தெய்வப் பாடல்கள்

66. ஐயம் உண்டு

ராகம்-கமாஸ் (தாளம்-ஆதி)பல்லவி

ஜயமுண்டு பயமில்லை மனமே!-இந்த
ஜன்மத்திலே விடுதலையுண்டு நிலையுண்டு. (ஜய)

அனுபல்லவி

பயனுண்டு பக்தியினாலே-நெஞ்சிற்
பதிவுற்றற குலசக்தி சரணுண்டு பகையில்லை (ஜய)

சரணங்கள்

புயமுண்டு குன்றத்தைப் போலே-சக்தி
பொற்பாத முண்டு அதன் மேலே;
நியம மெல்லாம்சக்தி நினைவன்றிப் பிறிதில்லை;
நெறியுண்டு,குறியுண்டு,குலசக்தி வெறியுண்டு (ஜய)

மதியுண்டு செல்வங்கள் சேர்க்கும்-தெய்வ
வலியுண்டு தீமையைப் போக்கும்;
விதியுண்டு,தொழிலுக்கு விளைவுண்டு,குறைவில்லை;
விசனப்பொய்க் கடலுக்குக் குமரன்கைக் கணையுண்டு (ஜய)

அலைபட்ட கடலுக்கு மேலே-சக்தி
அருளென்னுந் தோணியி னாலே
தொலையெட்டிக் கரையுற்றுத் துயரற்று விடுபட்டுத்
துணிவுற்ற குலசக்தி சரணத்தில் முடிதொட்டு. (ஜய)
ADVERTISEMENTS
ராகம்-ஸ்ரீராகம் (தாளம்-ஆதி)கனவென்ன கனவே-என்தன்
கண்துயி லாதுநனவினிலே யுற்ற (கன)

கானகம் கண்டேன்-அடர்
கானகங் கண்டேன்-உச்சி
வானகத்தே வட்ட மதியொளி கண்டேன். (கன)

பொற்றிருக் குன்றம்-அங்கொர்
பொற்றிருக் குன்றம்-அதைச்
சுற்றி யிருக்கும் சுனைகளும் பொய்கையும் (கன)

புத்த தரிசனம்

குன்றத்தின் மீதே-அந்தக்
குன்றத்தின் மீதே-தனி
நின்றதோர் ஆல நெடுமரங் கண்டேன். (கன)

பொன்மரத் தின்கீழ்-அந்தப்
பொன்மரத் தின்கீழ்-வெறுஞ்
சின்மய மானதோர் தேவன் இருந்தனன். (கன)

புத்த பகவன்-எங்கள்
புத்த பகவன்-அவன்
சுத்தமெய்ஞ் ஞானச் சுடர்முகங் கண்டேன். (கன)

காந்தியைப் பார்த்தேன்-அவன்
காந்தியைப் பார்த்தேன்-உப
சாந்தியில் மூழ்கித் ததும்பிக் குளித்தனன். (கன)

ஈதுநல் விந்தை!-என்னை!
ஈதுநல் விந்தை!-புத்தன்
சோதி மறைந்திருள் துன்னிடக் கண்டனன். (கன)
பாய்ந்ததங் கொளியே;-பின்னும்
பாய்ந்ததங் கொளியே;-அருள்
தேய்ந்த தென்மேனி சிலிர்த்திடக் கண்டேன். (கன)

கிருஷ்ணார்ஜுன தரிசனம்

குன்றத்தின் மீதே-அந்தக்
குன்றத்தின் மீதே-தனி
நின்ற பொற்றேரும் பரிகளும் கண்டேன் (கன)

தேரின்முன் பாகன்-மணித்
தேரின்முன் பாகன்-அவன்
சீரினைக் கண்டு திகைத்துநின் றேனிந்தக் (கன)

ஓமென்ற மொழியும்-அவன்
ஓமென்ற மொழியும்-நீலக்
காமன்தன் உருவும்,அவ் வீமனதன் திறலும். (கன)

