெல் லோரும்
வேட்கை கொண்டனம்; வெல்லுவம் என்றே
திடம னத்தின் மதுக்கிண்ண மீது
சேர்ந்து நாம்பிர திக்கினை செய்வோம்.

உடைய வள்சக்தி ஆண்பெண் ணிரண்டும்
ஒருநி கர்செய் துரிமை சமைத்தாள்;
இடையி லேபட்ட கீழ்நிலை கண்டீர்,
இதற்கு நாமொருப் பட்டிருப் போமோ?

திறமை யால்இங்கு மேனிலை சேர்வோம்;
தீய பண்டை இகழ்ச்சிகள் தேய்ப்போம்;
குறைவி லாது முழுநிகர் நம்மைக்
கொள்வ ராண்க ளெனிலவ ரோடும்

சிறுமை தீரநந் தாய்ததிரு நாட்டைத்
திரும்ப வெல்வதில் சேர்ந்திங் குழைப்போம்;
அறவி ழுந்தது பண்டை வழக்கம்;
ஆணுக் குப்பெண் விலங்கெனும் அஃதே.

விடியும் நல்லொளி காணுதி நின்றே,
மேவு நாக ரிகம்புதி தொன்றே;
கொடியர் நம்மை அடிமைகள் என்றே
கொண்டு, தாம் முதல் என்றன ரன்றே?

அடியோ டநத் வழக்கத்தைக் கொன்றே,
அறிவு யாவும் பயிற்சியில் வென்றே
கடமை செய்விர்நந் தேசத்து வீரக்
காரி கைக்கணத் தீர்,துணி வுற்றே.
ADVERTISEMENTS
இரும்பைக் காய்ச்சி உருக்கிடு வீரே!
யந்தி ரங்கள் வகுத்திடு வீரே!
கரும்பைச் சாறு பிழிந்திடு வீரே
கடலில் மூழ்கிநன் முத்தெடுப் பீரே!
அரும்பும் வேர்வை உதிர்த்துப் புவிமேல்
ஆயி ரந்தொழில் செய்திடு வீரே!
பெரும்பு கழ்நுமக் கேயிசைக் கின்றேன்
பிரம தேவன் கலையிங்கு நீரே!

மண்ணெ டுத்துக் குடங்கள்செய் வீரே!
மரத்தை வெட்டி மனைசெய்கு வீரே!
உண்ணக் காய்கனி தந்திடு வீரே!
உழுது நன்செய்ப் பயிரிடு வீரே!
எண்ணெய் பால்நெய் கொணர்ந்திடு வீரே!
இழையை நூற்றுநல் லாடைசெய் வீரே!
விண்ணி னின்றெமை வானவர் காப்பார்!
மேவிப் பார்மிசைக் காப்பவர் நீரே!

பாட்டும் செய்யுளும் கோத்திடு வீரே!
பரத நாட்டியக் கூத்திடு வீரே!
காட்டும் வையப் பொருள் களின் உண்மை
கண்டு சாத்திரம் சேர்த்துட வீரே!
நாட்டி லேயறம் கூட்டிவைப் பீரே!
நாடும் இன்பங்கள் ஊட்டி வைப்பீரே!
தேட்ட மின்றி விழியெதிர் காணும்
தெய்வ மாக விளங்குவிர் நீரே!
மண்வெட்டிக் கூலிதின லாச்சே!-எங்கள்
வாள்வலியும் வேல்வலியும் போச்சே!
விண்முட்டிச் சென்றபுகர் போச்சே!இந்த
மேதினியில் கெட்டபெய ராச்சே!

நாணிலகு வில்லினொடு தூணி-நல்ல
நாதமிகு சங்கொலியும் பேணி,
பூணிலகு திண்கதையும் கொண்டு,-நாங்கள்
போர்செய்த காலமெல்லாம் பண்டு.

கன்னங் கரியவிருள் நேரம்-தில்
காற்றும் பெருமழையும் சேரும்;
சின்னக் கரியதுணி யாலே எங்கள்
தேகமெல்லாம் மூடிநரி போலே,

ஏழை யெளியவர்கள் வீட்டில்-இந்த
ஈன வயிறுபடும் பாட்டில்,
கோழை யெலிக ளென்னவே-பொருள்
கொண்டு வந்து... ... ...

முன்னாளில் ஐயரெல்லாம் வேதம் ஓதுவார்
மூன்றுமழை பெய்யுமடா மாதம்;
இந்நாளி லேபொய்மைப் பார்ப்பார்-இவர்
ஏதுசெய்தும் காசுபெறப் பார்ப்பார்!

பேராசைக் காரனடா பார்ப்பான்-ஆனால்
பெரியதுரை என்னிலுடல் வேர்ப்பான்;
யாரானா லும்கொடுமை... ... ...
... ... ... ... ... ... ...

பிள்ளைக்குப் பூணூலாம் என்பான்-நம்மைப்
பிச்சுப் பணங்கொடெனத் தின்பான்;
கொள்கைக் கேகென்.............
... ... ... ... ... ... ...

சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்-வெறுஞ்
சோற்றுக்கோ வந்ததிந்தப் பஞ்சம்?
... ... ... ... ... ... ...
... ... ... ... ... ... ...

நாயும் பிழைக்கும் இந்தப்-பிழைப்பு
நாளெல்லாம் மற்றி திலே உழைப்பு;
பாயும் கடிநாய்ப் போலீசுக்-காரப்
பார்ப்பானுக் குண்டிதிலே பீசு.

சோரந் தொழிலாக் கொள்வோமோ?-முந்தைச்
சூரர் பெயரை அழிப்போமோ?
வீர மறவர் நாமன்றோ?-இந்த
வீண்வாழ்க்கை வாழ்வதினி நன்றோ?
ADVERTISEMENTS
விளக்கி லேதிரி நன்கு சமைந்தது
மேவு வீர்இங்கு தீக்கொண்டு தோழரே!
களக்க முற்ற இருள்கடந் தேகுவார்
காலைச் சோதிக் கதிரவன் கோவிற்கே;

துளக்க முற்றவிண் மீனிடம் செல்லுவார்
தொகையில் சேர்ந்திட உம்மையும் கூவினார்;
களிப்பு மிஞ்சி ஒளியினைப் பண்டொரு
காலம் நீர் சென்று தேடிய தில்லையோ?

அன்று நுங்கள் கொடியினை முத்திட்டே
ஆசை யென்றவிண் மீன்ஒளிர் செய்ததே;
துன்று நள்ளிருள் மாலை மயக்கத்தால்,
சோம்பி நீரும் வழிநடை பிந்தினீர்;

நின்ற விந்தன நுங்கள் விளக்கெலாம்;
நீங்கள் கண்ட கனாக்களெல் லாம்இசை
குன்றித் தீக்குறி தோன்றும்;இராப்புட்கள்
கூவு மாறொத் திருந்தன காண்டிரோ?

இன்னு மிங்கிருள் கூடி யிருப்பினும்
ஏங்கு கின்ற நரகத் துயிர்கள்போல்
இன்னு மிங்கு வனத்திடை காற்றுத்தான்
ஓங்கும் ஓதை இருந்திடும் ஆயினும்
முன்னைக் காலத்தின் நின்றெழும் பேரொலி
முறைமு றைபல ஊழியின் ஊடுற்றே
பின்னை இங்குவந் தெய்திய பேரொலி
போல மந்திர வேதத்தின் பேரொலி.

“இருளை நீக்கி ஒளியினைக் காட்டுவாய்,
இறப்பை நீக்கி, அமிர்தத்தை ஊட்டுவாய்”
அருளும் இந்த மறையொலி வந்திங்கே
ஆழ்ந்த தூக்கத்தில் வீழ்ந்திருப் பீர்தமைத்
தெருளு றுத்தவும் நீர்எழு கில்லிரோ?
தீய நாச உறக்கத்தில் வீழ்ந்தநீர்
மருளை நீக்கி அறிதிர் அறிதிரோ?
வான்ஒ ளிக்கு மகாஅர்இ யாம்என்றே.
குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு;
நல்லகாலம் வருகுது;நல்லகாலம் வருகுது;
சாதிகள் சேருது;சண்டைகள் தொலையுது;
சொல்லடி,சொல்லடி,சக்தி,மாகாளீ!
வேதபுரந் தாருக்கு நல்ல குறி சொல்லு.

தரித்திரம் போகுது;செல்வம் வருகுது;
படிப்பு வளருது;பாவம் தொலையுது;
படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்
போவான்,போவான்,ஐயோவென்று போவான்.

வேத புரத்திலே வியாபாரம் பெருகுது;
தொழில் பெருகுது;தொழிலாளி வாழ்வான்;
சாத்திரம் வளருது; சூத்திரம் தெரியுது;
யந்திரம் பெருகுது; தந்திரம் வளருது;
மந்திர மெல்லாம் வளருது,வளருது,

குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு;
சொல்லடீ சொல்லடி,மலையாள பகவதீ!
அந்திரி,வீரி,சண்டிகை சூலி!
குடுகுடு குடுகுடு.

குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு;
சாமிமார்க் கெல்லாம் தைரியம் வளருது;
தொப்பை சுருங்குது;சுறுசுறுப்பு விளையுது;
எட்டு லச்சுமியும் ஏறி வளருது;
பயந் தொலையுது,பாவந் தொலையுது,
சாத்திரம் வளருது, சாதி குறையுது;
நேத்திரம் திறக்குது,நியாயம் தெரியுது;
பழைய பயித்தியம் படீலென்று தௌயுது;
வீரம் வருகுது,மேன்மை கிடைக்குது;
சொல்லடீ சக்தி,மலையாள பகவதீ!
தர்மம் பெருகுத,தர்மம் பெருகுது.
ADVERTISEMENTS
காலைப் பொழுதினிலே கண்விழித்து மேனிலை மேல்
மேலைச் சுடர்வானை நோக்கி நின்றோம் விண்ணகத்தே.

