ஞானப் பாடல்கள்

100. பகைவனுக்கருள்வாய்

பகைவனுக் கருள்வாய்-நன்னெஞ்சே!
பகைவனுக் கருள்வாய்!

புகை நடுவினில் தீயிருப்பதைப்
பூமியிற் கண்டோமே-நன்னெஞ்சே!
பூமியிற் கண்டோமே.
பகைநடுவினில் அன்புரு வானநம்
பரமன் வாழ்கின்றான்-நன்னெஞ்சே!
பரமன் வாழ்கின்றான். (பகைவ)

சிப்பியிலே நல்ல முத்து விளைந்திடுஞ்
செய்தியறியாயோ?-நன்னெஞ்சே!
குப்பையிலேமலர் கொஞ்சுங் குரக்கத்திக்
கொடி வளராதோ?-நன்னெஞ்சே! (பகைவ)

உள்ள நிறைவிலோர் கள்ளம் புகுந்திடில்
உள்ளம் நிறைவாமோ?-நன்னெஞ்சே
தெள்ளிய தேனிலோர் சிறிது நஞ்சையும்
சேர்த்தபின் தேனாமோ?-நன்னெஞ்சே! (பகைவ)

வாழ்வை நினைத்தபின் தாழ்வை நினைப்பது
வாழ்வுக்கு நேராமோ?-நன்னெஞ்சே!
தாழ்வு பிறர்க்கெண்ணத் தானழிவா னென்ற
சாதிரங் கேளாயோ?-நன்னெஞ்சே! (பகைவ)

போருக்கு வந்தங் கெதிர்த்த கவுரவர்
போலவந் தானுமவன்-நன்னெஞ்சே!
நேருக் கருச்சுனன் தேரிற் கசைகொண்டு
நின்றதுங் கண்ணனன்றோ?-நன்னெஞ்சே! (பகைவ)

தின்ன வரும்புலி தன்னையும அன்பொடு
சிந்தையிற் போற்றிடுவாய்-நன்னெஞ்சே!
அன்னை பராசக்தி யவ்வுரு வாயினள்
அவளைக் கும்பிடுவாய்-நன்னெஞ்சே! (பகைவ)
ADVERTISEMENTS
எல்லா மாகிக் கலந்து நிறைந்தபின்
ஏழைமை யுண்டோடா?-மனமே!
பொல்லாப் புழுவினிக் கொல்ல நினைத்தபின்
புத்தி மயக்க முண்டோ?

உள்ள தெலாமோர் உயிரென்று தேர்ந்தபின்
உள்ளங் குலைவ துண்டோ?-மனமே!
வெள்ள மெனப்பொழி தண்ணரு ளாழ்ந்தபின்
வேதனை யுண்டோடா?

சித்தி னியல்பு மதன்பெருஞ் சக்தியின்
செய்கையுந் தேர்ந்துவிட்டால்,-மனமே!
எத்தனை கோடி இடர்வந்து சூழினும்
எண்ணஞ் சிறிது முண்டோ?

செய்க செயல்கள் சிவத்திடை நின்றெனத்
தே னுரைத் தனனே;-மனமே!
பொய்கரு தாம லதன்வழி நிற்பவர்
பூதல மஞ்சுவரோ?

ஆன்ம வொளிக்கடல் மூழ்கித் திளைப்பவர்க
கச்ச முண்டோடா-மனமே?
தேன்மடை யிங்கு திறந்தது கண்டு
தேக்கித் திரிவமடா!
கற்பனை யூரென்ற நகருண்டாம்-அங்கு
கந்தர்வா விளையாடு வராம்
சொப்பன நாடென்ற சுடர்நாடு-அங்கு
சூழ்நதவர் யாவர்க்கும் பேருவகை.

திருமனை யிதுகொள்ளைப் போர்க்கப்பல்-இது
ஸ்பானியக் கடலில் யாத்திரை போம்
வெருவுற மாய்வார் பலார்கடலில்-நாம்
மீளவும் நம்மூர் திரும்புமுன்னே.

அந்நகர் தனிலோர் இளவரசன்-நம்மை
அன்பொடு கண்டுரை செய்திடுவான்;
மன்னவன் முத்தமிட் டெழுப்பிடவே-அவன்
மனைவியும் எழுந்தங்கு வந்திடுவாள்.