அருள் பொங்கும் விழியும்-தெய்வ
அருள் பொங்கும் விழியும்-காணில்
இருள் பொங்கு நெஞ்சினர் வெருள்
பொங்குந் திகிரியும். (கன)

கண்ணனைக் கண்டேன்-எங்கள்
கண்ணனைக் கண்டேன்-மணி
வண்ணனை ஞான மலையினைக் கண்டேன். (கன)

சேனைகள் தோன்றும்-வெள்ளச்
சேனைகள் தோன்றும்-பரி
யானையுந் தேரும் அளவில் தோன்றும். (கன)

கண்ணன்நற் றேரில்-நீலக்
கண்ணன்நற் றேரில்-மிக
எண்ணயர்ந் தானொர் இளைஞனைக் கண்டேன். (கன)

விசையன்கொ லிவனே!-விறல்
விசையன்கொ லிவனே!-நனி
இசையும் நன்கிசையும் இங்கிவனுக் கிந்நாமம் (கன)

வீரிய வடிவம்!-என்ன
வீரிய வடிவம்!-இந்த
ஆரியன் நெஞ்சம் அயர்ந்ததென் விந்தை! (கன)

பெற்றதன் பேறே-செவி
பெற்றதன் பேறே-அந்தக்
கொற்றவன் சொற்கள் செவியுறக் கொண்டேன். (கன)

“வெற்றியை வேண்டேன்;-ஜய;
“வெற்றியை வேண்டேன்;-உயிர்
அற்றிடு மேனும் அவர்தமைத் தீண்டேன். (கன)

சுற்றங் கொல்வேனோ?-என்தன்
சுற்றங் கொல்வேனோ?-கிளை
அற்றபின் செய்யும் அரசுமோர் அரசோ?” (கன)

மிஞ்சிய அருளால்-மித
மிஞ்சிய அருளால்-அந்த
வெஞ்சிலை வீரன் பலசொல் விரித்தான். (கன)

இம்மொழி கேட்டான்-கண்ணன்
இம்மொழி கேட்டான்-ஐயன்
செம்மலர் வதனத்திற் சிறுநகை பூத்தான். (கன)

வில்லினை யெடடா!-கையில்
வில்லினை யெடடா!-அந்தப்
புல்லியர் கூட்டத்தைப் பூழ்தி செய்திடடா! (வில்)

வாடி நில்லாதே;-மனம்
வாடி நில்லாதே;-வெறும்
பேடியர் ஞானப் பிதற்றல் சொல்லாதே. (வில்)

ஒன்றுள துண்மை-என்றும்
ஒன்றுள துண்மை-அதைக்
கொன்றி டொணாது குறைத்த லொண்ணாது. (வில்)

துன்பமு மில்லை-கொடுந்
துன்பமு மில்லை-அதில்
இன்பமு மில்லை பிறப்பிறப் பில்லை. (வில்)

படைகளுந் தீண்டா-அதைப்
படைகளுந் தீண்டா-அனல்
கடவு மொண்ணாது புனல்நனை யாது. (வில்)

செய்தலுன் கடனே-அறஞ்
செய்தலுன் கடனே-அதில்
எய்துறும் விளைவினில் எண்ணம் வைக்காதே. (வில்)
சுருதி யின்கண் முனிவரும் பின்னே
தூமொழிப்புல வோர் பலர் தாமும்
பெரிது நின்தன் பெருமையென் றேத்தும்
பெற்றி கண்டுனை வாழ்த்திட வந்தேன்;
பரிதி யே! பொருள் யாவிற்கும் முதலே!
பானுவே! பொன்செய் பேரொளித் திரளே!
கருதி நின்னை வணங்கிட வந்தேன்;
கதிர்கொள் வாண்முகம் காட்டுதி சற்றே.

