முப்பெரும் பாடல்கள்

2. பாஞ்சாலி சபதம்

(முதற் பாகம்)
நொண்டிச் சிந்து ஓ மெனப் பெரியோர் கள்-என்றும்
ஓதுவ தாய் வினை மோதுவ தாய்,
தீமைகள் மாய்ப்பது வாய்,-துயர்
தேய்ப்பது வாய்,நலம் வாய்ப்பது வாய்,
நாமமும் உருவும் அற்றே-மனம்
நாடரி தாய்ப்புந்தி தேடரி தாய்,
ஆமெனும் பொருளனைத் தாய்,-வெறும்
அறிவுடன் ஆனந்த இயல்புடைத் தாய்;

நின்றிடும பிரமம்என் பார்;-அந்த
நிர்மலப் பொருளினை நினைத்திடு வேன்;
நன்றுசெய் தவம் யோகம்-சிவ
ஞானமும் பக்தியும் நணுகிட வே
வென்றி கொள்சிவ சக்தி-எனை
மேவுற வே,இருள் சாவுறவே,
இன்தமிழ் நூலிது தான்-புகழ்
ஏய்ந்தினி தாயென்றும் இலகிட வே.
ADVERTISEMENTS
வெள்ளைக் கமலத் திலே-அவள்
வீற்றிருப் பாள் புக ழேற்றிருப் பாள்,
கொள்ளைக் கனியிசை தான்-நன்கு
கொட்டுநல் யாழினைக் கொண்டிருப் பாள்,

கள்ளைக் கடலமு தை-நிகர்
கண்டதொர் பூந்தமிழ்க் கவிசொல வே
பிள்ளைப் பருவத் திலே-எனைப்
பேணவந் தாளருள் பூணவந் தாள்.

வேதத் திருவிழி யாள்-அதில்
மிக்கபல் லுரையெனுங் கருமையிட் டாள்,
சீதக் கதிர்மதி யே-நுதல்
சிந்தனையே குழ லென்றுடை யாள்,
வாதத் தருக்க மெனுஞ்-செவி
வாய்ந்தநற் றுணிவெனுந் தோடணிந் தாள்,
போதமென் நாசியி னாள்,-நலம்
பொங்குபல் சாத்திர வாயுடை யாள்.

கற்பனைத் தேனித ழாள்,-சுவைக்
காவிய மெனுமணிக் கொங்கையி னாள்,
சிற்ப முதற்கலை கள்-பல
தேமலர்க் கரமெனத் திகழ்ந்திருப் பாள்,
சொற்படு நயமறி வார்-அசை
தோய்ந்திடத் தொகுப்பதின் சுவையறி வார்
விற்பனத் தமிழ்ப்புல வோர்-அந்த
மேலவர் நாவெனும் மலர்ப்பதத் தாள்.

வாணியைச் சரண்புகுந் தேன்;-அருள்
வாக்களிப் பாளெனத் திடமிகுந் தேன்;
பேணிய பெருந்தவத் தாள்,-நிலம்
பெயரள வும்பெயர் பெயரா தாள்,
பூணியல் மார்பகத் தாள்-ஐவர்
பூவை;திரௌபதி புகழ்க் கதையை
மாணியல் தமிழ்ப்பாட் டால்-நான்
வகுத்திடக் கலைமகள் வாழ்த்துக வே!
அத்தின புரமுண் டாம்;-இவ்
அவனியி லேயதற் கிணையிலை யாம்;
பத்தியில் வீதிக ளாம்;வெள்ளைப்
பனிவரை போற்பல மாளிகை யாம்;
முத்தொளிர் மாடங்க ளாம்;-எங்கும்
மொய்த்தளி சூழ்மலர்ச் சோலைக ளாம்;
நத்தியல் வாவிக ளாம்;-அங்கு;
நாடு மிரதிநிகர் தேவிக ளாம்.

அந்தணர் வீதிக ளாம்;-மறை
யாதிக ளாம்கலைச் சோதிக ளாம்;
செந்தழல் வேள்விக ளாம்;-மிகச்
சீர்பெருங் சாத்திரக் கேள்விக ளாம்;
மந்திர கீதங்க ளாம்;-தர்க்க
வாதங்க ளாம்;தவ நீதங்க ளாம்;
சிந்தையி லறமுண் டாம்;-எனிற்
சேர்ந்திடுங் கலிசெயும் மறமுமுண் டாம்.