கீழ்த்திசையில் ஞாயிறுதான் கேடில் சுடர் விடுத்தான்;
பார்த்த வெளியெல்லாம் பகலொளியாய் மின்னற்றே.

தென்னை மரத்தின் கிளையிடையே தென்றல் போய்
மன்னப் பருந்தினுக்கு மாலை யிட்டுச் சென்றதுவே.

தென்னை மரக்கிளைமேற் சிந்தனையோ டோர் காகம்
னவன்னமுற வீற்றிருந்து வானைமுத்த மிட்டதுவே.

தென்னைப் பசுங் கீற்றைக் கொத்திச் சிறு காக்கை
மின்னுகின்ற தென்கடலை நோக்கி விழித்ததுவே.

வன்னச் சுடர் மிகுந்த வானகத்தே தென் திசையில்
கன்னங் கருங்காகக் கூட்டம்வரக் கண்ட தங்கே.

கூட்டத்தைக் கண்டஃது கும்பிட்டே தன்னருகோர்
பாட்டுக் குருவிதனைப் பார்த்து நகைத்ததுவே.

சின்னக் குருவி சிரிப்புடனே வந்தாங்கு
கன்னங் கருங்காக்கை கண்ணெதிரே யோர்கிளைமேல்

வீற்றிருந்தே“கிக் கிக்கீ;காக்காய் நீ விண்ணிடையே
போற்றியெதை நோக்குகிறாய்? கூட்டமங்குப் போவ தென்னே?:”

என்றவுட னே காக்கை-“என் தோழா! நீ கேளாய்,
மன்றுதனைக் கண்டே மனமகிழ்ந்து போற்றுகிறேன்.”

என்றுசொல்லிக் காக்கை இருக்கையிலே ஆங்கணோர்
மின்திகழும் பச்சைக் கிளிவந்து வீற்றிருந்தே.

“நட்புக் குருவியே ஞாயிற்’றிளவெயிலில்
கட்புலனுக் கெல்லாம் களியாகத் தோன்றுகையில்,

நும்மை மகிழ்ச்சிடன் நோக்கியிங்கு வந்திட்டேன்!
அம்மவோ!காகப் பெருங்கூட்ட மஃதென்னே?”

என்று வினவக் குருவிதான் இஃதுரைக்கும்;-
“நன்றுநீ கேட்டாய்,பசுங்கிளியே!நானுமிங்கு.

மற்றதனை யோர்ந்திடவே காக்கையிடம் வந்திட்டேன்;
கற்றறிந்த காக்காய்,கழறுக நீ!” என்றதுவே.

அப்போது காக்கை,“அருமையுள்ள தோழர்களே!
செப்புவேன் கேளீர்,சில நாளாக் காக்கையுள்ளே.

நேர்ந்த புதுமைகளை நீர்கேட்டறியீ ரோ?
சார்ந்துநின்ற கூட்டமங்கு சாலையின்மேற் கண்டீரே?

மற்றந்தக் கூட்டத்து மன்னவனைக் காணீரே?
கற்றறிந்த ஞானி கடவுளையே நேராவான்;

ஏழுநாள் முன்னே இறைமகுடந் தான் புனைந்தான்;
வாழியவன் எங்கள் வருத்தமெல்லாம் போக்கிவிட்டான்.

சோற்றுக்குப் பஞ்சமில்லை; போரில்லை;துன்பமில்லை;
போற்றற் குரியான் புதுமன்னன்,காணீரோ?”

என்றுரைத்துக் காக்கை இருக்கையிலே அன்னமொன்று
தென்திசையி னின்று சிரிப்புடனே வந்ததங்கே.

அன்னமந்தத் தென்னை யருகினிலோர் மாடமிசை
வன்னமுற வீற்றிருந்து,-“வாழ்க,துணைவரே!

காலை யிளவெயிலிற் காண்பதெலாம் இன்பமன்றோ?
சால நுமைக் கண்டுகளித்தேன் சருவிநீர்,

ஏதுரைகள் பேசி யிருக்கின்றீர்?” என்றிடவே
போதமுள்ள காக்கை புகன்றதந்தச் செய்தியெல்லாம்.

அன்னமிது கேட்டு மகிழ்ந்துரைக்கும்;-“ஆங் காணும்!
மன்னர் அறம்புரிந்தால்,வையமெல்லாம் மாண்புபெறும்.

ஒற்றுமையால் மேன்மையுண்டாம்; ஒன்றையொன்று துன்பிழைத்தல்
குற்றமென்று கண்டால் குறைவுண்டோ வாழ்வினுக்கே?”

என்று சொல்லி அன்னம் பறந்தாங்கே ஏகிற்றால்;
மன்று கலைந்து மறைந்தனவப் புட்களெல்லாம்.

காலைப் பொழுதினிலே கண்டிருந்தோம் நாங்களிதை;
ஞால மறிந்திடவே நாங்களிதைப் பாட்டிசைத் தோம்.