வேதம் பாடிய சோதியைக் கண்டு
வேள்வி பாடல்கள் பாடுதற் குற்றேன்;
நாத வார்கட லின்னொலி யோடு
நற்ற மிழ்ச்சொல இசையையுஞ் சேர்ப்பேன்;
காத மாயிரம் ஓர்கணத் துள்ளே
கடுகி யோடும் கதிரினம் பாடி
ஆத வா! நினை வாழ்த்திட வந்தேன்.
அணிகொள் வாண்முகம் காட்டுதி சற்றே.
ADVERTISEMENTS
கடலின்மீது கதிர்களை வீசிக்
கடுகி வாள்மிசை ஏறுதி யையா!
படரும் வானொளி யின்பத்தைக் கண்டு
பாட்டுப்பாடி மகிழ்வன புட்கள்
உடல்ப ரந்த கடலுந் தனுள்ளே
ஒவ்வொர் நுண்துளி யும்விழி யாகச்
சுடரும் நின்தன் வடிவையுட் கொண்டே
சுருதி பாடிப் புகழ்கின்ற திங்கே.

என்த னுள்ளங் கடலினைப் போலே
எந்த நேரமும் நின்னடிக் கீழே
நின்று தன்னகத் தொவ்வொர் அணுவும்
நின்தன் ஜோதி நிறைந்தது வாகி
நன்று வாழ்ந்திடச் செய்குவை யையா!
ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!

காதல்கொண்டனை போலும் மண்மீதே,
கண்பிறழ் வின்றி நோக்குகின்றாயே
மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
மண்டினாள்,இதில் ஐயமொன்றில்லை;

சோதி கண்டு முகத்தில் இவட்கே
தோன்று கின்ற புதுநகை யென்னே!
ஆதித் தாய்தந்தை நீவிர் உமக்கே
ஆயி ரந்தரம் அஞ்சலி செய்வேன்.
திருவளர் வாழக்கை,கீர்த்தி,தீரம்,நல் லறிவு,வீரம்,
மருவுபல் கலையின் சோதி, வல்லமை யென்ப வெல்லாம்,
வருவது ஞானத் தாலே வையக முழுதும் எங்கள்
பெருமைதான் நிலவி நிற்கப் பிறந்தது ஞான பாநு.

கவலைகள்,சிறுமை,நோவு,கைதவம் வறுமைத் துன்பம்,
அவலமா மனைத்தைக் காட்டில் அவலமாம் புலைமை யச்சம்,
இவையெலாம் அறிவி லாமை என்பதோர் இருளிற் பேயாம்
நவமுறு ஞான பாநு நண்ணுக;தொலைக பேய்கள்.

அனைத்தையும் தேவர்க்காக்கி அறத்தொழில் செய்யும் மேலோர்
மனத்திலே சக்தி யாக வளர்வது நெருப்புத் தெய்வம்;
தினத்தொளி ஞானங் கண்டீர் இரண்டுமே சேர்ந்தால் வானோர்
இனத்திலே கூடி வாழ்வர் மனிதரென் றிசைக்கும் வேதம்.

பண்ணிய முயற்சியெல்லாம் பயனுற வோங்கும்,ஆங்கே
எண்ணிய எண்ண மெல்லாம் எளிதிலே வெற்றி யெய்தும்;
திண்ணிய கருத்தி னோடும் சிரித்திடு முகத்தினோடும்
நண்ணிடும் ஞான பாநு,அதனைநாம் நன்கு போற்றின்.
ADVERTISEMENTS
ஜய சோம, ஜய சோம, ஜய சோம தேவா!
ஜய ஜய!சரணம் நயமுடைய இந்திரனை நாயகத் திட்டாய்,
வயமிக்க அசரரின் மாயையைச் சுட்டாய்;
வியனுலகில் ஆநந்த விண்ணிலவு பெய்தாய்,
துயர்நீங்கி யென்னுளஞ் சுடர்கொளச் செய்தாய்;
மயல்கொண்ட காதலரை மண்மிசைக் காப்பாய்;
உயவேண்டி இருவருளம் ஒன்றுக் கோப்பாய்;
புயலிருண் டேகுமுறி யிருள்வீசி வரல்போற்
பொய்த்திரள் வருமதைப் புன்னகையில் மாய்ப்பாய் (ஜய)