மெய்த்தவர் பலருண் டாம்;-வெறும்
வேடங்கள் பூண்டவர் பலருமுண் டாம்;
உய்த்திடு சிவஞா னம்-கனிந்
தோர்ந்திடும் மேலவர் பலருண் டாம்;
பொய்த்த விந்திரசா லம்-நிகர்
பூசையும் கிரியையும் புலைநடை யம்
கைத்திடு பொய்ம்மொழி யும்-கொண்டு
கண்மயக் காற்பிழைப் போர்பல ராம்.

மாலைகள் புரண்டசை யும்-பெரு
வரையெனத் திரண்டவன் தோளுடை யார்,
வேலையும் வாளினை யும்-நெடு
வில்லையுந் தண்டையும் விரும்பிடு வார்,

காலையும் மாலையி லும்-பகை
காய்ந்திடு தொழில்பல பழகிவெம் போர்
நூலையும் தேர்ச்சிகொள்வோர்,-கரி
நூறினைத் தனிநின்று நொறுக்கவல் லார்.

ஆரிய வேல்மற வர்,-புவி
யாளுமொர் கடுந்தொழில் இனிதுணர்ந் தோர்,
சீரியல் மதிமுகத் தார்-மணித்
தேனித ழமுதென நுகர்ந்திடு வார்,
வேரியங் கள்ளருந் தி-எங்கும்
வெம்மத யானைகள் எனத்திரி வார்
பாரினில் இந்திரர் போல்-வளர்
பார்த்திவர் வீதிகள் பாடுவ மே

நல்லிசை முழுக்கங்க ளாம்;-பல
நாட்டிய மாதர்தம் பழக்கங்க ளாம்;
தொல்லிசைக் காவியங் கள்-அருந்
தொழிலுணர் சிற்பர்செய் ஓவியங் கள்
கொல்லிசை வாரணங் கள்-கடுங்
குதிரைக ளொடுபெருந் தேர்களுண் டாம்;
மல்லிசை போர்களுண் டாம்;-திரள்
வாய்ந்திவை பார்த்திடு வோர்களுண் டாம்.

எண்ணரு கனிவகை யும்-இவை
இலகிநல் லொளிதரும் பணிவகை யும்,
தண்ணுறுஞ் சாந்தங்க ளும்-மலர்த்
தார்களும் மலர்விழிக் காந்தங்க ளும்
சுண்ணமும் நறும்புகையும்-சுரர்
துய்ப்பதற் குரியபல் பண்டங்க ளும்
உண்ணநற் கனிவகை யும்-களி
வுகையும் கேளியும் ஓங்கின வே,

சிவனுடை நண்பன்என் பார்,-வட
திசைக்கதி பதியள கேசன் என் பார்;
அவனுடைப் பெருஞ்செல் வம்-இவர்
ஆவணந் தொறும்புகுந் திருப்பது வாம்;
தவனுடை வணிகர்க ளும்-பல
தரனுடைத் தொழில்செயும் மாசன மும்
எவனுடைப் பயமு மிலா-தினிது
இருந்திடு தன்மையது எழில்நக ரே.
ADVERTISEMENTS
கன்னங் கரியது வாய்-அகல்
காட்சிய தாய்மிகு மாட்சிய தாய்,
துன்னற் கினியது வாய்-நல்ல
சுவைதரும் நீருடை யமுனை யெனும்
வன்னத் திருநதி யின்-பொன்
மருங்கிடைத் திகழ்ந்த அம் மணிநக ரில்,
மன்னவர் தங்கோ மான்-புகழ
வாளர வக்கொடி யுயர்த்துநின் றான்.

துரியோ தனப்பெய ரான்,-நெஞ்சத்
துணிவுடை யான்,முடி பணிவறி யான்.
கரியோ ராயிரத் தின்-வலி
காட்டிடு வோன்’என்றக் கவிஞர் பிரான்
பெரியோன் வேத முனி-அன்று
பேசிடும் படிதிகழ் தோள்வலி யோன்,
உரியோர் தாமெனி னும்-பகைக்
குரியோர் தமக்குவெந் தீயனை யான்.