எக்கால மும்பெரு மகிழ்ச்சி-யங்கே
எவ்வகைக் கவலையும் போரு மில்லை,
பக்குவத் தயிலை நீர்குடிபோம்-அங்குப்
பதுமைகைக் கிண்ணத்தில் அளித்திடவே.

இன்னமு திற்கது நேராகும்-நம்மை
யோவான் விடுவிக்க வருமளவும்,
நன்னக ரதனிடை வாழ்ந்திடுவோம்-நம்னை
நலித்திடும்பே யங்கு வாராதே.

குழந்தைகள் வாழ்ந்திடும் பட்டணங்காண்-அங்கு
கோல்பந்து யாவிற்கு முயிருண்டாம்
அழகிய பொமுடி யரசிகளாம்-அன்றி
அரசிளங் குமரிகள் பொம்மையெலாம்.

செந்தோ லசுரனைக் கொன்றிடவே-அங்கு
சிறுவிற கெல்லாம் சுடர்மணிவாள்.
சந்தோஷத்துடன் செங்கலையும்-அட்டைத்
தாளையுங் கொண்டங்கு மனைகட்டுவோம்.

கள்ளரவ் வீட்டினுட் புகுந்திடவே-வழி
காண்ப திலாவகை செய்திடுவோம்-ஓ
பிள்ளைப் பிராயத்தை இழந்தீரே!-நீர்
பின்னுமந் நிலைபெற வேண்டீரோ?

குழந்தைக ளாட்டத்தின் கனவையெல்லாம்-அந்தக்
கோலநன் னாட்டிடைக் காண்பீரே!
இழந்தநல் லின்பங்கள் மீட்குறலாம்-நீர்
ஏகுதிர் கற்பனை நகரினுக்கே.
ADVERTISEMENTS
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளொரெலாம் எதிர்த்து நின்ற போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
துச்சமாக எண்ணி நம்மைத் தூறு செய்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சை கொண்ட பொருளெலாம் இழந்த விட்ட போதிலும்,

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.
கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள் வீசு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.
நச்சை வாயி லேகொணர்ந்து நண்ப ரூட்டு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.
பச்சையூ னியைந்த வேற் படைகள் வந்த போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.
ஜய பேரிகை கொட்டடா!-கொட்டடா!
ஜய பேரிகை கொட்டடா!

பயமெனும பேய்தனை யடித்தோம்-பொய்மைக்
பாம்மைப் பிளந்துயிரைக் குடித்தோம்;
வியனுல கனைத்தையும் அமுதென நுகரும்
வேத வாழ்வினைக் கைப்பிடித்தோம் (ஜய பேரிகை)

இரவியி னொளி யிடைக் குளித்தோம்-ஒளி
இன்னமு தினைக்கண்டு களித்தோம்;
கரவினில் வந்துயிர்க் குலத்தினை யழிக்கும்
காலன் நடுநடுங்க விழித்தோம் (ஜய பேரிகை)

காக்கை,குருவி எங்கள் ஜாதி-நீள்
கடலும்,மலையும் எங்கள் கூட்டம்;
நோக்கும் திசையெலாம் நாமன்றி வேறில்லை
நோக்க நோக்கக்களி யாட்டம். (ஜய பேரிகை)
ADVERTISEMENTS
பல்லவி விட்டு விடுதலை யாகிநிற் பாயிந்தச்
சிட்டு குருவியைப் போலே சரணங்கள்

எட்டு திசையும் பறந்து திரிகுவை
ஏறியக் காற்றில் விரைவொடு நீந்துவை
மட்டுப் படாதெங்கும் கொட்டிக் கிடக்குமிவ்
வானொளி யென்னும் மதுவின் சுவையுண்டு (விட்டு)

பெட்டையி னோடின்பம் பேசிக் களிப்புற்று
பீடையி லாததோர் கூடு கட்டிக்கொண்டு
முட்டைதருங் குஞ்சைக் காத்து மகிழ்வெய்தி
முந்த வுணவு கொடுத்தன்பு செய்திங்கு (விட்டு)

முற்றத்தி லேயுங் கழனி வெளியிலும்
முன்கண்ட தானியம் தன்னைக் கொணர்ந்துண்டு
மற்றப் பொழுது கதைசொல்லித் தூங்கிப்பின்
வைகறை யாகுமுன் பாடி விழிப்புற்று. (விட்டு)