தந்தைசொல் நெறிப்படி யே-இந்தத்
தடந்தோள் மன்னவன் அரசிருந் தான்,
மந்திர முணர்பெரி யோர்-பலர்
வாய்த்திருந் தார்அவன் சபைதனி லே,
அந்தமில் புகழுடை யான்.-அந்த
ஆரிய வீட்டுமன்,அறம்அறிந் தோன்,
வந்தனை பெருங்குர வோர்-பழ
மறைக்குல மறவர்கள் இருவரொடே.

மெய்ந்நெறி யுணர்விது ரன்-இனி
வேறுபல் அமைச்சரும விளங்கிநின் றார்;
பொய்ந்நெறித் தம்பிய ரும்-அந்தப்
புலைநடைச் சகுனியும் புறமிருந் தார்?
மைந்நெறி வான்கொடை யான்-உய்
மானமும் வீரமும் மதியுமு ளோன்,
உய்ந்நெறி யறியா தான்.இறைக்கு
உயிர்நிகர் கன்னனும் உடனிருந் தான்.
வேறுஎண்ணிலாத பொருளின் குவையும்
யாங்க ணுஞ்செலுஞ் சக்கர மாண்பும்
மண்ணி லார்க்கும் பெறலரி தாமோர்
வார்க டற்பெருஞ் சேனையு மாங்கே
விண்ணி லிந்திரன் துய்ப்பன போன்று
வேண்டு மின்பமும் பெற்றவ னேனும்
கண்ணி லாத்திரி தாட்டிரன் மைந்தன்
காய்ந்த நெஞ்சுடன் எண்ணுவ கேளீர்.

வேறு

‘பாண்டவர் முடியுயர்த்தே-இந்தப்
பார்மிசை யுலவிடு நாள்வரை தான்
ஆண்டதொர் அரசா மோ?-எனது
ஆண்மையும் புகழுமொர் பொருளா மோ?

காண்டகு வில்லுடை யோன்-அந்தக்
காளை யருச்சுனன் கண்களி லும
மாண்டகு திறல்வீ மன்-தட
மார்பிலும் எனதிகழ் வரைந்துள தே!

‘பாரத நாட்டி லுள்ள-முடிப்
பார்த்திவர் யார்க்குமொர் பதியென்றே
நாரதன் முதன்முனி வோர்-வந்து
நாட்டிடத் தருமன் அவ் வேள்விசெய் தான்;
சோரனவ் வெதுகலத் தான்-சொலும்
சூழ்ச்சியும் தம்பியர் தோள்வலியும்
வீரமி லாத்தரு மன்-தனை
வேந்தர் தம் மதலென விதித்தன வே.

‘ஆயிரம் முடிவேந் தர்-பதி
னாயிர மாயிரங் குறுநிலத் தார்
மாயிருந் திறைகொணர்ந் தே-அங்கு
வைத்ததொர் வரிசையை மறந்திட வோ?
தூயிழை யாடைக ளும்-மணித்
தொடையலும் பொன்னுமொர் தொகைப்படு மோ?
சேயிழை மடவா ரும்-பரித்
தேர்களுங் கொடுத்தவா சிறுதொகை யோ,

‘ஆணிப் பொற் கலசங்க ளும்-ரவி
யன்னநல் வத்தின் மகுடங்களும்
மாணிக்கக் குயிவல்க ளும்-பச்சை
மரகதத் திரளும்நன் முத்துக்க ளும்
பூணிட்ட திருமணி தாம்-பல
புதுப்புது வகைகளிற் பொலிவன வும்
காணிக்கை யாக்கொணர்ந் தார்;-அந்தக்
காட்சியை மறப்பதும் எளிதா மோ?

‘நால்வகைப் பசும்பொன் னும்-ஒரு
நாலா யிரவகைப் பணக்குவை யும்
வேல்வகை வில்வகை யும்-அம்பு
விதங்களும் தூணியும் வாள்வகை யும்
சூல்வகை தடிவகை யும்-பல
தொனிசெய்யும் பறைகளும் கொணர்ந்துவைத் தே

‘கிழவியர் தபசியர் போல்-பழங்
கிளிக்கதை படிப்பவன்,பொறுமையென்றும்
பழவினை முடிவென்றும்-சொலிப்
பதுங்கிநிற் போன் மறத் தன்மையி லான்,
வழவழத் தருமனுக்கோ-இந்த
மாநில மன்னவர் தலைமைதந் தார்!
முழவினைக் கொடிகொண் டான்-புவி
முழுதையுந் தனியே குடிகொண் டான்.

‘தம்பியர் தோள்வலி யால்-இவன்
சக்கர வர்த்தியென் றுயர்ந்தது வும்,
வெம்பிடு மதகலி யான்-புகழ்
வேள்விசெய் தந்நிலை முழக்கிய தும்,
அம்புவி மன்னரெ லாம்-இவன்
ஆணைதம் சிரத்தினில் அணிந்தவ ராய்
நம்பரும் பெருஞ்செல் வம்-இவன்
நலங்கிளர் சபையினில் மொழிந்தது வும்.

‘எப்படிப் பொறுத்திடு வேன்?-இவன்
இளமையின் வளமைகள் அறியே னோ?
குப்பை கொ லோமுத்தும்-அந்தக்
குரைகடல் நிலத்தவர் கொணர்ந்து பெய்தார்;

சிப்பியும் பவளங்க ளும்-ஒளி
திரண்டவெண் சங்கத்தின் குவியல்க ளும்
ஒப்பில்வை டூரிய மும்-கொடுத்து
ஒதுஞ்கி நின்றார் இவன் ஒருவனுக் கே.

‘மலைநா டுடையமன் னர்-பல
மான்கொணர்ந் தார் புதுத் தேன்கொணர்ந் தார்,
கொலைநால் வாய்கொணர்ந் தார்-மலைக்
குதிரையும் பன்றியும் கொணர்ந்துதந் தார்;
கலைமான் கொம்புக ளும்-பெருங்
களிறுடைத் தந்தமும் கவரிக ளும்
விலையார் தோல்வகை யும்-கொண்டு
மேலும்பொன் வைத்தங்கு வணங்கிநின் றார்,

செந்நிறத் தோல்,கருந் தோல்,-அந்தத்
திருவளர் கதலியின் தோலுட னே
வெந்நிறப் புலித்தோல் கள்,-பல
வேழங்கள் ஆடுகள் இவற்றுடைத் தோல்,
பன்னிற மயிருடை கள்,-விலை
பகரரும் பறவைகள் விலங்கினங் கள்,
பொன்னிறப் பாஞ்சாலி-மகிழ்
பூத்திடும் சந்தனம் அகில்வகை கள்.

‘ஏலம் கருப்பூ ரம்-நறும்
இலவங்கம் பாக்குநற் சாதி வகை,
கோலம் பெறக்கொணர்ந்தே-அவர்
கொட்டி நின்றார் கரம் கட்டிநின்றார்;
மேலுந் தலத்திலு ளார்-பல
வேந்தர் அப்பாண்டவர் விழைந்திட வே
ஓலந் தரக்கொணர்ந் தே-வைத்த
தொவ்வொன்றும் என்மனத் துறைந்தது வே.

‘மாலைகள் பொன்னும்முத் தும்-மணி
வகைகளிற் புனைந்தவும் கொணர்ந்துபெய் தார்;
சேலைகள் நூறுவன் னம்-பல
சித்திரத் தொழில்வகை சேர்ந்தன வாய்,
சாலவும் பொன்னிழைத் தே-தெய்வத்
தையலர் விழைவன பலர்கொணர்ந் தார்,
கோலநற் பட்டுக்க ளின்-வகை
கூறுவதோ?எண்ணில் ஏறுவ தோ

‘சுழல்களும் கடகங்க ளும்-மணிக்
கவசமும் மகுடமும் கணக்கில வாம்
நிழற்நிறப் பரிபல வும்-செந்
நிறத்தன பலவும்வெண் ணிறம்பல வும்
தழல்நிறம் மேக நிறம்-விண்ணில்
சாரும் இந்திர வில்லை நேரும் நிறம்
அழகிய கிளிவயிற் றின்-வண்ணம்
ஆர்ந்தன வாய்ப்பணி சேர்ந்தன வாய்.

‘காற்றெனச் செல்வன வாய்‘-இவை
கடிதுகைத் திடுந்திறம்மறவ ரொடே,
போற்றிய கையின ராய்ப்-பல
புரவலர் கொணர்ந்து,அவன் சபைபுகுந் தார்.
சீற்ற வன்போர் யானை-மன்னர்
சேர்த்தவை பலபல மந்தையுண் டாம்;
ஆற்றல் மிலேச்சமன் னர்-தொலை
அரபியா ஓட்டைகள் கொணர்ந்துதந் தார்.

‘தென்றிசைச் சாவக மரம்-பெருந்
தீவு தொட்டேவட திசையத னில்
நின்றிடும் புகழ்சீ னம்-வரை
நேர்ந்திடும் பலபல நாட்டின ரும்,

வெற்றிகொள் தருமனுக் கே,-அவன்
வேள்வியில் பெரும்புகழ் விளையும்வண் ணம்,
நன்றுபல் பொருள் கொணர்ந் தார்-புவி
நாயகன் யுதிட்டிரன் எனவுணர்ந் தார்.

‘ஆடுகள் சிலர்கொணர்ந் தார்;-பலர்
ஆயிர மாயிரம் பசுக்கொணர்ந் தார்;
மாடுகள் பூட்டின வாய்ப்-பல
வகைப்படு தானியம் சுமந்தன வாய்
ஈடுறு வண்டி கொண்டே-பலர்
எய்தினர்;கரும்புகள் பல கொணர்ந் தார்;
நாடுறு தயில வகை-நறு
நானத்தின் பொருள்பலர் கொணர்ந் தார்;

“நெய்க்குடம் கொண்டுவந் தார்-மறை
நியமங்கொள் பார்ப்பனர் மகத்தினுக்கே;
மொய்க்குமின் கள்வகை கள்-கொண்டு
மோதினர் அரசினம் மகிழ்வுற வே;
தைக்குநற் குப்பா யம்.-செம்பொற்
சால்வைகள்,போர்வைகள்,கம்பளங் கள்,
கைக்குமட் டினுந்தா னோ-அவை
காண்பவர் விழிகட்கும் அடங்குப வோ?

“தந்தத்தில் கட்டில்க ளும்,-நல்ல
தந்தத்தின் பல்லக்கும்,வாகன மும்,
தந்தத்தின் பிடி வாளும்-அந்தத்
தந்தத்திலே சிற்பத் தொழில்வகை யும்,
தந்தத்தி லாதன மும்-பின்னும்
தமனிய மணிகளில் இவையனைத் தும்
தந்தத்தை கணக்கிட வோ?-முழுத்
தரணியின் திருவும் இத் தருமனுக் கோ?”

வேறு

என்றிவ் வாறு பலபல எண்ணி
ஏழை யாகி இரங்குத லுற்றான்.
வன்றி றத்தொரு கல்லெனும் நெஞ்சன்,
வானம் வீழினும் அஞ்சுதல் இல்லான்,
குன்ற மொன்று குழைவுற் றிளகிக்
குழம்பு பட்டழி வெய்திடும் வண்ம்
கன்று தலத் துள்ளுறை வெம்மை
காய்ந்தெழுந்து வெளிப்படல் போல.

நெஞ்சத் துள்ளோர் பொறாமை யெனுந்தீ
நீள்வதால் உள்ளம் நெக்குரு கிப்போய்,
மஞ்சன் ஆண்மை மறந்திண்மை மானம்
வண்மை யாவும் மறந்தன னாகிப்
பஞ்சை யாமொரு பெண்மகள் போலும்
பாலர் போலும் பரிதவிப் பானாய்க்
கொஞ்ச நேரத்திற் பாதகத் தோடு
கூடி யேஉற வெய்திநின் றானால்.

யாது நேரினும் எவ்வகை யானும்
யாது போயினும் பாண்டவர் வாழ்வைத்
தீது செய்து மடித்திட எண்ணிச்
செய்கை யொன்றறி யான்திகைப் பெய்திச்
சூதும் பொய்யும் உருவெனக் கொண்ட
துட்ட மாமனத் தான்சர ணெய்தி,
‘ஏது செய்வம்’ எனச்சொல்லி நைந்தான்,
எண்ணத் துள்ளன யாவும் உரைத்தே.

மன்னர் மன்னன் யுதிட்டிரன் செய்த
மாம கத்தினில் வந்து பொழிந்த
சொன்னம் பூண்மணி முத்திவை கண்டும்,
தோற்றங் கண்டும் மதிப்பினைக் கண்டும்,

என்ன பட்டது தன்னுளம் என்றே
ஈன மாமன் அறிந்திடும் வண்ணம்
முன்னம் தான் நெஞ்சிற் கூறிய வெல்லாம்
மூடன் பின்னும் எடுத்து மொழிந்தான்.
ADVERTISEMENTS
வேறு‘உலகு தொடங்கிய நாள்முத லாகநம் சாதியில்-புகழ்
ஓங்கி நின்றாரித் தருமனைப்போலெவர்?மாமனே!
இலகு புகழ்மனு வாதி முதுவர்க்கும்,மாம னே!-பொருள்
ஏற்றமும் மாட்சியும் இப்படி யுண்டுகொல்?மாமனே?
கலைக ளுணர்ந்தநல் வேதியப் பாவலர் செய்தவாம்-பழங்
கற்பனைக் காவியம் பற்பல கற்றனைமாம னே!
பலகடல் நாட்டையும் இப்படி வென்றதை எங்கணும்-சொல்லப்

பார்த்ததுண்டோ?கதை கேட்டதுண்டோ?புகல் மாமனே!

‘எதனை யுலகில் மறப்பினும்,யானினி,மாம னே!-இவர்
யாகத்தை என்றும் மறந்திட லென்பதொன் றேது காண்?
விதமுறச் சொன்ன கொருட்குவை யும்பெரி திலைகாண்;அந்த
வேள்வியில் என்னை வெதுப்பின வேறு பலவுண் டே;
இதனை யெலாமவ் விழியற்ற தந்தையின் பாற்சென்றே சொல்லி,
இங்கிவர் மீதவ னும்பகை எய்திடச் செய்குவாய்
மிதமிகு மன்பவர் மீதுகொண்டானவன் கேட்கவே-அந்த
வேள்விகண் டென்னுயிர் புண்படுஞ் செய்தி விளம்பு வாய்.

‘கண்ணைப் பறிக்கும் அழகுடை யாரிள மங்கையர்-பல
காமரு பொன்மணிப் பூண்க ளணிந்தவர் தம்மை யே
மண்ணைப் புரக்கும் புரவலர் தாமந்த வேள்வியில்-கொண்டு
வாழ்த்தி யளித்தனர் பாண்டவர்க் கே,எங்கள் மாமனே!
எண்ணைப் பழிக்குந் தொகையுடை யாரிள மஞ்சரைப் பலர்
ஈந்தன் மன்ன ரிவர்தமக் குத்தொண் டியற்ற வே!
விண்ணைப் பிளக்குந் தொனியுடைச் சங்குகள் ஊதினார்;-தெய்வ

வேதியர் மந்திரத் தோடுபல் வாழ்த்துக்கள் ஓதினர்.
‘நாரதன் தானும் அவ்வேத வியாசனும் ஆங்ஙனே-பலர்
நானிங் குரைத்தற் கரிய பெருமை முனிவரும்,
மாரத வீரர்,அப் பாண்டவ வேள்விக்கு வந்ததும்,-வந்து
மாமறை யாசிகள் கூறிப் பெரும்புகழ் தந்த தும்,
வீரர்தம் போரின் அரியநற் சாத்திர வாதங்கள்-பல
விப்பிரர் தம்முள் விளைத்திட உண்மைகள் வீசவே,
சார மறிந்த யுதிட்டிரன் கேட்டு யிந்ததும்,-நல்ல
தங்க மழைபொழிந் தாங்கவ்க் கேமகிழ் தந்த தும்.

‘விப்பர ராதிய நால்வரு ணத்தவர் துய்ப்பவே-நல்
விருந்து செயலில் அளவற்ற பொன்செல விட்டதும்
இப்பிற விக்குள் இவையொத்த வேள்வி விருந்துகள்-புவி
எங்கணும் நான்கண்ட தில்லை’எனத்தொனி பட்டதும்,
தப்பின்றி யநேல் விருந்தினர் யாருக்குந் தகுதிகள்-கண்டு
தக்கசன் மானம் அளித்து வரிசைகள் இட்டதும்,
செப்புக நீயவ் விழியற்ற தந்தைக்கு;“நின்மகன்-இந்தச்
செல்வம் பெறாவிடில் செத்திடு வான்”என்றும் செப்புவாய்.

“அண்ணனை மைந்தன் அவனிக் குரியவன் யானன்றோ? அவர்
அடியவ ராகி யெமைப்பற்றி நிற்றல் விதியன் றோ?
பண்ணும் வேள்வியில் யார்க்கு முதன்மை அவர்தந்தார்? அந்தப்
பாண்ட வர்நமைப் புல்லென எண்ணுதல் பார்த்தை யோ?
கண்ண னுக்கு முதல்உப சாரங்கள் காட்டினார்;-சென்று
கண்ணி லாத்தந்தைக் கிச்செய லின்பொருள் காட்டுவாய்;
மண்ணில் வேந்தருள் கண்ணன் எவ்வாறு முதற்பட்டான்? என்றன்
மாமனே! அவன் நம்மில் உயர்ந்த வகைசொல் வாய்!

‘சந்தி ரன்குலத் தேபிறந் தோர்தந் தலைவன்யான்-என்று
சகமெ லாஞ்சொலும் வார்த்தைமெய் யோவெறுங் சாலமோ?
தந்திரத்தொழில் ஒன்றுண ரும்சிறு வேந்தனை-இவர்
தரணி மன்னருள் முற்பட வைத்திடல் சாலுமோ?
மூந்தி ரத்திலச் சேதியர் மன்னனை மாய்த்திட்டார்;-ஐய!
மாம கத்தில் அதிதியைக் கொல்ல மரபுண்டோ?
இந்திரத்துவம் பெற்றிவர் வாழும் நெறிநன்றே!-இதை
எண்ணி எண்ணி என் நெஞ்சு கொதிக்குது மாமனே!
சதிசெய் தார்க்குச் சதிசெயல் வேண்டும்என் மாமனே!-இவர்
தாமென் அன்பன் சராசந் தனுக்குமுன் எவ்வ கை
விதிசெய் தார்?அதை என்றும் உள்ளம் மறக்குமோ?-இந்த
மேதினி யோர்கள் மறந்து விட்டார்.இஃதோர்விந்தை யே?
திதிசெய் தாரைப் பணிகுவர் மானிடர்,மாமனே!-எந்த
நெறியி னாலது செய்யினும்,நாயென நீள்பு வி
துதிசெய் தேயடி நக்குதல் கண்டனை மாமனே!-வெறுஞ்
சொல்லுக் கேயற நூல்கள் உரைக்கும் துணிவெலாம்.

வேறு
“பொற்றடந் தேரொன்று வாலிகன்
கொண்டு விடுத்ததும்-அதில்
பொற்கொடி தியர் கேமன்
வந்து தொடுத்ததும்,
உற்றதோர் தம்பிக்குத் தென்னவன்
மாப்ணி தந்ததும்;-ஒளி
யோங்கிய மாலையும் மாகதன்
தான்கொண்டு வந்ததும்,
பற்றல ரஞ்சும் பெரும்புக
ழேக லவியனே -செம்பொற்
பாதுகை கொண்டு யுதிட்டிரன்
தாளினில் ஆர்த்தும்,
முற்றிடு மஞ்சனத் திற்கப் பல
பலதீர்த்தங்கள்-மிகு
மொய்ம்புடை யான் அவ் அவந்தியர்
மன்னவன் சேர்த்ததும்.

“மஞ்சன நீர்தவ வேத
வியாசன் பொழிந்ததும்,-பல
வைதிகர் கூடிநன் மந்திர
வாழ்த்து மொழிந்ததும்,
குஞ்சரச் சாத்தகி வெண்குடை
தாங்கிட,வீமனும்-இளங்
கொற்றவ னும்பொற் சிவிறிகள்
வீச,இரட்டையர்

அஞ்சுவர் போலங்கு நின்று
கவரி இரட்டவே-கடல்
ஆளு மொருவன் கொடுத்ததொர்
தெய்விகச் சங்கினில்
வஞ்சகன் கண்ணன் புனிதமுறுங்
கங்கை நீர்க்கொண்டு-திரு
மஞ்சன மாட்டும்அப் போதில்
எவரும் மகிழ்ந்ததும்

“மூச்சை யடைத்த தடா!சபை
தன்னில் விழுந்ததுநான்-அங்கு
மூர்ச்சை யடைந்தது கண்டனையே!
என்றன் மாமனே!
ஏச்சையும் அங்கவர் கொண்ட
நகைப்பையும் எண்ணுவாய்;-அந்த
ஏந்திழை யாளும் எனைச்சிரித்
தாளிதை எண்ணுவாய்;

பேச்சை வளர்த்துப் பயனொன்று
மில்லை,என் மாமனே!-அவர்
பேற்றை அழிக்க உபாயஞ்சொல்வாய்,
என்றன் மாமனே!
தீச்செயல் நற்செயல் ஏதெனினும்
ஒன்று செய்து,நாம்-அவர்
செல்வங் கவர்ந்த வரைவிட
வேண்டும் தெருவிலே.’